தேசிய இளைஞர் மெய்வல்லுனரில் கிழக்குக்கு ஒரு தங்கம் உட்பட 4 பதக்கங்கள்

578

தேசிய இளைஞர் விளையாட்டு விழா வரலாற்றில் முதல் தடவையாக அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய சாய்ந்தமருது பிரதேச இளைஞர் அணி, 4×100 அஞ்சலோட்டத்தில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தியது.

எனினும், போட்டியில் பங்குபற்றிய அணியொன்று முதலிடத்தைப் பெற்ற அம்பாறை மாவட்ட அணி விதிமுறைகளை மீறி போட்டியை நிறைவுசெய்ததாக ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதன் காரணமாக இன்றைய தினம் (27) அதன் முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தேசிய இளைஞர் மெய்வல்லுனர் இரண்டாம் நாள் முடிவுகள்

30ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளின் 2ஆவது நாளின் இறுதிப் போட்டியாக இன்று மாலை நடைபெற்ற 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான 4×100 அஞ்சலோட்டப் போட்டியில் மொஹமட் மஸ்பூத் தலைமையிலான கிழக்கு மாகாண அணி, போட்டித் தூரத்தை 44.00 செக்கன்களில் நிறைவு செய்து கிழக்கு மாகாணத்திற்கு 2ஆவது தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தனர்.

வழமையைப் போன்று ஒவ்வொரு தேசிய விளையாட்டு விழாவிலும் ஏட்டுக்குப் போட்டியாக முதலிரண்டு இடங்களைப் பெற்று வருகின்ற கொழும்பு மற்றும் குருநாகல் மற்றும் அநுராதபுரம் மாவட்ட அணிகளுக்கு கடந்த சில வருடங்களாக நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் போட்டியாக இருந்து வருகின்ற அம்பாறை மாவட்ட அஞ்சலோட்ட அணியில் இம்முறையும் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றிய அனுபவத்தைக் கொண்ட யூசுப் ரகீப், அஷாத் கான், சம்லி மற்றும் மஸ்பூத் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

மிகவும் விறுவிறுப்பாகவும், போட்டித் தன்மை மிக்கதாகவும் ஆரம்பமாகிய இப்போட்டியில் அனைத்து மாவட்டத்தையும் சேர்ந்த வீரர்கள் முதல் பெட்ன் (baton) பரிமாற்றத்தை மிக விரைவில் மேற்கொண்டிருந்தனர். இதில் முதலிரண்டு பெட்ன் பரிமாற்றத்திலும் சற்று பின்னடைவை சந்தித்திருந்த அம்பாறை மாவட்ட அணிக்கு 3ஆவது பெட்ன் பரிமாற்றத்தைப் பெற்றுக்கொண்ட அஹமட் சம்லி, மிக வேகமாகச் சென்று இறுதி 100 மீற்றருக்காக ஓடிய மஸ்பூத்திடம் பரிமாற்றினார்.

இதில் தனது அனுபவத்தை சாதகமாகப் பயன்படுத்திய மஸ்பூத், ஏனைய இரு அணிகளை காட்டிலும் 60 மீற்றர் தூர இடைவெளியில் போட்டியை நிறைவுசெய்து தங்கப் பதக்கம் வென்றார்.

எனினும், யாரும் எதிர்பாராத வகையில் போட்டியில் பங்குபற்றிய அணியொன்று முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட அம்பாறை மாவட்ட அணிக்காக இறுதியாக ஓடிய மஸ்பூத், தனது உடம்பை எல்லைக் கோட்டை தாண்டும் போது உள்நுழைக்கவில்லை என்றும், எல்லைக் கோட்டை தாண்டுவதற்கு தனது காலை மாத்திரம் பயன்படுத்தியதாகவும், போட்டி நடுவரிடம் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை கவனத்திற் கொண்ட நடுவர்கள், நாளைய தினம் இது தொடர்பிலான விசாரணைகளை வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களைப் பயன்படுத்தி மேற்கொண்ட பிறகு இறுதி முடிவை அறிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

  • உதயவானிக்கு தங்கம்

இம்முறை தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் முதல் நாளான நேற்று நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நாகேந்திரம் உதயவானி, 36.80 மீற்றர் தூரத்தை எறிந்து தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் முதல் தடவையாக தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இலங்கை கட்புலனற்றோர் அணியை வைட்-வொஷ் செய்த இந்திய கட்புலனற்றோர் அணி

கடந்த மே மாதம் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற மூதூர் பட்டித்திடல் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த நாகேந்திரம் உதயவானி, அதற்கு முன் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில்; (34.92 மீற்றர்ர) 2ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, இம்மாத முற்பகுதியில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்குபற்றியிருந்த அவர், 25.80 மீற்றர் தூரத்தை எறிந்து 5ஆவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார்.

இது இவ்வாறிருக்க, உதயவானியுடன் போட்டியிட்ட களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த வாசனா மெண்டிஸ் (33.31 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த எம். செவ்வந்தி (33.14 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.

  • நஹ்தீர், சிப்காருக்கு வெள்ளிப் பதக்கம்

20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 1.80 மீற்றர் உயரத்தை தாவி அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.பி.எம் நஹ்தீர் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இதேநேரம், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த எச்.எம் ரிஹான், 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் 56.28 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இந்த நிலையில், 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 110 சட்டவேலி ஓட்டத்தில் பங்குகொண்ட அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.ஜே சிப்கார், வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.

இதேநேரம், கடந்த 6 வருடங்களாக அம்பாறை மாவட்ட மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளர் எஸ்.எல் தாஜுதீன் மற்றும் தேசிய மெய்வல்லுனர் தொழில்நுட்ப உத்தியோகத்தரும், உடற்கல்வி ஆசிரியருமான எம்.எம் அஸ்மியிடம் பயிற்சிகளைப் பெற்றுவருகின்ற சிப்கார், தேசிய மட்டப் போட்டியொன்றில் முதல் தடவையாக பதக்கம் வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இம்மாத முற்பகுதியில் கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் கிண்ணியா மத்திய கல்லூரி சார்பாக போட்டியிட்ட ரிஹான், 59.98 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடரை வைட்-வொஷ் செய்த பங்களாதேஷ்

  • நுஸ்ரத்துக்கு வெள்ளிப் பதக்கம்

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ. நுஸ்ரத் பாணு, 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதலில் 26.09 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார். தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் நுஸ்ரத் வென்றெடுத்த முதல் பதக்கம் இதுவாகும்.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவியான நுஸ்ரத், குண்டு எறிதல், தட்டெறிதல் மற்றும் பளுதூக்கல் போட்டிகளில் மாகாண மட்ட சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனரில் திருகோணமலை மெய்வல்லுனர் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட நுஸ்ரத் பாணு, வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க