மில்லர், டு பிளேசிஸ் ஆகியோரின் சதங்களோடு ஒரு நாள் தொடர் தென்னாபிரிக்கா வசம்

272
courtsey - Getty Images

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்த்திரேலிய அணிகள் இடையில் நடைபெற்று முடிந்திருக்கும் மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள்  போட்டியில் தென்னாபிரிக்க அணி 40 ஓட்டங்களால் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரினை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது.

அவுஸ்த்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி அவுஸ்த்திரேலிய வீரர்களுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் ஒரு T20 போட்டி என்பவற்றில் ஆடுகின்றது. இந்த சுற்றுப் பயணத்தில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் நிறைவடைந்து இரு அணிகளும் தலா ஒரு வெற்றி வீதம் பெற்று ஒரு நாள் தொடர் சமநிலையில் இருக்க தொடரை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டி இன்று (11) ஹோபர்ட்  நகரில் ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்த்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ச் முதலில் தென்னாபிரிக்க அணியினை துடுப்பாடுமாறு பணித்தார்.

இதன்படி முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி ஆரம்ப வீரர்களான ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் குயின்டன் டி கொக் ஆகியோரின் விக்கெட்டுக்களை தொடக்கத்திலேயே பறிகொடுத்து தடுமாறியது. இதனை அடுத்து களம் வந்த தென்னாபிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் உம் 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதனால், தென்னாபிரிக்க அணியினர் ஒரு கட்டத்தில் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலைக்குச் சென்றனர்.

எனினும் இத்தருணத்தில் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் மற்றும் தென்னாபிரிக்க அணித்தலைவர் பாப் டு பிளேசிஸ் ஆகியோர் பொறுமையுடன் தமது தரப்பின் ஓட்டங்களை உயர்த்த தொடங்கினர். இரண்டு வீரர்களினும் இணைப்பு வெற்றி அளிக்க தென்னாபிரிக்க அணியின் நான்காம் விக்கெட்டுக்காக மிகவும் பிரமாண்டமான 252 ஓட்டங்கள் பகிரப்பட்டது.

ஒரு நாள் போட்டிகள் வரலாற்றில் நான்காம் விக்கெட்டுக்காக பெறப்பட்ட மூன்றாவது அதிகூடிய இணைப்பாட்டமாக அமைந்த இந்த 252 ஓட்டங்களுக்குள் இரண்டு வீரர்களும் தங்களது சதங்களை பூர்த்தி செய்து கொண்டனர்.

இந்த இமாலய இணைப்பாட்டத்தோடு தென்னாபிரிக்க அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 320 ஓட்டங்களை குவித்தது.

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்தில் 5ஆவது ஒரு நாள் சதத்தினை பூர்த்தி செய்த டேவிட் மில்லர் 108 பந்துகளில் 13 பெளண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 139 ஓட்டங்கள் குவித்து ஒரு நாள் போட்டிகளில் அதிகூடிய தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்திருந்தார்.

மறுமுனையில் ஒரு நாள் போட்டிகளில் 10ஆவது சதம் கடந்த தென்னாபிரிக்க அணித்தலைவர் பாப் டு பிளேசிஸ் 2 சிக்ஸர்கள் மற்றும் 15 பெளண்டரிகள் அடங்கலாக 125 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அவுஸ்த்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பாக வேகப்பந்து வீச்சாளர்களான மிச்சல் ஸ்டார்க் மற்றும் மார்க்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 321 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்த்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 280 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.

அவுஸ்த்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில் சோன் மார்ஷ் சதம் விளாசி மொத்தமாக 106 ஓட்டங்கள் பெற்ற போதிலும் அது வீணாது. இதேநேரம், மார்க்கஸ் ஸ்டோனிஸ் 62 ஓட்டங்களோடும், அலெக்ஸ் கேரி 42 ஓட்டங்களுடனும் அவுஸ்த்திரேலிய அணிக்காக போராட்டத்தை காண்பித்திருந்தனர்.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பாக டேல் ஸ்டெய்ன் மற்றும் ககிஸோ றபாடா ஆகியோர் ஆளுக்கு மூன்று விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

அவுஸ்த்திரேலிய அணியுடனான வெற்றி மூலம் ஒரு நாள் தொடரினை தம்வசமாக்கியுள்ள தென்னாபிரிக்க அணி 2009ஆம் ஆண்டின் பின்னர் அவுஸ்த்திரேலிய மண்ணில் கைப்பற்றிய இரண்டாவது இருதரப்பு தொடர் இதுவாகும்.

போட்டியின் ஆட்ட நாயகனாக டேவிட் மில்லர் தெரிவு செய்யப்பட்ட நிலையில் தென்னாபிரிக்க அணி தமது அவுஸ்த்திரேலிய சுற்றுப்பயணத்தில் அடுத்ததாக அந்நாட்டு வீரர்களை சனிக்கிழமை (17) குயின்ஸ்லாந்தில் இடம்பெறும் T20 போட்டியில் எதிர்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்

தென்னாபிரிக்கா – 320/5 (50) டேவிட் மில்லர் 139(108), பாப் டு பிளேசிஸ் 125(114), மிச்சல் ஸ்டார்க் 57/2(10), மார்க்கஸ் ஸ்டோனிஸ் 70/2(7)

அவுஸ்த்திரேலியா – 280/9 (50) சோன் மார்ஷ் 106(102), மார்க்கஸ் ஸ்டோனிஸ் 63(76), அலெக்ஸ் கேரி 42(41), ககிஸோ றபாடா 40/3(10), டேல் ஸ்டெய்ன் 45/3(10)

முடிவு – தென்னாபிரிக்க அணி 40 ஓட்டங்களால் வெற்றி