பிரிவு A கழகங்கள் இடையிலான முதல்தர கிரிக்கெட் தொடர் இவ்வாரம் ஆரம்பம்

323

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பிரிவு A கிரிக்கெட் கழகங்களுக்கு இடையே ஒவ்வொரு ஆண்டும் ஒழுங்கு செய்து நடாத்தி வரும் மேஜர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இந்தப் பருவகாலத்திற்கான போட்டிகள் வெள்ளிக்கிழமை (30) ஆரம்பமாகவுள்ளது.

பிரிவு A கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான இந்த கிரிக்கெட் தொடரில் இலங்கையின் முன்னணி கிரிக்கெட் கழகங்கள் 14 பங்குபற்றுவதோடு, போட்டிகள் யாவும் 6 வெவ்வேறு மைதானங்களில் நடைபெறவுள்ளன.

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணம் டிசம்பரில் ஆரம்பம்

 

தொடரில் பங்குபெறும் கழகங்கள் A, B என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதல்கள் இடம்பெறவுள்ளதோடு, தொடர் ஆரம்பித்து அடுத்த ஏழு வாரங்களுக்குள் ஒவ்வொரு அணியும் மூன்று நாட்கள் கொண்ட ஆறு முதல் தர போட்டிகளில் விளையாடும்.

பின்னர் ஒவ்வொரு குழுவிலும் முதல் நான்கு இடங்களுக்குள் வரும் அணிகள் “சுபர் 8” சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டு  நான்கு நாட்கள் கொண்ட போட்டிகளில் தமக்கிடையே மீண்டும் மோதல்களில் ஈடுபடும். இந்த சுபர் 8 தொடரில் எந்த கழக அணி அதிக புள்ளிகள் பெறுமோ அது பிரிவு A மேஜர் பிரிமியர் லீக் தொடரின் சம்பியனாக நாமம் சூடவுள்ளது.

இதே நேரம் சுபர் 8 சுற்றுக்கு தெரிவு செய்யப்படாத ஆறு அணிகளும் பிளேட் சம்பியன்ஷிப் சுற்றில் தமக்கிடையே மோதல்களில் ஈடுபடவுள்ளதோடு இச்சுற்றில் வழங்கப்படும் புள்ளிகள் அடிப்படையில் கடைசி இடத்தினைப் பிடிக்கும் அணி, பிரிவு B கழகங்களுக்கான பிரிமியர் லீக் தொடர் சம்பியன் அணியுடன் தரநிலை போட்டியில் மோதும்.

பிரிவு B கழகங்களுக்கான பிரிமியர் லீக் தொடர் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு இந்த தொடரில் விளையாடும் அணிகளின் விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

குழு A குழு B
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் SSC அணி
இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் BRC அணி
NCC கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்
றாகம கிரிக்கெட் கழகம் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்
சோனகர் கிரிக்கெட் கழகம் பதுரெலிய கிரிக்கெட் கழகம்
தமிழ் யூனியன் கழகம் கொழும்பு கிரிக்கெட் கழகம்
இராணுவப்படை விளையாட்டு கழகம் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

 

கடந்த ஆண்டு இடம்பெற்ற பிரிவு A கழகங்களுக்கு இடையிலான மேஜர் பிரிமியர் லீக் தொடரில் சிலாபம் மேரியன்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றிருந்ததோடு, SSC அணி இரண்டாம் இடத்தினைப் பெற்றிருந்தது. அதேநேரம், பிளேட் சம்பியன்ஷிப் தொடரின் வெற்றியாளராக சோனகர் கழகம் தெரிவாகியிருந்ததோடு புளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் கடைசி இடத்தினைப் பெற்று பிரிவு B அணியாக தரம் குறைக்கப்பட்டிருந்தது.

உலகக் கிண்ணத்திற்கு முன் ஸ்கொட்லாந்தை எதிர்கொள்ளும் இலங்கை அணி

மறுமுனையில் கடந்த ஆண்டு பிரிவு B கழகங்களின் பிரிமியர் லீக் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் இம்முறை பிரிவு A கழக அணியாக தரமுயர்த்தப்பட்டு இலங்கையின் பிரபல்யமான கிரிக்கெட் கழகங்களுடன் மோதல்களில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இம்முறைக்கான மேஜர் பிரிமியர் லீக் தொடர் பற்றி கருத்து தெரிவித்த தொடர் இயக்குனர் சமந்த தொடன்வெல, “இந்தப் பருவகாலத்தில் இருந்து நாம் தரநிலைப் போட்டியினை நடாத்த தீர்மானித்துள்ளோம்“ என ThePapare.com இடம் கூறியிருந்தார்.

முதல்தரப் போட்டிகளாக நடைபெறவுள்ள மேஜர் பிரிமியர் லீக் தொடர் அடுத்த ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன் இதனையடுத்து கழகங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்கள் (ஒரு நாள், T20) நடைபெறவுள்ளது.

இதேவேளை அடுத்த ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணம் நடைபெறவுள்ள காரணத்தினால் இலங்கை கிரிக்கெட் சபை (SLC) மாகாண ரீதியிலான கிரிக்கெட் தொடர்கள் எதனையும் நடாத்துவது பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<