பங்களாதேஷ் இளையோர் அணியிடம் தோல்வியுற்ற இலங்கை இளையோர் அணி

360

சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நடைபெற்ற பங்களாதேஷ் 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி 8 ஓட்டங்களால் டக்வத் லுவிஸ் முறையில் தோல்வி அடைந்தது.

ஏற்கனவே இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக முடிவு கிடைக்காத நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் இளையோர் அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் இன்று (01) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக 43 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை இளையோர் அணி விக்கெட்டுகளை காத்து ஓட்டங்களை அதிகரிக்க தவறியது.

சமனிலையில் முடிவடைந்த முதலாவது பயிற்சிப் போட்டி

இடதுகை துடுப்பாட்ட வீரரான நவோத் பரணவிதான சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஒருமுனையில் ஓட்டங்களை பெற்றபோதும் மறுமுனை வீரர்கள் நின்றுபிடித்து துடுப்பாடவில்லை. இதனால் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி 43 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களை பெற்றது. நவோத் பரணவிதான 83 ஓட்டங்களை பெற்றார்.

இதன்போது பங்களாதேஷ் அணி சார்பில் பந்துவீச்சில் சாஹின் அலாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு சொரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 19 வயதுக்கு உட்பட்ட அணி 20.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 101 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டது. போட்டியை தொடர முடியாத நிலையில் முடிவு டகவத் லுவிஸ் முறையில் தீர்மானிக்கப்பட்டது. இதனால் பங்களாதேஷ் அணி டக்வத் லுவிஸ் முறையில் 8 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட பரணவிதான பந்துவீச்சிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (03) தம்புள்ளையில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை இளையோர் அணி – 192/9 (43) – நவோத் பரணவிதான 83, அவிஷ்க தரிந்து 43, நிபுன் தனஞ்சய 23, சஹின் அலாம் 4/43, சொரீபுல் இஸ்லாம் 3/49, ம்ரிதுன்ஜோய் சௌத்ரி 2/42

பங்களாதேஷ் இளையோர் அணி – 101/4 (20.4) – அக்பர் அலி 30*, ஷமிம் தட்வாரி 27*, அஷேன் டேனியல் 2/15, நவோத் பரணவிதான 2/31

முடிவு – பங்களாதேஷ் இளையோர் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி (டக்வத் லுவிஸ் முறை)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<