நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தமது சுற்றுப் பயணத்தில் முதல் கட்டமாக அந்நாட்டு அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது.
நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2018 ஆம் ஆண்டிற்கு பிரியாவிடை தரும் விதமாக உள்ள இந்த டெஸ்ட் தொடர் நாளை (15) வெலிங்டன் நகரில் நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகின்றது.
போட்டி விபரம்
இடம் – பேசின் ரிசவ் மைதானம், வெலிங்டன்.
திகதி – டிசம்பர் 15 (சனிக்கிழமை) தொடக்கம் 19 (புதன்கிழமை) வரை
நேரம் – காலை 11 மணி (இலங்கை நேரப்படி அதிகாலை 3 மணி)
நியூசிலாந்து அணியுடன் இலங்கையின் கடந்தகாலப் போட்டிகள் எப்படி இருந்தன?
இலங்கை அணி
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டில் கிரிக்கெட் விளையாட்டின் நீண்ட வடிவமான டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி சிறப்பாகவே செயற்பட்டது எனலாம்.
இந்த ஆண்டில் பங்களாதேஷ், மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகளுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் அசத்தலான ஆட்டத்தை காண்பித்த இலங்கை அணி தொடர்ந்து உலகின் மிகவும் பலம் வாய்ந்த கிரிக்கெட் அணிகளில் ஒன்றான தென்னாபிரிக்காவை சொந்த மண்ணில் வைத்து நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வைட் வொஷ் செய்து மீண்டும் அசத்தியது.
இந்த பதிவுகளால் இலங்கை அணிக்கு கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது இந்த ஆண்டின் டெஸ்ட் முடிவுகள் ஆறுதல் தந்த நிலையில் இங்கிலாந்து அணி இலங்கை அணியை அதனது சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3-0 என வைட் வொஷ் செய்தது.
இந்த டெஸ்ட் தொடர் தோல்வி இலங்கை அணியினர் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் பிரகாசிப்பதற்கு செய்ய வேண்டிய விடயங்கள் எவை என்பதை தெளிவாகவே காட்டியிருக்கின்றது. இலங்கை அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கற்றுக்கொண்ட பாடங்களை நல்ல முறையில் செயற்படுத்தினால் நாளை (15) ஆரம்பமாகவுள்ள போட்டியோடு தொடரிலும் வெற்றி பெற முடியும்.
இது ஒருபுறமிருக்க தமது கடைசி டெஸ்ட் தொடரில் இலங்கை அணியினர் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களிலேயே ஆடியிருந்தனர். ஆனால், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களையே கொண்டிருப்பதால் வேறு விதமான சவால் ஒன்றினையே இலங்கை அணியினர் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் எதிர்கொள்ளவுள்ளனர்.
அதே நேரம் இலங்கை அணி நியூசிலாந்து மண்ணில் இறுதியாக 2006 ஆம் ஆண்டிலேயே டெஸ்ட் போட்டி ஒன்றில் வெற்றி பெற்றிருந்தது. எனவே, நியூசிலாந்தில் கடந்த 12 ஆண்டுகளாக எந்தவித டெஸ்ட் வெற்றிகளையும் பெறாத இலங்கை அணி இதனையும் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு நாளைய டெஸ்ட் போட்டியில் ஜொலிக்க முயற்சி செய்ய வேண்டும்.
இந்த டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாமை எடுத்து நோக்கும் போது அதில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் உபாதைக்கு ஆளாகிய தினேஷ் சந்திமால் மீண்டிருக்கின்றார். இதேநேரம் நீண்ட காலத்திற்குப் பின்னர் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களான சதீர சமரவிக்ரம, லஹிரு திரிமான்ன ஆகியோருக்கும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
அத்துடன் நியூசிலாந்து ஆடுகளங்களின் தன்மை அறிந்து வேகப்பந்து வீச்சாளர்களான நுவன் பிரதீப், லஹிரு குமார ஆகியோரும் இலங்கை டெஸ்ட் குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதே நேரம் அண்மையில் தனது ஓய்வை அறிவித்த சுழல் வீரர் ரங்கன ஹேரத், முறையற்ற விதத்தில் பந்துவீசுவதாக குற்றம் சுமத்தப்பட்டு சர்வதேச போட்டிகளில் ஆட தடைவிதிக்கப்பட்டிருக்கும் இளம் சுழல் வீரர் அகில தனன்ஞய போன்றோர் இல்லாதது இலங்கை அணிக்கு பாரிய இழப்பாகும்.
எதிர்பார்ப்பு வீரர் – அஞ்செலோ மெதிவ்ஸ்
தன்னுடைய இறுதி 7 டெஸ்ட் இன்னிங்சுகளிலும் 4 அரைச்சதங்களை பெற்ற முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் இலங்கை அணி இத்தொடரில் சாதிக்கும் என எதிர்பார்க்கும் முக்கிய வீரராக இருக்கின்றார்.
