மகாஜனாவை வீழ்த்திய மாரிஸ் ஸ்டெல்லா ThePapare சம்பியன்ஷிப் அரையிறுதியில்

503

யாழ்ப்பாணம் மகாஜனா கல்லூரி அணிக்கு எதிரான போட்டியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்ட நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி வீரர்கள், பாடசாலை அணிகளுக்கு இடையிலான 20 வயதுக்கு உட்பட்டோருக்கான ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் அரையிறுதிக்குத் தெரிவாகியுள்ளனர்.

ஏற்கனவே இடம்பெற்ற குழு மட்டப் போட்டிகளின் நிறைவில் B குழுவில் முதலாம் இடம் பெற்ற மாரிஸ் ஸ்டெல்லா வீரர்களும், C குழுவில் இரண்டாம் இடம் பெற்ற மகாஜனா கல்லூரி வீரர்களும், சுகததாஸ விளையாட்டரங்கில் இன்று (23) இடம்பெற்ற முதலாவது காலிறுதிப் போட்டியில் மோதினர்.

ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் காலிறுதிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை ஆரம்பம்

ஆட்டம் ஆரம்பமாகிய சில நிமிடங்களில் மாரிஸ் ஸ்டெல்லா வீரர்களுக்கு கிடைத்த ப்ரீ கிக்கின்போது உள்ளனுப்பிய பந்தை அவ்வணி வீரர்கள் கோலுக்குள் செலுத்தினர். எனினும், அது ஓப் சைட் என நடுவரால் சைகை காண்பிக்கப்பட்டது.

முதல் 10 நிமிடங்களுக்குள் மத்திய களத்தில் இருந்து மாரிஸ் ஸ்டெல்லா வீரர் கோல் நோக்கி வேகமாக உதைந்த பந்தை மகாஜனா கோல் காப்பாளர் லக்ஷான் பிடித்தார்.

20 நிமிடங்களின் பின்னர் மகாஜனா அணியின் மத்திய களத்தில் மாரிஸ் ஸ்டெல்லா வீரர்களுக்கு கிடைத்த ப்ரீ கிக்கை ரஜிந்து பெர்னாண்டோ பெற்றார். கோலுக்குள் செல்லும் வகையில் அவர் உதைந்த பந்தை லக்ஷான் பாய்ந்து கம்பத்திற்கு மேலால் தட்டி விட்டார்.

போட்டியின் 35 ஆவது நிமிடத்தில் மகாஜனா வீரர்களுக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது. மைதானத்தின் மத்தியில் இருந்து உள்ளனுப்பிய பந்தை சஷிகுமார் கனுஜன் பெற்று, பின்கள வீரர்களைத் தாண்டி முன்னேறிச் சென்று பரிமாற்றம் செய்த பந்தை, ஒரு வீரர் தடுப்பில் இருந்த வீரரின் உடம்பிற்கு உதைய, அடுத்த முயற்சியின்போது பந்தை வெளியில் உதைந்தனர்.

அடுத்த நான்கு நிமிடங்களில், மாரிஸ் ஸ்டெல்லா பின்கள வீரர் சாஜித் மற்றும் கோல் காப்பாளர் பிரகாஷ் பெரேரா இடையே பந்துப் பரிமாற்றத்தின்போது இடம்பெற்ற குழப்ப நிலையின்போது கனுஜன் பந்தை பெற முயற்சித்த போதும், மீண்டும் பெரேரா கனுஜனைத் தடுக்க, பின்கள வீரர்கள் பந்தை அங்கிருந்து வெளியேற்றினர்.

பத்திரிசியாரின் இரண்டு புள்ளிகளை பறித்த மாரிஸ் ஸ்டெலாவின் பெரேரா

ஆட்டத்தின் 41 ஆவது நிமிடத்தில் கிடைத்த கோணர் உதையின்போது அணித் தலைவர் நிசல் தாரிந்த உள்ளனுப்பிய பந்தை ரஜிந்து பெர்னாண்டோ ஹெடர் மூலம் கோலுக்குள் செலுத்தி மாரிஸ் ஸ்டெல்லா அணிக்கான முதல் கோலைப் பதிவு செய்தார்.

முதல் பாதி நிறைவடையும் தருவாயில் பெனால்டி எல்லையில் இருந்து மாரிஸ் ஸ்டெல்லா வீரர்கள் கோல் நோக்கி எடுத்த முயற்சியும் கம்பங்களை விட உயர்ந்து வெளியே சென்றது.

எனவே, முதல் பாதி மாரிஸ் ஸ்டெல்லா அணியின் முன்னிலையுடன் நிறைவுற்றது.

முதல் பாதி: மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 1 – 0 மகாஜனா கல்லூரி

இரண்டாம் பாதி ஆரம்பித்த சில நிமிடங்களில் மகாஜனா வீரர்கள் எதிரணியின் கோலுக்கு அண்மையில் இருந்து கோல் நோக்கி உதைந்த பந்து வெளியே சென்றது.

ஆட்டத்தின் 55 நிமிடங்கள் கடந்த நிலையில் மரிஸ் ஸ்டெல்லா வீரர் மகாஜனா கோல் எல்லையில் முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட, நீர்கொழும்பு வீரர்களுக்கு பெனால்டி உதைக்கான வாய்ப்பு கிடைத்தது. இதன்போது அணித் தலைவர் நிசல் தாரிந்த உதைந்த பந்து கோல்காப்பாளர் லக்ஷானின் கைகளில் பட்டவாறு கம்பங்களுக்குள் செல்ல, போட்டியின் இரண்டாவது கோலும் பதிவாகியது.

வான்டேஜ் எப்.ஏ கிண்ண அரையிறுதி மோதல்கள் இவ்வார இறுதியில்

ஆட்டம் 65 நிமிடங்களை அண்மித்த நிலையில் மாரிஸ் ஸ்டெல்லா அணியின் கோல் எல்லைக்கு வெளியில் இடது புறத்தில் கிடைத்த ப்ரீ கிக்கின்போது கனுஜன் கோல் நோக்கி உதைந்த பந்தை பெரேரா கம்பத்திற்கு வெளியே தட்டி விட்டார்.

72ஆவது நிமிடத்தில் எதிரணியின் மத்திய களத்தில் மகாஜனா வீரர்களுக்கு கிடைத்த ப்ரீ கிக்கின்போது கோல் நோக்கி செல்லும் விதத்தில் உதையப்பட்ட பந்தை கோல் காப்பாளர் பெரேரா பாய்ந்து பிடித்தார்.

போட்டியின் இரண்டாவது பாதியின் இறுதித் தருவாயில் இரு அணிகளும் கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்ட போதும் சிறந்த நிறைவுகள் இன்றி நிறைவுபெற்றது.

எனவே, மாரிஸ் ஸ்டெல்லா வீரர்கள் 2-0 என்ற கோல்களால் வெற்றி பெற்று ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிக்குத் தெரிவாகிய முதல் அணியாக தம்மைப் பதிவு செய்தனர்.

முழு நேரம்: மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 2 – 0 மகாஜனா கல்லூரி

கோல் பெற்றவர்கள்

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி – ரஜீந்து பெர்னாண்டோ 41, நிசல் தாரிந்த 55’

மஞ்சள் அட்டை

மகாஜனா கல்லூரி – தங்கராசா சஜீபன், மோஹன் கீதன்

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க