ஜெப்னா கிரிக்கெட் லீக் இறுதிப் போட்டியில் KCCC

819

ஏபி விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட கிரிக்கெட் கழகங்களுக்கு இடையில் நடாத்தப்பட்டு வரும் டி20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி தகுதிபெறும் இரண்டாவது அணியினைத் தேர்வு செய்வதற்கான இரண்டாவது தகுதிப்போட்டி இன்று யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. 4 விக்கெட்டுக்களால் ஜொனியன்ஸை வீழ்த்திய கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி (KCCC)  சென்றலைட்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

முதலாவது தகுதிப்போட்டியில் டக்வர்த் லூயிஸ் முறை மூலம் 19 ஓட்டங்களால் சென்றலைட்ஸ் அணி வெற்றிபெற்றிருந்தது. அதேவேளை மற்றைய விலகல் போட்டியில் ஜொனியன்ஸ் அணி மூளாய் விக்டொரி அணியினை வெற்றிபெற்றிருந்தது.

அதனடிப்படையில் முதலாவது தகுதிப்போட்டியில் தோல்வியடைந்த KCCC அணியும், விலகல் போட்டியில் வெற்றி பெற்றிருந்த ஜொனியன்ஸ் அணியும் இன்றைய தினம் போட்டியிட்டிருந்தன.

Photos: Jaffna Cricket League| Play off

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற KCCC அணி ஜொனியன்ஸை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. துடுப்பெடுத்தாட களம் நுளைந்த ஜோனியன்ஸ் அணியினர் 6 ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து  33 ஓட்டங்களையே பெற்றிருந்தனர். மத்திய வரிசையில் களம்புகுந்த காணாமிர்தன் மற்றும் லவேந்திரா முறையே 25 மற்றும் 23 ஓட்டங்களினை பெற்றுக்கொடுக்க 113 என்ற போராடக்கூடிய ஓட்ட எண்ணிக்கையை 20 ஓவர்கள் நிறையில் ஜொனியன்ஸ் அணி பெற்றுக்கொண்டது.

KCCC அணி சார்பில் பந்துவீச்சில் சாம்பவன் மற்றும் சத்தியன் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடுவதற்கு களம் நுழைந்த KCCC அணி ஐந்து ஓவர்கள் நிறைவில், தொடர் முழுவதும் சோபித்த ஜெயரூபனின் விக்கெட் உள்ளடங்கலாக 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

ஜொனியன்ஸ் வீரர்கள் ஒரு முனையில் விக்கெட்டுக்களை வீழ்த்தியபோதும், மறு முனையில், நிதானமாக ஆடிய ஜனுதாஸ் 5 பௌண்டரிகள் 2 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக அரைச்சதம் கடந்திருந்த வேளையில் பிருந்தாபனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

16 பந்துகளில் 14 ஓட்டங்கள் பெற வேண்டும் என்ற நிலையில் போட்டி நகர, பந்து வீச்சை சிதரன், பிரதாபன் ஜோடி சிறப்பாக எதிர்கொண்டு KCCC அணியின் இறுதிப்போட்ட்டிக் கனவை நனவாக்கியது.

இரண்டு பந்துகள் மீதமாக இருக்க 4 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி டிசம்பர் மாதம் முதலாவது வாரத்தில் இடம்பெறவுள்ள  ஜெப்னா கிரிக்கெட் லீக்கின் இறுதிப்போட்டியில் மோதுவதற்கு தகுதிபெற்றுள்ளது.

போட்டியின் ஆட்டநாயகன் – ஜனுதாஸ் (KCCC)

போட்டியின் சுருக்கம்

ஜொனியன்ஸ் – 113/7 (20) – காணாமிர்தன் 25, லவேந்திரா 23, சாம்பவன் 2/16, சத்தியன் 2/22

கொக்குவில் (KCCC) – 114/6 (19.4) – ஜனுதாஸ் 54, யதுசன் 2/22

போட்டி முடிவு – KCCC அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<