ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டாக்கின் டெஸ்ட் வாழ்க்கை கேள்விக்குறியில்..!

1259
Image Courtesy - Cricket.com.au

அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிச்செல் ஸ்டாக்கிற்கு நாளை நடைபெறவுள்ள இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இறுதி டெஸ்ட் போட்டியாகக் கூட அமையலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களின் முழுமையான கவனத்தையும் எதிர்பார்ப்பையும் கொண்ட இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் அடிலெய்ட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ஓட்டங்களினல் த்ரில் வெற்றி பெற்றிருந்தது.

ஆஸி.க்கு எதிரான 2ஆவது டெஸ்டிலிருந்து அஷ்வின், ரோஹித் நீக்கம்

அவுஸ்திரேலிய அணியானது வெற்றிக்காக போராடியிருந்தாலும் கூட இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் துள்ளியமான பந்துவீச்சினால் தொடர்ந்தும் நிலைத்து நிற்க முடியாமல் இறுதியில் தோல்வியினை சந்திக்க நேரிட்டது.

டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியின் இந்த தோல்வியானது, விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணிக்கு 10 வருடங்களின் பின்னரான வரலாற்று வெற்றியையும் பெற்றுக் கொடுத்தது.

இந்நிலையில், பேர்த்தில் நாளை (14) நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான முழுமையான பயிற்சிகளில் இரண்டு அணிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக காணப்படும் அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக தங்களது பந்துகளை வீசிக் கொண்டிருக்கின்ற நிலையில், சொந்த நாட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் எதிர்பாத்த அளவு செயற்படவில்லை என்பது போட்டியின் முடிவுகளை அவதானிக்கும் போது தெளிவாகின்றது.

அவுஸ்திரேலிய அணியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளராக காணப்படும் மிச்செல் ஸ்டாக் இரண்டு இன்னிங்சுகளிலும் 5 விக்கெட்டுக்களை மாத்திரமே கைப்பற்றி இருந்தார்.

28 வயதுடைய மிச்செல் ஸ்டாக் கிரிக்கெட் உலகில் வேகமாக பவுண்ஸர் பந்துகளை வீசக்கூடியவராக திகழ்கின்றார். தற்போது இவருடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரப்போகின்றதா என்ற சந்தேகம் எல்லோர் மத்தியிலும் எழும் அளவுக்கு புதிய கருத்து ஒன்று வெளியாகியுள்ளது.

முதல் டெஸ்ட் முடிவின் போது ஸ்டாக் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை அணிக்கு ஒரு பக்கம் ஆதரவாக இருந்தாலும், அவர் தற்போது தொடர்ச்சியாக போட்டிகளில் சறுக்கி வருவதாக  அணித்தலைவர் டிம் பெய்ன் தனது அதிருப்தியை வெளிக்காட்டியிருந்தார்.

அணியின் வெற்றிக்காக விமானத்தில் தியாகம் செய்த கோஹ்லி – அனுஷ்கா

மேலும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய நேர்முக வர்ணனையாளருமான மார்க் டெய்லர், மிச்செல் ஸ்டாக்கினுடைய பந்துவீச்சு சாதாரணமானது என்று குறிப்பிட்டிருக்கின்ற அதேவேளை, முன்னாள் வீரர்களான அலன் போர்டர் மற்றும் டேமியன் பிளெமிங் ஆகியோர் இவர் பந்துவீசும் பாணியை கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும் சக வீரரான மிச்செல் ஜோன்சன் இவரது உடல் கட்டமைப்பு தொடர்பிலும் விமர்சனம் செய்திருந்தார்.

அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டாக்கிற்கு இந்திய அணியுடன் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அவரது இறுதி டெஸ்ட் போட்டியாகக் கூட அமையலாம் என அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கையினை அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அவ்வணியின் தேர்வாளர்களில் ஒருவருமான மார்க் வோஹ் விடுத்துள்ளார்.    

2017 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலிய அணியின் தேர்வாளர்களில் ஒருவராக செயற்பட்டுவரும் மார்க் வோஹ் உடைய இந்த அதிரடி அறிவிப்பானது, ஸ்டாக்கின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு பெரும் ஆபத்தாக மாறியிருக்கின்றது.

இது தொடர்பில் மார்க் வோஹ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

”கடந்த ஒரு வருடமாக என்னுடைய அவதானிப்பின்படி ஸ்டாக் சீரான முறையில் பந்துவீசவில்லை. ஏனோதானோ என்று பந்து வீசுகின்றார். திடீரென எதற்குமே பிரயோசனப்படாத பந்துகளை வீசுவார். புதிய பந்துகளை ஸ்டாக் சீரான முறையில் வீச வேண்டுமென நான் ஆசைப்படுகின்றேன். நாளை போட்டி நடைபெறவுள்ள பேர்த் ஆடுகளம் ஸ்டாக்கிற்கு பந்துவீசுவதற்கு பொருத்தமான ஆடுகளமாக இருக்கும். இருந்தும் இதனையும் அவர் சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றால் அவரை டெஸ்ட் அணியிலிருந்து அதிரடியாக நீக்குவதை தவிர வேறு வழி எதுவுமில்லை” என்று தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணியுடன் நடைபெற்ற போட்டியில் டெஸ்ட் அறிமுகம் பெற்ற 28 வயதுடைய அவுஸ்திரேலிய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான மிச்செல் ஸ்டாக் இதுவரையில் 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 191 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இதில் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களை 9 தடவைகளும், போட்டியில் 10 விக்கெட்டுக்களை ஒரு தடவையும் கைப்பற்றியுள்ளார்.

பந்துவீச்சாளராக மாத்திரமல்லாமல் டெஸ்ட் போட்டிகளில் இதுவரையில் 1277 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 9 அரைச்சதங்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணியுடன் இலங்கையின் கடந்தகாலப் போட்டிகள் எப்படி இருந்தன?

மிச்செல் ஸ்டாக்கை பெருத்தவரையில் அவருடைய பந்து வீச்சு வேகம், எதிரணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும். எனவே நாளை ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்துவீசி தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை நீடிப்பாரா.? அல்லது நாளைய போட்டி இறுதி போட்டியாக அமையப்போகின்றதா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<