இனிவரும் நாட்களில் டெஸ்ட் போட்டிகள் எதிலும் இலங்கை வீரர்கள் “நியமாய் ரங்கய்யா நியமாய்” என சொல்வதனை கேட்க முடியாது. ஏனெனில், டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் உலகின் மிக வெற்றிகரமான இடதுகை சுழற்பந்து வீச்சாளராக கருதப்படும் ரங்கன ஹேரத் காலியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இடம்பெற்று முடிந்த டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வினை எடுத்து விட்டார்.
தனது இடத்தை பெறும் பந்து வீச்சாளருக்கு அறிவுரை வழங்கிய ரங்கன ஹேரத்
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர இடதுகை …
காலி டெஸ்ட் போட்டியோடு 19 வருடங்கள் நீடித்த தனது கிரிக்கெட் வாழ்க்கையினை முடித்திருக்கும் ஹேரத் டெஸ்ட் போட்டிகளில் 433 விக்கெட்டுக்களை கைப்பற்றியவாறு விடை பெற்றிருக்கின்றார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் 8ஆவது இடத்தினைப் பிடித்திருக்கும் ஹேரத் டெஸ்ட் போட்டிகள் அடங்கலாக கிரிக்கெட்டின் ஏனைய வடிவங்களான ஒரு நாள், T20 போட்டிகளில் மொத்தமாக 525 விக்கெட்டுக்களை கைப்பற்றி இலங்கை அணிக்காக அதிக சர்வதேச விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் மூன்றாம் இடத்தினையும் பிடித்திருக்கின்றார்.
இதுதவிர இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக காலம் (19 வருடங்கள், 48 நாட்கள்) ஆடிய வீரராகவும் மாறியுள்ள ஹேரத், இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்திய ஒரு சாதனை நாயகன் என்பதனை எவராலும் மறுக்க முடியாது.
ஹேரத் இன்று அனைவராலும் போற்றப்படும் ஒரு சாதனை நாயகனாக மாறியது ஒரு இரவில் நடந்த சம்பவம் அல்லவே. இந்த சாதனை நாயகனின் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய தருணங்களை ஒரு முறை மீட்டுவோம்
ஹேரத்தின் அறிமுகம்
குருநாகல் மண் ஈன்றெடுத்த ரங்கன ஹேரத், 1999ஆம் ஆண்டு தனது 21ஆவது வயதில் அவுஸ்திரேலிய அணியுடன் காலியில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியோடு இலங்கை அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமாகியிருந்தார்.
ஹேரத் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் ஒட்ட இயந்திரங்களான ஸ்டீவ் வோக், ரிக்கி பொன்டிங் போன்றோரின் விக்கெட்டுக்களை கைப்பற்றி திறமையினை வெளிக்காட்டினார்.
வெற்றிக்களிப்புடன் ஹேரத்திற்கு பிரியாவிடை கொடுக்க முடியாமல் போகுமா?
இலங்கையின் நட்சத்திர சுழல் வீரரான ரங்கன ….
எனினும், ஹேரத் அறிமுகமான காலப்பகுதியில் உலகின் தலைசிறந்த சுழல் வீரரான முத்தையா முரளிதரன் இலங்கை அணிக்கு விளையாடியிருந்த காரணத்தினால் அவருக்கு இலங்கை அணியில் நிரந்தர இடம் ஒன்றினை தொடர்ந்து பெற்றுக் கொள்ள முடியாது போயிருந்தது.
முரளியின் காலத்தில் டெஸ்ட் போட்டிகள் சிலவற்றில் இலங்கை அணிக்காக ஹேரத் ஆடியிருந்த போதிலும் குறித்த போட்டிகளில் இலங்கை அணியின் தலைமைப் பந்துவீச்சாளரான முரளிக்கு பக்க பலமாக இருப்பதே அவரின் பொறுப்பாக இருந்தது.
