இலங்கை கிரிக்கெட் தேர்தலில் அர்ஜுன களமிறங்க திலங்க விலகல்

953

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்காக ஜயந்த தர்மதாச, மொஹான் டி சில்வா, கே மதிவானன் மற்றும் சம்மி சில்வா உள்ளிட்ட நால்வர் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

எனினும், இம்முறை இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் தலைவரான திலங்க சுமதிபால அரசியல் ரீதியான காரணங்களுக்காக தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுமென தேர்தல் குழு அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் …

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் 2018 முதல் 2021 வரையான 4 வருட காலப்பகுதிக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தலின் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்வது நேற்று (17) மாலை 4.00 மணியுடன் நிறைவுக்கு வந்தது.

இதில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான திலங்க சுமதிபால, அரசியல் ரீதியான் காரணங்களுக்காக தலைவர் பதவிக்கான தேர்தலில் இருந்து விலகியிருந்ததுடன், அவரது தரப்பில் முன்னாள் தலைவர்களுள் ஒருவரான மொஹான் டி சில்வா மற்றும் முன்னாள் பொருளாளரான சம்மி சில்வா ஆகியோர் தலைவர் பதவிக்காக வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதேநேரம், ரணதுங்க தரப்பில் முன்னாள் தலைவர்களில் ஒருவரான ஜயந்த தர்மதாச மற்றும் முன்னாள் உப தலைவரான கே. மதிவாணன் ஆகியோர் இப்பதவிக்கு போட்டியிடவுள்ளனர்.

இதுஇவ்வாறிருக்க, இரண்டு உப தலைவர் பதவிக்கு 6 பேர் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 1996 உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த இலங்கை அணியின் முன்னாள் தலைவரான அர்ஜுன ரணதுங்க மற்றும் அதே உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்காக விளையாடிய பிரமோத்ய விக்ரமசிங்க ஆகியோர் இப்பதவிக்காக போட்டியிடுகின்ற முக்கிய வேட்பாளர்களாவர்.

இலங்கை அணியின் புதிய தலைவராக லசித் மாலிங்க

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ….

அத்துடன், செயலாளர் பதவிக்கு நால்வர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். ரணதுங்க தரப்பில் இருந்து முன்னாள் செயலாளரான நிஷாந்த ரணதுங்கவும், திலங்க சுமதிபால தரப்பிலிருந்து பந்துல திசாநாயக்க, சம்மி சில்வா மற்றும் மொஹான் டி சில்வா ஆகியோர் இப்பதவிக்கு போட்டியிடவுள்ளனர்.

பொருளாளர் பதவிக்கு ரணதுங்க தரப்பிலிருந்து ரிஸ்மன் நாரங்கொடவும், நளீன் விக்ரமசிங்கவும் போட்டியிடவுள்ளதுடன், சுமதிபால தரப்பிலிருந்து லசந்த விக்ரமசிங்க, ரவீன் விக்ரமரத்ன மற்றும் சம்மி சில்வா ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

இதேவேளை, இம்முறை தேர்தலில் சுமதிபால தரப்பில் இடம்பெற்றுள்ள முன்னாள் பொருளாளரான சம்மி சில்வா, 4 பதவிகளுக்கும், முன்னாள் உப தலைவரான மொஹான் டி சில்வா 3 பதவிகளுக்கும் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதனிடையே, வேட்பு மனுக்கள் தொடர்பிலான ஆட்சேபனைகள் எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். அதன்பிறகு ஜனவரி முதலாம், 2ஆம் திகதிகளில் ஆட்சேபனை குறித்த விசாரணைகள் இடம்பெறும்.

இதன்படி, உரிய விசாரணைகளின் பிறகு தேர்தலில் போட்டியிட தகுதியுடைய நபர்களது பெயர், விபரங்கள் உள்ளிட்ட தகவல்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 21ஆம் திகதி பகிரங்கப்படுத்தப்படும்.

இலங்கை கிரிக்கெட் தேர்தலை நடத்துவதில் தொடரும் சிக்கல்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் …..

பின்னர் தேர்தலில் போட்டியிட தகுதிபெற்றவர்கள் அறிவிக்கப்பட்டு, பெப்ரவரி 7ஆம் திகதி காலை 10.30 மணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் நடத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் தேர்தல் செயற்குழு அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை நடத்துவது தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட மூவரடங்கிய தேர்தல் குழுவினால் இந்த வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு திலங்க சுமதிபால தரப்பினரும், ரணதுங்க தரப்பினரும் ஊடகவியலாளர் சந்திப்புக்களை ஏற்பாடு செய்து தமது தேர்தல் நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிட்டிருந்தனர்.