மெதிவ்ஸ் நியூசிலாந்து பதினொருவர் அணியுடன் இத்தொடருக்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் ஏனைய இலங்கை வீரர்கள் யாரும் சோபிக்காத போது 128 ஓட்டங்களை தனியொருவராக பெற்றது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் எதிர்பார்ப்பு குழாம் (நாளைய போட்டிக்கான) – தனுஷ்க குணத்திலக்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), அஞ்செலோ மெதிவ்ஸ், ரொஷேன் சில்வா, சுரங்க லக்மால், நுவன் பிரதீப், கசுன் ராஜித
நியூசிலாந்து அணி
இலங்கை – நியூசிலாந்து அணிகளின் இறுதி நான்கு டெஸ்ட் மோதல்களும் நியூசிலாந்து மண்ணிலேயே இடம்பெற்றிருக்கின்றன. இந்த நான்கு போட்டிகளிலும் மிகவும் அபாரமான வெற்றியை பதிவு செய்துள்ள நியூசிலாந்து அணி மீண்டுமொருமுறை இலங்கை அணிக்கு சவால் தர தயாராகியிருக்கின்றது.
தமது இறுதி டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தான் அணியினை அதன் இரண்டாவது தாயகமான ஐக்கிய அரபு இராச்சியத்தில் வைத்து 2-1 என தோற்கடித்த நியூசிலாந்து அணி, இந்த ஆண்டில் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மாத்திரமே தோல்வியடைந்திருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதேவேளை இலங்கையை கடந்த டெஸ்ட் தொடரில் தோற்கடித்த இங்கிலாந்து அணியினையும், நியூசிலாந்து அணி இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தமது மண்ணில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இவை அனைத்தையும் வைத்து பார்க்கும் போது இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியின் ஆதிக்கம் இலங்கையை விட சற்று அதிகமாகவே இருக்கும் என்பது தெளிவாகின்றது.
இந்த டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியை கவனிக்கும் போது ஒரேயொரு சுழல் வீரருக்கு (அஜாஸ் பட்டேல்) மாத்திரமே வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் அறிமுக ஆரம்ப துடுப்பாட்ட வீரரான வில் யங் நியூசிலாந்து குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளார். வில் யங் அண்மையில் நடைபெற்று முடிந்த இந்தியா A அணி, பாகிஸ்தான் A அணி ஆகியவற்றுக்கு எதிரான முதல் தரப் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணிக்கு புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர்
இதேநேரம் டிம் செளத்தி, ட்ரென்ட் போல்ட் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் நாளைய போட்டியோடு சேர்த்து இந்த டெஸ்ட் தொடர் முழுதும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சுத்துறையை பலப்படுத்துவார்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்பார்ப்பு வீரர் – கேன் வில்லியம்சன்
இலங்கை அணிக்கு எதிராகவே தான் டெஸ்ட் வாழ்நாளில் இன்னிங்ஸ் ஒன்றில் பெற்ற அதிகூடிய ஓட்டங்களை (242*) பதிவு செய்த நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் தனது அணிக்காக அசத்த எதிர்பார்க்கப்படும் முக்கிய வீரராக உள்ளார்.
பாகிஸ்தான் அணியினுடனான அண்மைய டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த வில்லியம்சன், ஐ.சி.சி. இன் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் 900 புள்ளிகளை பெற்ற முதல் நியூசிலாந்து வீரராக மாறி அண்மையில் வரலாறு படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்தின் எதிர்பார்ப்பு குழாம் – டொம் லேதம், ஜீட் ராவல், கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), ரோஸ் டெய்லர், ஹென்ரி நிக்கோல்ஸ், பி.ஜே. வட்லிங், கொலின் டி க்ரான்ட்ஹொமே, டிம் செளத்தி, ட்ரென்ட் போல்ட், நெய்ல் வெக்னர், அஜாஸ் பட்டேல்
ஆடுகள நிலைமை
நியூசிலாந்தின் மிகப் பழைமை வாய்ந்த கிரிக்கெட் மைதானமான பேசின் ரிசவ் அரங்கிலேயே நாளைய டெஸ்ட் போட்டி இடம்பெறவுள்ளது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு முழுமையாக சாதகமாக இருக்கும் என கருதப்படும் நிலையில் போட்டியின் இறுதி நாளில் மட்டுமே மழை வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது என எதிர்வு கூறப்பட்டிருக்கின்றது. ஆக, இலங்கை – நியூசிலாந்து அணிகள் இந்த டெஸ்ட் போட்டி இரண்டு நாட்டு ரசிகர்களுக்கும் முழுமையாக விருந்து படைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<