இலங்கை அணியில் ஹேரத்தின் மறுபிரவேசம்
சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி ஒரு தசாப்த காலத்தின் பின்னரே ஹேரத்தின் திறமை வெளிப்பட வாய்ப்பு கிடைத்தது. அதுவும் காலியில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியிலேயே. இலங்கைக்கு 2009ஆம் ஆண்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி இலங்கை அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இத் தொடரின் முதல் போட்டியில் இரண்டு நாட்கள் மீதமாக இருக்க பாகிஸ்தான் அணிக்கு மிகவும் சவால் குறைந்த 168 ஓட்டங்கள் ஆட்டத்தின் நான்காம் இன்னிங்ஸில் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
இப்போட்டியில் பாகிஸ்தான் அணியே வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் ரங்கன ஹேரத் தனது அபார பந்துவீச்சு மூலம் பாகிஸ்தான் அணியினை நிலைகுலையச் செய்தார். குறித்த டெஸ்ட்டின் நான்காம் இன்னிங்ஸில் வெறும் 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஹேரத் 50 ஓட்டங்களால் இலங்கை அணிக்கு வெற்றியினை தேடிக்கொடுத்திருந்தார்.
©AFP
இப்போட்டியோடு தேசிய அணியின் தேர்வாளர்களை ஹேரத் கவர்ந்தார். தொடர்ந்து சில நாட்களில் முரளியும் ஓய்வு பெற இலங்கை டெஸ்ட் அணியின் தலைமை சுழல் பந்துவீச்சாளராக மாறும் வாய்ப்பு ஹேரத்திற்கு கிடைக்கின்றது.
முரளியின் ஓய்வுக்கு முன்னர் 22 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிய ஹேரத் அவற்றில் 71 விக்கெட்டுக்களையே கைப்பற்றியிருந்தார். முரளியின் ஓய்வுக்கு பின்னர் தனது கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறும் வரை மொத்தமாக 71 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஹேரத் அவற்றில் 362 விக்கெட்டுக்களை சாய்த்து எவராலும் நம்ப முடியாத அளவுக்கு திறமையினை வெளிக்காட்டியிருக்கின்றார்.
முரளியின் பிரியாவிடை டெஸ்ட்டில் துடுப்பாட்ட வீரர்
இந்தியாவுக்கு எதிராக 2010ஆம் ஆண்டு முரளியின் பிரியாவிடை டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி மறக்க முடியாத வெற்றி ஒன்றினை பெற ஹேரத் உதவினார். ஆனால் காலியில் நடைபெற்ற இப்போட்டியில் ஹேரத் பந்துவீச்சாளராக திறமையை வெளிப்படுத்தவில்லை. ஒரு துடுப்பாட்ட வீரராகவே அசத்தியிருந்தார். போட்டியின் முதல் இன்னிங்ஸில் 9ஆம் இலக்கத்தில் துடுப்பாடிய ஹேரத் லசித் மாலிங்கவுடன் இணைந்து 115 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றார். இந்த இணைப்பாட்டத்தினால் இலங்கை அணி 500 ஓட்டங்களுக்கு மேல் முதல் இன்னிங்ஸில் பெற்றது.
குறித்த போட்டியில் மொத்தமாக 93 பந்துகளினை எதிர்கொண்டிருந்த ஹேரத் 10 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 80 ஓட்டங்களைப் பெற்று டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் ஒன்றில் தான் பெற்ற அதிக ஓட்டங்களையும் பதிவு செய்திருந்தார்.
ஹேரத்தின் துடுப்பாட்ட உதவியோடு இலங்கை அணி குறித்த டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுக்களால் அபாரமான வெற்றி ஒன்றினை பதிவு செய்ததுடன், முரளிக்கும் மகிழ்ச்சியான பிரியாவிடை ஒன்றை வழங்கியது.
தென்னாபிரிக்க மண்ணில் இலங்கையின் முதல் டெஸ்ட் வெற்றிக்கு காரணமாகியவர்
கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2011ஆம் ஆண்டில் நடைபெற்ற பின்னர் இலங்கை அணி டெஸ்ட் போட்டிகளில் வெல்வது மிகவும் அரிதாக இருந்தது. இதனால் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருந்த இலங்கை அணியின் கிரிக்கெட் இரசிகர்களுக்கு ஹேரத்தின் பந்துவீச்சு மூலம் ஒரு புது மகிழ்ச்சி கிடைத்தது.
