பந்துவீச்சு பரிசோதனைக்காக பிரிஸ்பேன் செல்லும் அகில தனஞ்சய

637

பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் புதிதாக இணைந்து கொண்ட இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான அகில தனஞ்சய, இன்று (19) அவுஸ்திரேலியா நோக்கி பயணமாகவுள்ளார்.

காலியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இலங்கை சுழல் பந்துவீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு முறை பற்றி சந்தேகம் இருப்பதாக நடுவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனால் எதிர்வரும் 14 நாட்களுக்குள் தனது பந்துவீச்சு முறை பற்றிய பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் ஐ.சி.சி அறிவித்திருந்தது.

 

மேஜேர் எமர்ஜிங் லீக்கில் அசத்தும் சதீர சமரவிக்ரம

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற வளர்ந்துவரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான மேஜேர் எமர்ஜிங் லீக்…

இருப்பினும், குறித்த பரிசோதனையின் முடிவுகள் வரும் வரையில் அவரை பந்துவீச அனுமதிக்க முடியும் எனவும் சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது.

இதனையடுத்தே அவர், பந்துவீச்சு முறை குறித்த மேலதிக பரிசோதனைகளுக்காக இன்றைய தினம் அவுஸ்திரேலியா நோக்கி பயணமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 23 ஆம் திகதி பிரிஸ்பேனில் உள்ள விளையாட்டு ஆய்வகத்தில் நடைபெறவுள்ள பந்துவீச்சு பரிசோதனைக்கு அகில தனஞ்சய முகங்கொடுக்கவுள்ளார்.

இந்த நிலையில், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் எதிர்வரும் 23 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ள 3 ஆவது டெஸ்ட் போட்டியில் அகில தனஞ்சய பங்கேற்கமாட்டார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், இங்கிலாந்துடனான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க, அகில தனஞ்சய குறித்து கருத்து வெளியிட்ட போது,

”பந்துவீச்சுப் பரிசோதனைக்காக அகில தனஞ்சய, 19 ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு பயணமாகவுள்ளார். அவருடைய பரிசோதனை எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளதால், இங்கிலாந்துடனான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார். உண்மையில், இது எமக்கு மிகப் பெரிய இழப்பு என அவர் தெரிவித்தார்.

25 வயதான அகில தனஞ்சய, 2012 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற டி-20 உலகக் கிண்ணப் போட்டிகளில் அறிமுகமானார். அண்மைக்காலமாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடி திறமைகளை வெளிப்படுத்தி வந்த அவர், இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன், தற்போது நடைபெற்று வருகின்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தார்.

இது இவ்வாறிருக்க, இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (17) நிறைவுக்கு வந்தது. இந்தப் போட்டியில் விளையாடியிருந்த அகில தனஞ்சய, இரண்டாவது இன்னிங்ஸில் 115 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சுமார் 6 வருடங்களுக்குப் பிறகு அவரது பந்துவீச்சுப் பாணியில் சந்தேகம் இருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை மற்றுமொரு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<