பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர் மற்றும் கெமரன் பேன்கிராப்ட் ஆகியோர் மீதான போட்டித் தடையை நீக்க முடியாது என்று அந்நாட்டு கிரிக்கெட் சபை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்காவிற்கு எதிராக கடந்த மார்ச் மாதம் கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது அவுஸ்திரேலிய வீரர் கெமரன் பேன்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரிய வந்தது. இதற்கு மூளையாக செயல்பட்டது டேவிட் வோர்னர் என்றும், இந்த விவகாரம் அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்திற்கு தெரியும் என்றும் விசாரணையில் தெரிய வந்தது.
தடைக்கு எதிராக மேல் முறையீடு செய்யாமல் இருக்க ஸ்மித் முடிவு
தம்மீது சர்வதேச மற்றும் உள்ளூர் …….
இதனால் ஸ்மித், வோர்னர் ஆகியோருக்கு தலா ஓராண்டு போட்டித் தடையும், பேன்கிராப்ட்டிற்கு 9 மாதங்கள் தடையும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையினால் விதிக்கப்பட்டது.
அத்துடன், ஸ்மித், வோர்னர், பேன்கிராப்ட் ஆகியோர் தடையை அனுபவிக்கும் காலத்தில் 100 மணித்தியாலங்களுக்கு அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக சமூக சேவைகளில் ஈடுபட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
அதன்பிறகு, ஒருசில உள்ளூர் மற்றும் வெளிநாட்டு டி-20 லீக் போட்டிகளில் மாத்திரம் விளையாடுவதற்கான அனுமதியை அந்நாட்டு கிரிக்கெட் சபை குறித்த வீரர்களுக்கு வழங்கியிருந்தது.
இதேவேளை, அவுஸ்திரேலிய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய பின்னர் கிரிக்கெட் உலகில் பெரும் பின்விளைவுகளை சந்தித்தது. சிரேஷ்ட வீரர்களான ஸ்மித், வோர்னர் தடை செய்யப்பட்ட பின், மற்ற வீரர்கள் அவுஸ்திரேலிய அணி குறித்து வெளியான எதிர்மறை செய்திகளாலும், சொந்த நாட்டு மக்களே தங்களை கைவிட்டு விட்டனர் என்ற எண்ணத்தாலும் மனம் துவண்டு போய் இருந்தனர்.
விளையாடாமலே சிறந்த துடுப்பாட்ட வீரர் என்பதை நிரூபித்து வரும் ஸ்டீவ் ஸ்மித்
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) புதிதாக ….
இந்த தடை கடுமையானது, அதை நீக்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய வீரர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. மேலும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையிடம் தங்கள் கோரிக்கைகளையும் தாக்கல் செய்தது. ஸ்மித், வோர்னர் இல்லாமல் அவுஸ்திரேலியா தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. இதனால் இருவர் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இதனால் ஸ்மித், வோர்னர் மீதான தடை எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வோர்னர். பேன்கிராப்ட் ஆகியோர் மீதான தடை நீக்கம் செய்யப்படமாட்டாது என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் சுயாதீன கலாசார குழு நேற்று (20) அறிவித்தது. வீடியோ மூலம் நடத்தப்பட்ட சபையின் அதிவிசேட கூட்டத்தைத் தொடர்ந்து அந்நாட்டு கிரிக்கெட் சபையின் ஒழுக்கக் கோவை குழுவினால் குறித்த வீரர்களுக்கான தடை அதே நிலையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
அதுமாத்திரமின்றி, குறித்த மூவர் மீதான தடை தொடரும் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் இடைக்காலத் தலைவர் எர்ல் எட்டிங்ஸ் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ”தடைகளை குறைப்பது குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் அந்த வீரர்கள் மீது தேவையற்ற அழுத்தங்களை திணிப்பதாக அமைகின்றது என நாங்கள் நம்புகின்றோம். பந்தை சேதப்படுத்திய அணியின் ஏனைய வீரர்களும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். எனவே, இவர்களுக்கான தடையை குறைக்கவோ அல்லது நீக்கவோ நாம் தீர்மானிக்கவில்லை” என அவர் தெரிவித்தார்.
நான் சஹீட் அப்ரிடி போன்று பந்துவீச விரும்புகின்றேன் – ஸ்டீவ் ஸ்மித்
பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சர்வதேச கிரிக்கெட் …….
இதன்படி, ஸ்மித் மற்றும் வோர்னருக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தப் போட்டித் தடை அடுத்த ஆண்டு மார்ச் 29ஆம் திகதி வரை நீடிக்கவுள்ளது. அத்துடன், பேன்கிராப்ட் மீதான தடை எதிர்வரும் டிசம்பர் 29ஆம் திகதியுடன் முடிகிறது.
இதன்காரணமாக, ஸ்மித் மற்றும் வோர்னர் ஆகிய வீரர்களுக்கு, இன்று (21) ஆரம்பமாகவுள்ள இந்தியாவுடனான கிரிக்கெட் தொடர், பிக்பேஷ் லீக் டி-20 தொடர் மற்றும் ஷெபீல்ட் சீல்ட் போட்டித் தொடர்களில் பங்கேற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், எதிர்வரும் டிசம்பர் மாதம் 30ஆம் திகதி நடைபெறவுள்ள ஹோர்பாட் அணிக்கெதிரான பிக்பேஷ் லீக் ஆட்டத்தில் பேர்த் அணியில் பேன்கிராப்ட் விளையாடுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இந்த மூன்று வீரர்கள் மீது விதிக்கப்பட்ட தடையினைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளர் டெரன் லீமன் தனது பதவியை இராஜினாமாச் செய்தார். அதன்பிறகு ஜஸ்டின் லேங்கர் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டதுடன், பல மாற்றங்களும் அந்த அணியில் மேற்கொள்ளப்பட்டன.
எனினும், அதன்பிறகு அவுஸ்திரேலிய அணி, டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி-20 என 21 போட்டிகளில் பங்குபற்றி ஐந்தில் மாத்திரமே வெற்றி கொண்டது. அவற்றில் ஜிம்பாப்வே மற்றும் ஐக்கிய அரபு இராட்சிய அணிகளுக்கு எதிராக 3 வெற்றிகளைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<