30 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்ச்சியான மெய்வல்லுனர் போட்டிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் இன்று (27) மாத்தறை கொடவில விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் நடைபெற்றிருந்தன.
இதில் 32 நிகழ்ச்சிகளுக்கான இறுதிப் போட்டிகள் இன்றைய தினம் இடம்பெற்றிருந்ததுடன், மைதானம் மற்றும் சுவட்டு நிகழ்ச்சிகளில் 5 போட்டிச் சாதனைகள் நிலைநாட்டப்பட்டிருந்தன. போட்டிளின் முதல் நாளன்று 20 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் 3 போட்டி சாதனைகளும், இரண்டாவது நாளில் 2 போட்டிச் சாதனைகளும் முறியடிக்கப்பட்டன.
30ஆவது தேசிய விளையாட்டு விழா: முதல் நாளில் மூன்று போட்டி சாதனைகள்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் 30 ஆவது தேசிய…
காலி மாவட்டத்தைச் சேர்ந்த தரிந்து தசுன், 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல், மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த அருண தர்ஷன, 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் மற்றும் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த இசுரு லக்ஷான், 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஆகிய போட்டிகளில் தேசிய இளைஞர் விளையாட்டு விழாவுக்கான புதிய சாதனைகளை நிலைநாட்டியிருந்தனர்.
இது இவ்வாறிருக்க, போட்டிகளின் 2 ஆவது நாளில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சானி புலவங்ச, 20 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தலில் 5.96 மீற்றர் தூரம் பாய்ந்து இளைஞர் விளையாட்டு விழாவுக்கான புதிய சாதனையை நிகழ்த்தினார்.
களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.என் சொய்ஸா என்ற வீராங்கனையால் (5.79 மீற்றர்) நிலைநாட்டிய சாதனையை சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு அவர் முறியடித்தார்.
20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த பி.ஆர் குணதிலக்க 15.24 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
இதேவேளை, குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த பசிந்து லக்ஷான் கொடிக்கார, 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 48.58 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இது இவ்வாறிருக்க, கடந்த 2 தினங்களாக நடைபெற்ற போட்டிகளில் மலையகத்தைச் சேர்ந்த வீரர்கள் ஒரு தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களையும், வட மாகாண வீரர்கள் 3 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
பிரவீனுக்கு முதல் தங்கம்
20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியை 4 நிமிடங்கள் 07.89 செக்கன்களில் நிறைவு செய்த நுவரெலிய மாவட்டத்தைச் சேர்ந்த செல்வரத்னம் பிரவீன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
அரை மரதன், 10 ஆயிரம் மற்றம் 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டிளில் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற 21 வயதான பிரவீன், தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் வென்றெடுத்த முதல் பதக்கம் இதுவாகும்.
அத்துடன், இவர் தேசிய மட்ட மரதன் மற்றும் நகர்வல ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பெற்று வருகின்ற எஸ்.சந்திரதாஸின் சகோதரரும் ஆவார்.
வக்ஷானுக்கு முதல் பதக்கம்
30 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின. இதில் முதல் போட்டியாக 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டி நடைபெற்றது.
இதில் பங்குகொண்ட நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த வி. வக்ஷான், வெள்ளிப் பதக்கம் வென்றார். போட்டித் தூரத்தை கடக்க 33 நிமிடங்கள் 19.89 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.
குறித்த போட்டிப் பிரிவில் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த எச்.ஏ தரங்க (32 நிமி. 38.57 செக்.) தங்கப் பதக்கத்தையும், கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பி.ஏ சந்தருவன் (33 நிமி. 45.29 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
அரவிந்தன் அபாரம்
20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரகுமார் அரவிந்தன், வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார். போட்டியை அவர் 2 நிமிடங்களும் 00.39 செக்கன்களில் கடந்தார்.
இறுதியாக இம்மாத முற்பகுதியில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்த பதுளை சரஸ்வதி தேசிய பாடசாலையைச் சேர்ந்த அரவிந்தன், புதிய வர்ண சாதனையுடன் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இதேநேரம், குறித்த போட்டியில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த இசுரு லக்ஷான் (ஒரு நிமி. 55.20 செக்.) புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
2 வெள்ளிகள் வென்ற விதூஷா
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். விதூஷா, போட்டிகளின் முதல் நாளான நேற்று நடைபெற்ற 20 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். போட்டியை நிறைவுசெய்ய 20 நிமிடங்கள் 59.64 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.
அத்துடன், தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் விதூஷா வென்றெடுத்த முதலாவது பதக்கம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கட்புலனற்றோர் அணியை வைட்-வொஷ் செய்த இந்திய கட்புலனற்றோர் அணி
இந்திய கட்புலனற்றோர் அணிக்கு எதிராக இன்று (27) நடைபெற்ற மூன்றாவது…
இது இவ்வாறிருக்க, போட்டிகளின் 2 ஆவது நாளில் நடைபெற்ற பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்குகொண்ட அவர், போட்டியை 5 நிமிடங்கள் 32.2 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.
நிதூஜனுக்கு இரட்டைப் பதக்கம்
யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட என். நிதூஜன், 6.86 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்த நிலையில், போட்டிகளின் இரண்டாவது நாளில் நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியிலும் பங்குகொண்ட நிதூஜன், 1.80 மீற்றர் உயரம் தாவி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான நிதூஜன், மாகாண மட்ட மற்றும் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பெற்று வருகின்ற அதேநேரம், தேசிய இளைஞர் சேவைகள் விளையாட்டு விழாவில் முதல் தடவையாக 2 பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
டென்சிகாவுக்கு 3ஆவது இடம்
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த டி. டென்சிகா, 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார். போட்டியை நிறைவு செய்ய 2 நிமிடங்கள் 29.87 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.
உயரம் தொட்ட பவித்ரா
20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் பங்குகொண்ட கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பி. பவித்ரா வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார். போட்டியில் அவர் 1.50 மீற்றர் உயரத்தை தாவியிருந்ததுடன். அவருடன் போட்டியிட்ட கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த இம்ஷா உதானி, அதே அளவு உயரத்தைத் தாவி சம இடத்தைப் பகிர்ந்து கொண்டார்.
சுஜீபாவுக்கு வெண்கலப் பதக்கம்
யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்திரன் சுஜீபா, போட்டிகளின் 2 ஆவது நாளான இன்று நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றெடுத்தார். போட்டியில் அவர் 28.64 மீற்றர் தூரத்தை பதிவுசெய்தார்.
மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க