ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடரை வைட்-வொஷ் செய்த பங்களாதேஷ்

241

இம்ருல் கைஸ் மற்றும் சௌம்யா சர்கார் ஆகியோரது அபார சதத்தின் மூலம் ஜிம்பாப்வே அணியுடனான மூன்றாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டியிலும் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இதன் மூலம் இந்த ஒருநாள் தொடரை பங்களாதேஷ் அணி 3-0 என முழுமையாக வைட் வொஷ் செய்தது.

சித்தகோனில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இம்ருல் கைஸ் 112 பந்துகளுக்கு 115 ஓட்டங்களை பெற்றதோடு சௌம்யா சர்கார் 92 பந்துகளில் 117 ஓட்டங்களை பெற்றார். இதன் மூலம் சோன் வில்லியம்ஸ் ஆட்டமிழக்காது 129 ஓட்டங்களை பெற்றதன் மூலம் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளை இழந்து 286 ஓட்டங்களை பெற்று நிர்ணயித்த வெற்றி இலக்கை பங்களாதேஷ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து அடைந்துள்ளது.

ஜிம்பாப்வேயை மீண்டும் இலகுவாக வீழ்த்திய பங்களாதேஷ் தொடர் வெற்றி

சற்று சவால் கொண்ட இலக்கை நோக்கி துடுப்பாடிய பங்களாதேஷ் அணி முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுத்தது. கால் ஜார்விஸின் பந்துக்கு லிட்டோன் தாஸ் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். எனினும் இம்ருல் கைஸ் மற்றும் சௌம்யா சர்கார் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 220 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.   

சிறப்பாக துடுப்பாடிய சௌம்யா சர்கார் ஒன்பது பௌண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்களை விளாசி தனது இரண்டாவது சதத்தை எட்டினார்.    

ஜிம்பாப்வே அணி இரண்டாவது விக்கெட்டை வீழ்த்த 30 ஆவது ஓவர் வரை காத்திருக்க வேண்டி ஏற்பட்டது. ஹமில்டன் மசகட்ஸாவின் பந்துக்கு சௌம்யா சர்கார் பௌண்டரி எல்லையில் இருந்த டொனால்ட் ட்ரிபானோவிடம் பிடிகொடுத்தார். எனினும் இம்ருல் கைஸ் தொடர்ந்து களத்தில் இருந்து இந்த தொடரில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார்.

இம்ருல் கைஸ் தனது சதத்தை எட்ட 10 பௌண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை விளாசினார். இந்த தொடரின் முதல் இரு போட்டிகளிலும் அவர் 144 மற்றும் 90 ஓட்டங்களை பெற்றார். இதன் மூலம் இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் அவர் மொத்தமாக 349 ஓட்டங்களை பெற்றார். இது மூன்று போட்டிகள் கொண்ட இரு தரப்பு ஒருநாள் தொடர் ஒன்றில் பங்களாதேஷ் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகும். பாகிஸ்தான் அணிக்கு எதிராக 2015 இல் தமீம் இக்பால் 312 ஓட்டங்களை பெற்று படைத்த சாதனையையே அவர் முறியடித்தார்.  

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஜிம்பாப்வே அணிக்காக சோன் வில்லியம்ஸ் மூன்றாவது விக்கெட்டுக்கு பிரென்டன் டெய்லருடன் இணைந்து 132 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றதன் மூலம் ஜிம்பாப்வே அணி 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இருந்த நெருக்கடியில் இருந்து மீண்டது.

6 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது வேகப்பந்து வீச்சாளர் அபூ ஹைதர் தவறவிட்ட பிடியெடுப்பை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பிரென்டன் டெய்லர் 75 ஓட்டங்களை பெற்றார். இதற்காக அவர் 8 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசினார்.    

தனது இரண்டாவது ஒருநாள் சதத்தை பெற்ற சோன் வில்லியம்ஸ் 10 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசியதோடு 143 பந்துகளுக்கு முகம்கொடுத்தார்.

இங்கிலாந்துடனான T20 போட்டியிலிருந்து விலகும் அகில தனன்ஜய, குசல் பெரேரா

இந்த இரு அணிகளும் தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளன. இதன் முதல் போட்டி நவம்பர் 3 ஆம் திகதி சிஹட்டில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

ஜிம்பாப்வே – 286/5 (50) – சோன் வில்லியம்ஸ் 129*, பிரென்டன் டெய்லர் 75, சிகந்தர் ராசா 40, நஸ்முல் இஸ்லாம் 2/58

பங்களாதேஷ் – 288/3 (42.1) – சௌம்யா சார்கர் 117, இம்ருல் கைஸ் 115, மசகட்ஸா 1/3

முடிவு – பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<