இளம் வீரர்களுக்கான இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய கிரிக்கெட் தொடர்

289

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு முதல்தர போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கோடு ஒழுங்கு செய்திருக்கும் “மேஜர் எமர்ஜிங் லீக்” (Major Emerging League) கிரிக்கெட் தொடர் ஞாயிற்றுக்கிழமை (4) ஆரம்பமாகின்றது.

இலங்கையின் முதல் தர கிரிக்கெட் கழக அணிகள் (பிரிவு A, B) மற்றும் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட அழைப்பு  கிரிக்கெட் அணிகள் அடங்கலாக மொத்தமாக 24 உள்ளூர் கிரிக்கெட் அணிகள் பங்குபெறும் இந்த கிரிக்கெட் தொடர் இரண்டு நாட்கள் கொண்ட முதல் தரப் போட்டிகளாக அமையவுள்ளது.

தொடரில் பங்குபெறும் 24 அணிகளும் தலா மூன்று அணிகள் வீதம் எட்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மோதல்கள் நடைபெறவுள்ளதோடு, ஒவ்வொரு குழுக்களிலும் நடைபெறும் போட்டிகளின் முடிவுகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் தொடரின் அடுத்த கட்டமான நொக் அவுட் சுற்றுக்கு தெரிவு செய்யப்படும்.

ஒரு நாள் தொடரை தக்கவைத்த இலங்கை இளையோர் அணி

நொக் அவுட் சுற்று (காலிறுதிப் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள், இறுதிப் போட்டி) மற்றும் ஏனைய முதற்கட்டப் போட்டிகள் அடங்கலாக தொடரில் மொத்தமாக 31 போட்டிகள் நடைபெறவுள்ளன. தொடரின் போட்டிகள் யாவும் இம்மாதம் 04 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தொடர் இளம் வீரர்களுக்கானது என்பதனால் தொடரில் பங்குபெறும் ஒவ்வொரு அணியும் போட்டிகளில் விளையாடும் போது 1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 01 ஆம் திகதியிலோ அல்லது அதற்கு பின்னர் பிறந்த கிரிக்கெட் வீரர்கள் 07 பேரை கட்டாயம் கொண்டிருக்க வேண்டும் என்பது நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளது.

தொடரில் திறமையை வெளிக்கொண்டு வரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபை இந்த ஆண்டு நடாத்தவிருக்கும் முதல் தர கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான பிரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் ஒன்றும் கிடைக்கும்.

அணிகளின் விபரம்

  • குழு A – NCC, நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம், பாணந்துறை விளையாட்டுக் கழகம்
  • குழு B – CCC, 19 வயதுக்கு கீழ்ப்பட்ட நீல அணி, BRC
  • குழு C – இராணுவப்படை விளையாட்டுக்கழகம், கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகம், லங்கன் விளையாட்டுக் கழகம்
  • குழு D – சிலாபம் மேரியன்ஸ், பதுரெலிய கிரிக்கெட் கழகம், காலி கிரிக்கெட் கழகம்
  • குழு E – கடற்படை விளையாட்டுக் கழகம், களுத்துறை நகர கழகம், புளும்பீல்ட் கழகம்
  • குழு F – செரசென்ஸ் விளையாட்டுக் கழகம், சோனகர்  விளையாட்டுக் கழகம், குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்
  • குழு G – இலங்கை துறைமுக அதிகார சபை விளையாட்டுக் கழகம், தமிழ் யூனியன், விமானப்படை விளையாட்டுக் கழகம்
  • குழு H – SSC, றாகம கிரிக்கெட் கழகம், 19 வயதுக்கு கீழ்ப்பட்ட சிவப்பு அணி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<