மோதலில் முடிந்த கொழும்பு – புளூ ஸ்டார் போட்டி

1287

களுத்துறை புளூ ஸ்டார் மற்றும் கொழும்பு கால்பந்து கழக அணிகளுக்கு இடையில் களுத்துறை வேர்னன் பெர்னாண்டோ மைதானத்தில் நேற்று நடைபெற்ற டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டியின் போது பார்வையாளர்களால் போட்டி நடுவர் ஆஷாத் தாக்கப்பட்டமையினால் போட்டியை இடைநடுவே கைவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் காரணமாக இரு அணிகளும் தலா ஒரு கோலைப் பெற்று 1-1 என சமநிலையில் இருந்த நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது.

சோண்டர்ஸை வீழ்த்தி தொடர்ந்து 3ஆவது முறை ஏப்.ஏ கிண்ண சம்பியனான இராணுவப்படை

களுத்துறையில் இதுவரை நடைபெற்ற கால்பந்து போட்டியொன்றில் ஒரு வெற்றியையேனும் பதிவுசெய்யாத கொழும்பு அணியுடனான போட்டியைக் காண 2500 இற்கும் அதிகமான புளூ ஸ்டார் ஆதாரவாளர்கள் மைதானத்திற்கு வருகை தந்திருந்தனர்.

சீரற்ற காலநிலையால் மிகவும் மோசமான நிலையில் மைதானம் காணப்பட்டதால் இரு அணி வீரர்களுக்கும் கோல்களை அடிக்கவும், ப்ரீ கிக் மற்றும் கோர்ணர் உதைகளை மேற்கொள்ளவும் கடினமாக இருந்தது. இதனால் நடுவர் சரியான முடிவுகளை எடுப்பதில் தடுமாயிருந்தார்.

போட்டி ஆரம்பித்த சொற்ப நேரத்தில் இரண்டு கழகங்களும் கிட்டத்தட்ட சம அளவில் மோதிக்கொண்ட வண்ணம் இருந்தன. எனினும், களுத்துறை அணிக்காக அறிமுகத்தைப் பெற்றுக் கொண்ட க்ரெபோ ரொஹோபோத் மற்றும் கொழும்பு வீரர் மொஹமட் றிப்னாஸ் ஆகிய வீரர்கள் முதல் பாதியில் தமக்கு கிடைத்த பல வாய்ப்புக்களை தவறவிட்டிருந்தனர்.

அதேநேரம், கோர்ணர் உதை ஒன்றைப் பெற்றுக் கொண்ட கொழும்பு எப்.சி வீரர் பொட்ரிக் திமித்ரி உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.

இதுஇவ்வாறிருக்க, புளூ ஸ்டார் அணி வீரர்களினால் எதிரணி கோல் கம்பத்தை நோக்கி அடிக்கப்பட்ட பந்துகள் மற்றும் எல்லை பந்துகளை கொழும்பு எப்.சி கோல் காப்பாளர் கவீஷ் பெர்னாண்டோ பல தடவைகள் அபாரமாக தடுத்திருந்தார். இதனால் போட்டியின் முதல் பாதியில் புளூ ஸ்டார் அணியின் கோல் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற போட்டியின் போட்டியின் 41ஆவது நிமிடத்தில் சர்வான் ஜொஹார் முதல் கோலைப் போட்டு கொழும்பு எப்.சி அணியை முன்னிலைப்படுத்தினார்.

எனினும், போட்டியின் 45ஆவது நிமிடத்தில் புளூ ஸ்டார் ஆதரவாளர்கள் எல்லைக் கோட்டிற்கு அருகே வந்து நின்று போட்டியை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் களமிறங்கினர்.

தொடர்ந்து கொழும்பு எப்.சி வீரர்கள் அபாரமாக விளையாடியிருந்துடன், அவ்வணியின் பொட்ரிக் திமித்ரிக்கு 2 ப்ரீ கிக் உதைகள் கிடைக்கப் பெற்றன. இதில் முதலாவது உதை கோல் கம்பத்தை விட்டு வெளியேறியதுடன், 2ஆவது உதை எதிரணி கோல் காப்பாளர் மஞ்சுள பெர்னாண்டோவின் அபாரமான முயற்சியினால் அலாதியாக தடுத்து நிறுத்தப்பட்டது.

இதுஇவ்வாறிருக்க, புளூ ஸ்டார் வீரர்கள் கோலடிக்க மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சிகளின் போதும், முறையற்ற விளையாட்டுக்காக நடுவர் விசில் ஊதுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் அந்த அணி வீரர்கள் பல தடவைகள் கோபத்துக்கு ஆளாகினர். அதேபோல போட்டியைக் காண வந்த ஆதரவாளர்களும் நடுவரின் இந்த செயலுக்கு எதிர்ப்பினை தெரிவித்து போட்டியை இடைநிறுத்துவதற்கு முயற்சி செய்தனர்.

அதேநேரம், எல்லைக் கோட்டிற்கு மிகவும் அருகாமையில் புளூ ஸ்டார் ஆதரவாளர்கள் கூடி நிற்க போட்டியை நடத்துவதில் தொடர்ந்து தடங்கல் ஏற்பட்டது. அதேநேரம், கொழும்பு எப்.சி வீரர் நிரான் கனிஷ்க, பந்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்த போது அருகில் இருந்த ஆதாரவாளர்கள் அவரை தாக்கியுள்ளனர். இதனை அவதானித்த போட்டி நடுவர் மைதானத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தார். எனினும், ஒருசில நிமிடங்களில் அவர் போட்டியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தார்.

Photos:  Blue Star SC vs Colombo FC | Week 7 | Dialog Champions League 2018

இந்த நிலையில், போட்டியின் 78ஆவது நிமிடத்தில் புளூ ஸ்டார் வீரர் மொஹமட் அஜ்மீர், அவ்வணிக்கான முதலாவது கோலைப் போட்டு போட்டியை சமப்படுத்தினார். இதனையடுத்து மகிழ்ச்சி ஆரவாரத்துடன் மைதானத்துக்குள் நுழைந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புளூ ஸ்டார் ஆதரவாளர்கள் போட்டி நடுவரையும் தாக்கியிருந்தனர்.

எனவே, போட்டி நிறைவுக்குவர இன்னும் 12 நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில், உடனடியாக போட்டியைக் கைவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்போது, மைதானத்தில் இருந்த கொழும்பு கால்பந்து கழக அணி வீரர்களை பாதுகாப்பாக மைதானத்தில் இருந்து வெளியேறுவதற்கு புளு ஸ்டார் வீரர்கள் முழுமையாக உதவியிருந்தனர்.

கோல் பெற்றவர்கள்

  • கொழும்பு கா.க – சர்வான் ஜோஹர் 41’
  • புளு ஸ்டார் வி.க – மொஹமட் அஜ்மிர் 78’

மஞ்சள் அட்டை

  • புளு ஸ்டார் வி.க – மொஹமட் இர்ஷான் 50’, லிஹிரு தாரக 62’, B.C.சம்பத் 70’

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க