ஆப்கானிஸ்தான் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான மொஹமட் சஹ்ஷாத் T10 லீக் கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியில், வெறும் 16 பந்துகளுக்கு 74 ஓட்டங்களை விளாசி நம்ப முடியாத அளவுக்கு அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
கிரிக்கெட் விளையாட்டின் அடுத்த பரிணாமமாக கருதப்படும் T10 லீக் கிரிக்கெட் தொடர் இரண்டாவது முறையாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நேற்று (21) ஆரம்பமாகியிருந்தது.
டி-10 கிரிக்கெட் தொடரில் கேரளா கிங்ஸ் அணிக்காக உபுல் தரங்க ஒப்பந்தம்
இலங்கை கிரிக்கெட் அணியின்…
ஒரு நாள், T20 மற்றும் டெஸ்ட் என கிரிக்கெட் விளையாட்டின் ஏனைய வகைப் போட்டிகளின் விதிமுறைகளுடன் அணிக்கு 10 ஓவர்கள் கொண்டதாக இடம்பெறும் இந்த கிரிக்கெட் தொடரில் பல்வேறு நாட்டு கிரிக்கெட் வீரர்களை அடக்கிய எட்டு அணிகள் பங்கேற்கின்றன.
ஓவர்கள் மிகவும் குறைவு என்பதால் அதிரடிக்கு சற்றும் பஞ்சமில்லாமல் இருக்கும் இந்த கிரிக்கெட் தொடரின் ஆரம்ப போட்டியில் சிந்திஸ் அணியும், ராஜ்பூட்ஸ் அணியும் மோதின.
சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஆரம்ப போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பிரன்டன் மெக்கலம் தலைமையிலான ராஜ்பூட்ஸ் அணி ஷேன் வொட்சன் தலைமையிலான சிந்திஸ் அணியினை முதலில் துடுப்பாட பணித்தது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய சிந்திஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 94 ஓட்டங்கள் குவித்தது. சிந்திஸ் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அவ்வணியின் தலைவர் ஷேன் வொட்சன் 20 பந்துகளினை எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இதேநேரம், ராஜ்பூட்ஸ் அணி பந்துவீச்சு சார்பில் இந்திய கிரிக்கெட் அணி வீரரான முனாப் பட்டேல் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், மேற்கிந்திய தீவுகளின் கார்லோஸ் ப்ராத்வைட் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
T10 தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்களின் விபரம் வெளியானது
ஐக்கிய அரபு இராச்சியத்தில்…
இதனை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 95 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாட வந்த ராஜ்பூட்ஸ் அணிக்கு ஆரம்ப வீரர்களாக ஆப்கானிஸ்தானின் மொஹமட் சஹ்ஷாத்தும், அணித்தலைவர் பிரன்டன் மெக்கலமும் களம் கண்டனர்.
தொடர்ந்து தனது விஷ்வரூப துடுப்பாட்டத்தினை காண்பிக்க தொடங்கிய மொஹமட் சஹ்ஷாத் சிக்ஸர், பெளண்டரி என ஒவ்வொரு முறையும் தனக்கு கிடைத்த வாய்ப்பு மூலம் ராஜ்பூட்ஸ் அணியின் ஓட்டங்களை உயர்த்தினார்.
பின்னர் இலங்கை அணி வீரரான திசர பெரேரா வீசிய குறித்த இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரினை எதிர்கொண்டு சஹ்ஷாத் அதில் அனைத்து பந்துகளினையும் எல்லைக்கோட்டுக்கு அப்பால் விரட்டி அந்த ஓவரில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் மூன்று பெளண்டரிகள் அடங்கலாக 30 ஓட்டங்களைப் பெற்றார். இதனால் வெறும் 12 பந்துகளில் அரைச்சதத்தினையும் சஹ்ஷாத் பூர்த்தி செய்தார். சஹ்ஷாத் பெற்ற அரைச்சதம் T10 லீக் வரலாற்றில் பெறப்பட்ட அதிவிரைவான அரைச்சதமாகவும் பதிவாகியது.
தொடர்ந்தும் சஹ்ஷாத் பெளண்டரி மழை பொழிந்த காரணத்தினால் ராஜ்பூட்ஸ் அணி போட்டியின் வெற்றி இலக்கான 95 ஓட்டங்களை வெறும் 4 ஓவர்களில் விக்கெட் எதனையும் பறிகொடுக்காமல் 96 ஓட்டங்களுடன் அடைந்தது.
ராஜ்பூட்ஸ் அணியின் வெற்றிக்கு உதவிய சஹ்ஷாத் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று 16 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில், பிரன்டன் மெக்கலம் 21 ஓட்டங்களுடன் நின்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் 462.50 என்கிற பிரமாண்டமான ஓட்ட வேகத்தினை காண்பித்த மொஹமட் சஹ்ஷாத் போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தெரிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஸ்கோர் விபரம்
சிந்திஸ் 94/6 (10) – ஷேன் வொட்சன் 42(20), முனாப் பட்டேல் 20/3(2), கார்லோஸ் ப்ராத்வைட் 11/2(2)
ராஜ்பூட்ஸ் 96/0 (4) – மொஹமட் சஹ்ஷாத் 74(16)*, ப்ரன்டன் மெக்கலம் 21(8)*
முடிவு – ராஜ்பூட்ஸ் அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<