ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் அசார் அலி

261

பாகிஸ்தான் ஒருநாள் அணியின் முன்னாள் தலைவரும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான அசார் அலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை தொடர்ந்தும் தக்கவைத்து வரும் அசார் அலி, ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்புகளை தவறவிட்டு வந்தார். இறுதியாக இவர், இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்றிருந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடியிருந்தார்.

பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் இருந்து விடைபெற்ற மிஸ்பா உல் ஹக்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றிருந்த ……

இதற்கு முன்னர் இவர் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி கிண்ணத்தை கைப்பற்றுவதற்கான முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார். குறித்த தொடரில் இந்திய அணிக்கு எதிரான லீக் மற்றும் இறுதிப் போட்டிகளில் அரைச்சதம் விளாசியதுடன், இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் அரைச்சதம் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.  

எனினும், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் அசார் அலிக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், இமாம் உல் ஹக் அணிக்குள் உள்வாங்கப்பட்டார். இவர் வெறும் 14 இன்னிங்ஸ்களில் 4 சதங்கள் மற்றும் 3 அரைச்சதங்களை விளாசி ஆரம்பத் துடுப்பாட்ட வீரருக்கான வாய்ப்பை தக்கவைத்தார். இதனால் அசார் அலிக்கான வாய்ப்புகள் குறைந்து வந்த நிலையில், அசார் அலி தனது ஓய்வை அறிவித்துள்ளதுடன், டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனது ஓய்வு குறித்து லாஹுரில் நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பில் தெளிவுப்படுத்திய அவர், “இந்த முடிவானது அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. நன்கு சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு. இனி எனது முழு சக்தியையும் பயன்படுத்தி ஒரு வகையான கிரிக்கெட் போட்டிகளில் (டெஸ்ட்) மாத்திரம் விளையாடவுள்ளேன்” என குறிப்பிட்டார். இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட இவர்,

“ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கு சிறந்த வீரர்கள் உள்ளனர். டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்துவதற்கு சரியான தருணம் இதுதான். எனது ஓய்வானது தனிப்பட்ட தீர்மானமாகும். இதற்காக நான் கவலைப்படவில்லை. இனி டெஸ்ட் போட்டிகளில் எனது குறிக்கோள்களை எட்டுவதற்கான முயற்சிகளை எடுப்பேன்.

மேற்கிந்திய தீவுகளை இலகுவாக வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் …..

பாகிஸ்தான் அணியின் தலைவராக செயற்பட்டேன். குறித்த காலப்பகுதியில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை 3-0 என இழந்தோம். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரும் வைட்வொஷ்ஷில் முடிந்தது. இரசிகர்கள் எனது தலைமைத்துவத்தை ஏற்கவில்லை. அடுத்த வருடம் உலகக் கிண்ணம் நடைபெறவிருக்கிறது. அதற்காக முன்னாள் தலைவர் என்ற ரீதியில் சர்ப்ராஸ் அஹமட்டிற்கு என்னால் முடிந்த ஒத்துழைப்புகளை வழங்குவேன்.  

நான் அணித்தலைவராக இருந்ததை விடவும், நாம் சம்பியன்ஸ் கிண்ணத்தை கடந்த வருடம் கைப்பற்றியது என்னால் மறக்கமுடியாது. இரசிகர்கள் எம்முடன் இருந்து, அவர்களது பாராட்டுகளை வழங்கினர். வெற்றிபெற்ற அணியில் நானும் இருந்தேன் என்பது ஒருநாள் கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகும்” என்றார்.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரரான அசார் அலி, இதுவரையில் T20I போட்டிகளில் விளையாடியதில்லை. 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 36.90 என்ற சராசரியில் 1,845 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<