இப்ராஹிம் ஜிமோஹ்வின் ஹெட்ரிக் கோலால் பெலிகன்ஸை வீழ்த்திய ரினௌன்

391

பெத்தகான விளையாட்டு மைதானத்தில் இன்று (27) நடைபெற்ற டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் ரினௌன் அணி தனது ஆரம்ப போட்டியில் இப்ராஹிம் ஜிமோஹ் முதல் பாதியில் பெற்ற ஹெட்ரிக் கோல் மற்றும் திலிப் பீரிஸ் பெற்ற மற்றொரு கோல் மூலமும் பெலிகன்ஸ் அணியை 4-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   

பெத்தகான செயற்கை திடலில் ரினௌன் அதிக செல்வாக்கோடு போட்டியை ஆரம்பித்தது. ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு சாதகமான மைதானத்தில் ரினௌன் வீரர்கள் பந்தை பரிமாற்றி ஆடுவதற்கு வாய்ப்பான சூழல் இருந்தது.

டிலான் மதுசங்க பெனால்டி எல்லைக்குள் வீழ்த்தப்பட்டதை அடுத்து ரினௌன் அணி 6ஆவது நிமிடத்திலேயே தனது முதல் வாய்ப்பை பெற்றது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திலிப் பீரிஸ் ஸ்பொட் கிக்கை கொட்டஹேன அணிக்கு கோலாக மாற்றினார்.

முதல் பாதியில் ரினௌன் கழக வீரர்கள் மொஹமட் ரியால் மற்றும் மொஹமட் அஷாட் இருவருமே அதிக தாக்குதல் ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்தினர். முதல் பாதி ஆரம்பம் தொடக்கம் இறுதி வரை பெலிகன்ஸ் பின்கள வீரர்கள கடும் நெருக்கடியை சந்திக்க வேண்டி இருந்தது.   

எல்.டி. கருணாசிங்க பந்தை கோலை நோக்கி உதைத்தபோது பெலிகன்ஸ் அணிக்கு 17ஆவது நிமிடத்தில் கோல் வாய்ப்பு ஒன்று கிடைத்தது. எனினும் அந்தப் பந்து கம்பத்திற்கு வெளியால் சென்றது. சில நிமிடங்கள் கழித்து பீரிஸுடன் சேர்ந்த ஜிமோஹ் முதல் கோலை புகுத்தினார்.  

தொடர்ந்து விரைவாகவே பெலிகன்ஸ் அணிக்கு கோல் வாய்ப்பு ஒன்று கிட்டியது. மரியதாஸ் நிதர்ஷன் கோல் முயற்சி ஒன்றில் ஈடுபட்டபோதும்  ரினௌன் கோல்காப்பாளர் ராசிக் ரிஷாத் தடுத்தார்.

பெலிகன்ஸ் அணிக்கு கோல் போடும் வாய்ப்பு ஒன்று கிடைத்தபோதும் அதனை அவ்வணி வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை.   

ரினௌன் அணிக்காக இப்ராஹிம் ஜிமோஹ் அடுத்தடுத்து இரண்டு கோல்களை பெற்றதன் மூலம் அந்த அணி போட்டியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அவரது மூன்றாவது கோல், கோல் கம்பத்திற்கு தொலை தூரத்தில் இருந்து உதைத்த பந்து எதிரணி கோல்காப்பாளரையும் முறியடித்து கோலாக மாறியது.

முதல் பாதி: ரினௌன் விளையாட்டுக் கழகம் 4 – 0 பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதி ஆட்டத்தில் பெலிகன்ஸ் அணி சிறப்பாக செயற்பட ஆரம்பித்ததோடு ரினௌன் வீரர்களின் மோசமான பந்து பரிமாற்றத்தை தமக்கு சாதமாக பயன்படுத்திக்கொள்ள அந்த அணியின் மத்தியகள வீரர்கள் முயன்றனர். எனினும் பெலிகன்ஸ் வீரர்கள் நீண்ட தூரத்தில் இருந்து பந்தை உதைத்து கோல் பெறும் முயற்சிகள் வெற்றி அளிக்கவில்லை.

சுபர் சன் – நியு யங்ஸ் இடையிலான ஆரம்பப் போட்டி சமநிலையில் நிறைவு

முதல் பாதியில் சரியாக நிலைகொள்ளாத பெலிகன்ஸ் மத்தியகள வீரர்கள் இரண்டாவது பாதியில் ரினௌன் அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். எனினும் இரண்டாவது பாதியில் கோல் பெறுவது இரு அணிகளுக்கும் கடினமாக இருந்தது. பெலிகன்ஸ் மத்திய களத்தில் மொஹமட் சப்ரி வலுவாக செயற்பட்டபோதும் அவரால் குறிப்பிடும்படியாக பந்தை பரிமாற்ற முடியாமல்போனது.   

ரினௌன் பெனால்டி எல்லைக்கு வெளியில் பெலிகன்ஸுக்கு பிரீ  கிக் வாய்ப்பு ஒன்று கிட்டியபோது அந்த அணி கோல் பெறுவதற்கு சந்தர்ப்பம் அதிகமாக இருந்தது. எனினும் அந்த உதை கோல் கம்பத்திற்கு மேலால் சென்றபோது பெலிகன்ஸ் பயிற்சியாளர் இசுரு பெரேரா கோபத்தில் துள்ளிக்குதித்ததை பார்க்க முடிந்தது.

போட்டி முடியும் தருவாயில் கோட்பிரெட் இடது மேல் மூலையில் இருந்து உதைத்த பந்து வளைந்து செல்ல அது ரினௌனின் இரு பின்கள வீரர்களை தவறான திசையில் செலுத்தி கோலாக மாறியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றபோதும் ரினௌன் பயிற்றுவிப்பாளர் மொஹமட் அமானுல்லாஹ் தனது அணி இரண்டாவது பாதியில் வெளிப்படுத்திய ஆட்டம் பற்றி அதிருப்தியில் இருந்தார்.        

முழு நேரம்: ரினௌன் விளையாட்டுக் கழகம் 4 – 1 பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகம்

ThePapare.com போட்டியின் சிறந்த வீரர்: இப்ராஹிம் ஜிமோஹ்

  • கோல் பெற்றவர்கள்

ரினௌன் விளையாட்டுக் கழகம் – டிலிப் பீரிஸ் 6′, இப்ராஹிம் ஜிமோஹ் 21′, 30′, 45′

பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகம் – கொப்பினா கொட்பிரெட் 88′

  • மஞ்சள் அட்டை பெற்றவர்கள்

ரினௌன் விளையாட்டுக் கழகம் – திமுத்து பிரியதர்ஷன 51′

பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகம் – மொஹமட் சப்ரி 11′

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க