Photos: Rangana Herath farewell press conference
ThePapare.com | Viraj Kothalawala|…
தென்னாபிரிக்காவின் டர்பன் நகரில் 2011ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்திற்கு அடுத்த நாளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர்கள் தென்னாபிரிக்க அணியினை 208 ஓட்டங்களால் தோற்கடித்தனர். இது தென்னாபிரிக்க மண்ணில் இலங்கை அணியின் முதல் டெஸ்ட் வெற்றியாக அமைந்தது.
தென்னாபிரிக்க மண்ணில் இலங்கை அணி முதல் டெஸ்ட் வெற்றியினைப் பெற காரணமான ரங்கன ஹேரத் 9 விக்கெட்டுக்களை கைப்பற்றி குறித்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
T20 உலக சம்பியன்ஷிப் தொடரில் முக்கிய லீக் போட்டியில் இலங்கை அணியின் நாயகன்
ஹேரத் டெஸ்ட் போட்டிகளிலேயே பொதுவாக இலங்கை அணியின் வெற்றிக்காக உழைத்த போதிலும் கிரிக்கெட்டின் மிகக் குறுகிய வடிவமான T20 போட்டிகளிலும் அசத்திய ஒரு தருணமும் இருக்கின்றது.
பங்களாதேஷில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற T20 உலக சம்பியன்ஷிப் தொடரின் லீக் ஆட்டமொன்றில் இலங்கை அணி நியூசிலாந்து அணியுடன் வெற்றி பெற்றால் மாத்திரமே அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாக முடியும் என்கிற நிலை இருந்தது. சிட்டகொங் நகரில் ஆரம்பமான குறித்த லீக் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி வெறும் 119 ஓட்டங்களுடன் சுருண்டது.
T20 போட்டிகளின் சிறப்பு துடுப்பாட்ட வீரர்களான பிரன்டன் மெக்கலம், மார்டின் குப்டில் மற்றும் ரோஸ் டெய்லர் போன்ற வீரர்களை வைத்திருந்த நியூசிலாந்து அணிக்கு இலங்கை அணி வைத்த வெற்றி இலக்கான 120 ஓட்டங்களை அடைவது அவ்வளவு கடினமான விடயமாக இருக்கவில்லை. இதற்கு ஏற்றாற் போல் சிறந்த ஆரம்பத்தினையும் நியூசிலாந்து அணி குறித்த போட்டியில் காட்டியது. இப்படியானதொரு தருணத்தில் ரங்கன ஹேரத் இலங்கை அணிக்காக பந்துவீச ஆரம்பிக்கின்றார். அதோடு நியூசிலாந்து அணியின் அஸ்தமனம் தொடங்கியது. ஹேரத் வெறும் 3 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களை சாய்க்க நியூசிலாந்து அணி வெறும் 60 ஓட்டங்களுடன் சுருண்டது.
©Getty Images
T20 போட்டிகள் வரலாற்றில் இதுவரையில் பதியப்பட்ட சிறந்த பந்துவீச்சுப் பெறுதிகளில் ஒன்றாக இது மாறியதோடு நியூசிலாந்து அணியுடனான வெற்றியுடன் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை அணி அதில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இறுதிப் போட்டியில் இந்தியாவையும் தோற்கடித்து 2014ஆம் ஆண்டின் T20 உலக சம்பியன்களாக நாமம் சூடியது.
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 8ஆவது இடத்தை தக்கவைத்து ஓய்வு பெற்ற ஹேரத்
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் புதிய டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் …
இலங்கையின் இரண்டாவது டெஸ்ட் ஹெட்ரிக்கிற்கு சொந்தக்காரன்
இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது ஹெட்ரிக்கினை பதிவு செய்த வீரராக ரங்கன ஹேரத்தே இருக்கின்றார். இலங்கைக்கு விருந்தாளிகளாக வந்த அவுஸ்திரேலிய அணியுடன் காலியில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியிலேயே ஹேரத் இந்த சாதனையை செய்தார். குறித்த போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தின் போது அடம் வோஜேஸ், பீட்டர் நெவில் மற்றும் மிச்சல் ஸ்டார்க் ஆகியோரின் விக்கெட்டுக்களை தொடர்ச்சியாக கைப்பற்றியே ஹெட்ரிக் சாதனை படைத்திருந்தார்.
