கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமான பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 16 ஓட்டங்களால் வெற்றி பெற்று ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமப்படுத்தியுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி ஹரிஸ் சொஹைல் மற்றும் பாபர் அசாம் ஆகியோரின் சதங்களுடன் 5 விக்கெட்டுகளை இழந்து 418 ஓட்டங்களை பெற்று தமது இன்னிங்ஸை நிறுத்திக் கொண்டது.
>> நான்கு ஓட்டங்களால் வெற்றியை தவறவிட்ட பாகிஸ்தான் அணி
பாகிஸ்தான் அணி 25 ஓட்டங்களுக்கு முதல் இரண்டு விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்த அஸார் அலி மற்றும் ஹரிஸ் சொஹைல் ஜோடி 126 ஓட்டங்கள் பெற்றிருந்த போது அஸார் அலி 81 ஓட்டங்களுடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய அசாத் ஷபீக் 12 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.
பின்னனர் 5 ஆவது விக்கெட்டுக்காக ஹரிஸ் சொஹைல் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் இணைந்து 186 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை டெஸ்ட் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்த ஹரிஸ் சொஹைல் 147 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் தனது கன்னி டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.
பாபர் அசாம் மற்றும் அணித்தலைவர் சப்ராஸ் அஹமட் ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 127 மற்றும் 30 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழந்து 418 ஓட்டங்களைப் பெற்று தமது இன்னிங்ஸை நிறுத்திக் கொண்டது. பந்து வீச்சில் கிரன்ட்ஹோம் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
பின்னர் தமது முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய நியூஸிலாந்து அணி இரண்டாம் நாள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 24 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
எனினும் நேற்று (26) மூன்றாம் நாள் ஆட்டத்தில் தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த நியூஸிலாந்து அணியின் முதலாவது விக்கெட் இணைப்பாட்டமாக 50 ஓட்டங்கள் பெறப்பட்டிருந்த போதும் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததனால் நியூஸிலாந்து அணி 90 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. நியூஸிலாந்து அணி சார்பாக ஜீட் ராவல் அதிக பட்சமாக 31 ஓட்டங்களையும் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். அவ்வணியின் 6 வீரர்கள் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு இராச்சிய மண்ணில் சிறந்த பந்து வீச்சு பிரதி மற்றும் நியூஸிலாந்து அணிக்கெதிராக டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பந்து வீச்சு பிரதி இவற்றுடன் பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஒருவரின் மூன்றாவது சிறந்த பந்து வீச்சு என பல சாதனைகளை தன் வசப்படுத்திய யாசிர் ஷாஹ் 41 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
>> “இலங்கையில் உள்ள மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் இவர்கள் தான்” ; சந்திக ஹதுருசிங்க
முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணியை விட 328 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் பலோ ஒன் (follow on) முறையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி நேற்றைய மூன்றாம் நாள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இன்றைய (27) நான்காம் நாள் ஆட்டத்தில் தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த நியூஸிலாந்து அணிக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 312 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. இதனால் அவ்வணி இன்னிங்ஸ் மற்றும் 16 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. இரண்டாவது இன்னிங்சில் நியூஸிலாந்து அணி சார்பாக ரொஸ் டெய்லர் 82 ஓட்டங்களையும் ஹென்ரி நிக்கோலஸ் மற்றும் டொம் லதம் ஆகியோர் முறையே 77, 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பாகிஸ்தான் அணி சார்பாக இரண்டாவது இன்னிங்சிலும் சிறப்பாக பந்து வீசிய யாசிர் ஷாஹ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இப்போட்டியில் மொத்தமாக 14 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் போட்டியொன்றில் அதிக விக்கெட் வீழ்த்தியிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் இம்ரான் கானின் சாதனையை சமன் செய்திருந்தமை விஷேட அம்சமாகும். இது தவிர ஹசன் அலி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆட்ட நாயகனாக சாதனை வீரர் யாசிர் ஷாஹ் தெரிவு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையிலான தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான தீர்மானம் மிக்க போட்டி அடுத்த மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
பாகிஸ்தான் (முதல் இன்னிங்ஸ்) – 418/5d (167) – ஹரிஸ் சொஹைல் 147, பாபர் அசாம் 127*, அஸார் அலி 81, கிரன்ட்ஹோம் 44/2
நியூஸிலாந்து (முதல் இன்னிங்ஸ்) 90 (35.3) – ஜீட் ராவல் 31, கேன் வில்லியம்சன் 28*, யாசிர் ஷாஹ் 41/8
நியூஸிலாந்து (இரண்டாவது இன்னிங்ஸ்) f/o – 312 (112.5) – ரொஸ் டைய்லர் 82, நிக்கோலஸ் 77, டொம் லதம் 50, யாசிர் ஷாஹ் 143/6, ஹசன் அலி 46/3
முடிவு – பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 16 ஓட்டங்களால் வெற்றி
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<