வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணம் டிசம்பரில் ஆரம்பம்

409

ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் (ACC) ஏற்பாடு செய்துள்ள வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ளது.

இம்முறைக்கான வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் 8 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன. அதன்படி தொடரில் பங்கேற்கும் நாடுகளில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்,  பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் டெஸ்ட் அந்தஸ்தினை கொண்டிருப்பதோடு ஐக்கிய அரபு இராச்சியம், ஹொங்கொங் மற்றும் ஓமான் ஆகிய அணிகள் ஐ.சி.சி. உறுப்பினர் அந்தஸ்தினை கொண்டிருக்கின்றன.

யாசிர் ஷாஹ்வின் மாய சுழலில் வீழ்ந்தது நியூஸிலாந்து அணி

இந்த கிரிக்கெட் தொடர் பொதுவாக இளம் வீரர்களுக்கானது என்பதால் தொடரில் பங்கேற்கும் அணிகள் தங்களது வீரர்கள் குழாமில் 23 வயதின் கீழ்ப்பட்ட வீரர்கள் 11 பேரினை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும், ஒவ்வொரு அணியும் 15 வீரர்கள் கொண்ட தமது குழாமில் 23 வயதிற்கு மேலான வீரர்கள் 4 பேரினை வைத்திருக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இத்தொடரின் நடப்புச் சம்பியனாக இலங்கை அணி உள்ளது. இலங்கை அணி கடந்த ஆண்டு பங்களாதேஷில் இரண்டாவது முறையாக நடைபெற்ற வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியினை வீழ்த்தியே நடப்பு சம்பியன் பட்டம் வென்றிருந்தது. இதேவேளை, இந்திய அணியும் வளர்ந்து வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் சம்பியன் பட்டத்தினை ஒரு தடவை வென்றிருக்கின்றது. இந்திய அணி குறித்த சம்பியன் பட்டத்தினை 2013 ஆம் ஆண்டில் முதற்தடவையாக இடம்பெற்ற வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியினை வீழ்த்திப் பெற்றிருந்தது.

தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் A, B என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதல்கள் இடம்பெறவுள்ளதுடன் குழு A இல் இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஓமான் ஆகிய அணிகளும் குழு B இல்  பாகிஸ்தான், பங்களாதேஷ், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகளும் காணப்படுகின்றன.

இத்தொடரின் குழு நிலைப் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளிலும் நடைபெறவுள்ளதோடு அரையிறுதிப் போட்டிகளும், இறுதிப் போட்டியும் இலங்கையில் மட்டுமே இடம்பெறுகின்றன.

தொடர் அட்டவணை

குழு A போட்டிகள்

டிசம்பர் 7 – இலங்கை எதிர் ஓமான் – ஆர். பிரேமதாச மைதானம், கொழும்பு

டிசம்பர் 7 – இலங்கை எதிர் இந்தியா – CCC மைதானம், கொழும்பு

டிசம்பர் 8 – இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான் – CCC மைதானம், கொழும்பு

டிசம்பர் 8 – இந்தியா எதிர் ஓமான் – ஆர். பிரேமதாச மைதானம், கொழும்பு

டிசம்பர் 10 – இலங்கை எதிர் இந்தியா – ஆர். பிரேமதாச மைதானம், கொழும்பு

டிசம்பர் 10 – ஆப்கானிஸ்தான் எதிர் ஓமான் – CCC மைதானம், கொழும்பு

குழு B போட்டிகள்

டிசம்பர் 6 – பாகிஸ்தான் எதிர் ஹொங்கொங் – NSK மைதானம், கராச்சி

டிசம்பர் 6 – பங்களாதேஷ் எதிர் ஐக்கிய அரபு இராச்சியம் – SG மைதானம், கராச்சி

டிசம்பர் 7 – பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அரபு இராச்சியம் – NSK மைதானம், கராச்சி

டிசம்பர் 7 – பங்களாதேஷ் எதிர் ஹொங்கொங் – SG மைதானம், கராச்சி

டிசம்பர் 9 – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ் – NSK மைதானம், கராச்சி

டிசம்பர் 9 – ஐக்கிய அரபு இராச்சியம் எதிர் பங்களாதேஷ் – கராச்சி

சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் இலங்கைக்கு பின்னடைவு

நொக் அவுட் சுற்று

டிசம்பர் 13 – முதல் அரையிறுதி – குழு B வெற்றியாளர் எதிர் குழு A இரண்டாம் இடம் – ஆர். பிரேமதாச மைதானம், கொழும்பு

டிசம்பர் 14 – இரண்டாவது அரையிறுதி – குழு A வெற்றியாளர் எதிர் குழு B இரண்டாம் இடம் – ஆர். பிரேமதாச மைதானம், கொழும்பு

டிசம்பர் 15 – இறுதிப் போட்டி – ஆர். பிரேமதாச மைதானம், கொழும்பு

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<