நியூஸிலாந்துடனான பயிற்சிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி தோல்வி

204

மகளிர் T20 உலக சம்பியன்ஷிப் தொடருக்கான  பயிற்சிப் போட்டியொன்றில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியினை நியூஸிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுக்களால் இலகுவாக தோற்கடித்துள்ளது.

மகளிர் T20 உலக சம்பியன்ஷிப் தொடரின் ஆறாவது அத்தியாயப் போட்டிகள் இம்மாதம் 9ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளில் ஆரம்பமாகவுள்ளது. இந்த T20 தொடருக்காக கடந்த வாரம் இலங்கையில் இருந்து மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, நேற்று (4) என்டிகுவா நகரில் இடம்பெற்றிருந்த மகளிர் T20 உலக சம்பியன்ஷிப் தொடருக்கான பயிற்சிப் போட்டி ஒன்றில் நியூஸிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியினை எதிர்கொண்டிருந்தது.   

T20I உலகக் கிண்ணத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் – சமரி நம்பிக்கை

மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள ….

இந்த பயிற்சிப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணித்தலைவி எமி சட்டர்வைட் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை மகளிருக்கு வழங்கினார்.  

அண்மையில் இந்திய மகளிர் அணியுடனான T20 தொடரில் மோசமான முடிவுகளை காட்டியிருந்த இலங்கை மகளிர் அணி, இந்த பயிற்சிப் போட்டியிலும் அதே மாதிரியான ஒரு முடிவையே காட்டியது. அந்த வகையில் முதலில் துடுப்பாடி 20 ஓவர்களினையும் எதிர்கொண்ட இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து  98 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக  சஷிகலா சிறிவர்த்தன 35 பந்துகளுக்கு 5 பெளண்டரிகள் அடங்கலாக 30 ஓட்டங்களைப் பெற்றதுடன், ஏனைய வீராங்கனைகளில் ஒருவரேனும் கூட இருபது ஓட்டங்களையேனும் கடந்திருக்காது ஆட்டமிழந்திருந்தனர்.

மறுமுனையில் நியூஸிலாந்து மகளிர் அணியின் பந்துவீச்சு சார்பாக 18 வயதேயான சுழல் மங்கை அமேலியா கெர் 13 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து இலங்கை மகளிர் அணியின் 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்ததோடு, ஜெஸ் வாட்கினும் 2 விக்கெட்டுக்களை தனக்கு சொந்தமாக்கியிருந்தார்.

பின்னர் ஆட்டத்தின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட சவால்குறைந்த 99 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய நியூஸிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கினை அடைந்தது.  

நியூஸிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்த துடுப்பாட்ட வீராங்கனைகளில் மேடி கிரீன் 36 ஓட்டங்களையும், சூஷி பேட்ஸ் 34 ஓட்டங்களினையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நியூஸிலாந்து உடனான தோல்வியுடன் மகளிர் T20 உலக சம்பியன்ஷிப் தொடரின் பயிற்சிப் போட்டியில் நல்ல ஆரம்பத்தினை காட்ட தவறியிருக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, தமது அடுத்த பயிற்சிப் போட்டியில் வரும் புதன்கிழமை (7) அயர்லாந்து மகளிர் அணியுடன் மோதுகிறது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 98 (20) சஷிகலா சிறிவர்த்தன 30(35), அமேலியா கெர் 13/4(3), ஜெஸ் வாட்கின்ஸ் 15/2(3)

நியூசிலாந்து – 99/4 (18) மேடி கிரீன் 36(35), சூஷி பேட்ஸ் 34(30)

முடிவு – நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<