எஸ்.எஸ்.சி கிரிக்கெட் கழக கேட்போர் கூடத்தில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால கருத்து வெளியிடுகையில், ”நாங்கள் ஏற்கனவே தயாரித்த ஐந்தாண்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த எனது தரப்பினரின் வெற்றி முக்கியமானது என கருதுகிறேன். நாங்கள் நிர்வாகத்தில் இருக்கும்போது இலங்கை கிரிக்கெட்டுக்காக பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். நாங்கள் வரும்போது கிரிக்கெட் நிறுவனம் 2 மில்லியன் ரூபா கடனை செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், அவற்றையெல்லாம் கடந்த மார்ச் மாதமே நாங்கள் செலுத்தி இன்னும் 2 பில்லியன்களை மிச்சப்படுத்தினோம். இன்று அந்தப் பணம் இருக்கின்றதா? இங்கிலாந்து தொடருக்காக ஒன்றும் செய்யவில்லை. நாங்கள் ஏற்பாடு செய்திருந்த ஸ்ரீலங்கன் பிரீமியர் லீக் டி-20 தொடர் இடைநிறுத்தப்பட்டது. ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைமையகத்தை நாங்கள் கொழும்புக்கு கொண்டு வந்தோம். அது தற்போது பிரிதொரு நாட்டிற்கு சென்றுவிட்டது. இவ்வாறான பாரிய அழிவுகள் நாங்கள் நிர்வாகத்தில் இருந்து சென்றபிறகுதான் ஏற்பட்டது. எனினும், இம்முறை தேர்தலில் எனது தரப்பினர் மீண்டும் போட்டியிட்டு அதில் வெற்றிபெற்று இவற்றையெல்லாம் சரி செய்வார்கள் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.

இலங்கை அணியின் புதிய தலைவராக லசித் மாலிங்க

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ……

இதேவேளை, இம்முறை தேர்தலில் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகின்ற நிஷாந்த ரணதுங்க கருத்து வெளியிடுகையில், ”கிரிக்கெட்டை விரும்புகின்ற பலரது வேண்டுகோளுக்கு இணங்க நான் இம்முறை தேர்தலில் போட்டியிட தீர்மானித்தேன். இலங்கை கிரிக்கெட் நிர்வாக ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளது. இலங்கை கிரிக்கெட்டில் திருட்டும், மோசடியும் தலைவிரித்தாடுகின்றன. .சி.சியினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு உள்ளே ஊழல் தடுப்புப் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே இலங்கை கிரிக்கெட் பாதுகாக்கும் போராட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். எமது தரப்பில் இருப்பது கிரிக்கெட்டை விரும்புகின்ற மிகவும் பரிசுத்தமானவர்கள். எமது எதிர் தரப்பில் போட்டியிடுகின்ற அனைவரும் பழைய முகங்கள். எனவே எமது வெற்றி உறுதியானது” என அவர் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தல் வேட்பு மனுக்கள்

தலைவர் பதவி மொஹான் டி சில்வா, ஜயந்த தர்மதாச, கே. மதிவாணன், சம்மி சில்வா

உப தலைவர் பதவி சம்மி சில்வா, ரவீன் விக்ரமசிங்க, கே. மதிவாணன், அர்ஜுன ரணதுங்க, பிரமோத்ய விக்ரமசிங்க, மொஹான் டி சில்வா

செயலாளர் பதவி பந்துல திசாநாயக்க, நிஷாந்த ரணதுங்க, சம்மி சில்வா, மொஹான் டி சில்வா

உப செயலாளர் பதவி கிரிஷாந்த கபுவத்த, பந்துல திசாநாயக்க, ரவீன் விக்ரமரத்ன, கிஹான் வீரசிங்க, ஹிரந்த பெரேரா

பொருளாளர் பதவி லசந்த விக்ரமசிங்க, ரவீன் விக்ரமரத்ன, ரிஸ்மன் நாரங்கொட, நளீன் விக்ரமசிங்க, சம்மி சில்வா

உப பொருளாளர் பதவி லலித் ரம்புக்வெல்ல, நளீன் விக்ரமசிங்க, சன்ஜய சேதர செனரத்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<