இந்த ஹெட்ரிக்கோடு குறித்த டெஸ்ட் போட்டியில் ஹேரத் மொத்தமாக 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்ததோடு, பின்னர் இடம்பெற்ற டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் 13 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி டெஸ்ட் தரவரிசையில் முதலாம் இடத்தில் இருந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினை இலங்கை அணி முதல் முறையாக வைட்வொஷ் செய்ய உதவியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானை வைட்வொஷ் செய்ய உதவிக்கரம் கொடுத்தவர்
பாகிஸ்தானின் இரண்டாம் தாயகமாக கருதப்படும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் அவ்வணியினை முதல் தடவையாக டெஸ்ட் தொடர் ஒன்றில் வைட்வொஷ் செய்த அணியாக இலங்கை கடந்த ஆண்டு (2017) மாறியிருந்தது.
இரண்டு போட்டிகள் கொண்டதாக அமைந்த குறித்த டெஸ்ட் தொடரில் ரங்கன ஹேரத் மொத்தமாக 16 விக்கெட்டுக்களை கைப்பற்றி இலங்கையின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு வழங்கியிருந்தார்.
இவ்வாறாக இலங்கை அணிக்கு பல்வேறு வெற்றிகளை பெற்றுத்தர உதவிய ரங்கன ஹேரத் தனது தரப்பு 211 ஓட்டங்களால் மோசமாக தோல்வியடைந்த காலி டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெற்றதே மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவன்காளான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் முத்தையா முரளிதரன் போன்று வெற்றி ஒன்றுடனேயே ஹேரத்திற்கும் சர்வதேச போட்டிகளில் பிரியாவிடை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது இலங்கை கிரிக்கெட் இரசிகர்களின் ஆதங்கமாக இருக்கின்றது.
ஹேரத்தின் சாதனை தொகுப்பு
-
- டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய இடதுகை பந்துவீச்சாளர்/இடதுகை சுழல் பந்துவீச்சாளர் (433 விக்கெட்டுக்கள்)
- டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் 400 விக்கெட்டுக்களை கடந்த முதல் இடதுகை சுழல் பந்துவீச்சாளர்
- டெஸ்ட் போட்டியொன்றின் நான்காவது இன்னிங்ஸில் அதிக தடவைகள் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளர் (12 தடவைகள்)
- இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஹெட்ரிக் சாதனை பதிவு செய்த இரண்டாவது வீரர்
- ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் 100 டெஸ்ட் விக்கெட்டுக்களை பதிவு செய்த வீரர் (காலி)
- ஆப்கானிஸ்தான், அயர்லாந்து தவிர டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் ஏனைய அனைத்து நாடுகளிற்கு எதிராகவும் இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கெட்டுக்களுக்கு மேல் கைப்பற்றிய மூன்றாவது பந்துவீச்சாளர்
- முரளியின் ஓய்வுக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் உலகில் அதிக தடவைகள் (10) ஆட்ட நாயகன் விருதினை வென்ற கிரிக்கெட் வீரர்.
- பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக 100 இற்கு மேலான டெஸ்ட் விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஒரே வீரர்
- இடதுகை பந்துவீச்சாளர் ஒருவர் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் பதிவு செய்த மிகச்சிறந்த பந்துவீச்சுப்பெறுதி ரங்கன ஹேரத்தின் மூலமே பெறப்பட்டுள்ளது. ஹேரத் 2014ஆம் ஆண்டு கொழும்பில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் 127 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை கைப்பற்றி இதனை பதிவு செய்தார்.
- அணித்தலைவராக டெஸ்ட் போட்டி ஒன்றில் மிகச்சிறந்த பந்துவீச்சுப் பெறுதியை காட்டிய வீரர். இதனை ஹேரத் ஹராரேயில் 2016ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கெதிராக 132 ஓட்டங்களுக்கு 13 விக்கெட்டுக்களை கைப்பற்றி இதனை பதிவு செய்திருந்தார்.