ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆறுதல் வெற்றியை தேடும் இலங்கை

1306

இலங்கை கிரிக்கெட் அணி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் கடந்த இரண்டு வருடங்களாக அடைந்து வரும் தொடர் தோல்வி இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் நீடித்துள்ளது. தொடரில் ஏற்கனவே நடைபெற்ற நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த இலங்கை 0-3 தொடரை என இழந்துள்ளது.

இவ்வாறான நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நாளை (23) பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது. தொடரை இழந்துள்ள இலங்கை அணி ஆறுதல் வெற்றிக்காக நாளைய போட்டியில் களமிறங்குகிறது.

திசரவுடன் இறுதிவரை துடுப்பெடுத்தாடியிருந்தால் போட்டியின் முடிவை மாற்றியிருக்கலாம் – தசுன் சானக

ஒருநாள் போட்டிகளை நோக்கும் போது, இலங்கை அணி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமையை கடந்த இரண்டு வருடங்களில் வெளிவந்துள்ள முடிவுகள் வெளிச்சமிட்டு காட்டுகின்றன.  இரண்டு வருடங்களில் 50 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை 34 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதுடன், 13 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது.

அத்துடன், கடந்த வருடம் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முதன் முறையாக இழந்த இலங்கை அணி, அதனை தொடர்ந்து 7 ஒருநாள் தொடர்களில் விளையாடியுள்ளதுடன் (ஆசிய கிண்ணம் உட்பட) அதில் இரண்டு வைட்-வொஷ் அடங்கலாக 6 தொடர்களில் தோல்வியை தழுவியுள்ளது. முக்கியமாக ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றிலிருந்தும் இலங்கை வெளியேறியிருந்தது.

தென்னாபிரிக்க அணியுடனான தொடரின் இறுதி 2 போட்டிகளிலும் வெற்றிபெற்று நம்பிக்கையை வளர்த்திருந்த இலங்கை அணி, இங்கிலாந்து அணியிடம் தொடரை இழந்து மீண்டும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. இப்போது இலங்கை அணிக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இறுதி ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று, முற்றுமு ழுதான தோல்வியை தவிர்க்க வேண்டும் என்பதே.

நான்காவது போட்டியில் இலங்கை அணிக்கு சில நம்பிக்கை அளிக்கக்கூடிய விடயங்கள் நிகழ்ந்திருந்தன. ஆரம்ப துடுப்பாட்டம் சறுக்கிய நிலையிலும் நிரோஷன் டிக்வெல்ல, தினேஷ் சந்திமால், தசுன் சானக, தனன்ஜய டி சில்வா, திசர பெரேரா மற்றும் அகில தனன்ஜய ஆகியோரின் இணைப்பாட்டங்கள் அணிக்கு வலுவளித்திருந்தது. இதனிடையே நான்கு அரைச்சத இணைப்பாட்டங்கள் மற்றும் 273 ஓட்டங்களை குவித்தமை என்பன நாளைய போட்டியில் துடுப்பாட்டத்துக்கு வலுச்சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, இறுதிப் போட்டியில் இலங்கை அணி சார்பில் அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரர் அகில தனன்ஜய. சிறந்த சகலதுறை வீரராக வளர்ந்து வரும் இவர், ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இவ்வருடம் ஒரு போட்டியில் மாத்திரம் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணி 178 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றிருந்தது. இதற்கு முக்கிய காரணமான அகில தனன்ஜய (29/6) போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவுசெய்யப்பட்டார். இதனால் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இதேவேளை இங்கிலாந்து அணியை பொருத்தவரையில் தொடர் முழுவதிலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது.  2007-2008 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் பெறும் முதல் ஒருநாள் தொடர் வெற்றியாக இந்த தொடர் பதிவாகியுள்ளது. குறித்த காலப்பகுதிக்கு பின்னர் 2014 ஆம் ஆண்டு இலங்கை வந்திருந்த இங்கிலாந்து அணி 5-2 என ஒருநாள் தொடரை இழந்திருந்தது. தற்போது சுமார் 10 வருடங்களுக்கு பின்னர் இலங்கையில் வைத்து ஒருநாள் தொடரொன்றை கைப்பற்றியுள்ளது.

தற்போது, இங்கிலாந்து அணியின் ஒரே இலக்கு இலங்கை அணியை முற்றுமுழுதாக தோல்வியடையச் செய்து ஒருநாள் தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதே ஆகும். இலங்கை பந்து வீச்சாளர்களை இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் எதிர்கொள்ளும் விதம், துடுப்பாட்ட யுத்திகள், பந்து வீச்சு பலம் என்பன இலங்கை அணியின் வெற்றிக்கு முட்டுக்கட்டையாக உள்ளன.

2023 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்துக்கான புதிய தகுதிகாண் சுற்று முறை அறிமுகம்

அது மாத்திரமின்றி இலங்கை அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தக் கூடியவாறு அணித் தலைவர் இயன் மோர்கனின் துடுப்பாட்டம் அமைந்து வருகின்றது. கடந்த நான்கு போட்டிகளிலும் துடுப்பெடுத்தாடிய இவர் ஒரு போட்டியில் மாத்திரமே ஆட்டமிழந்துள்ளார். இதனிடையே 195 என்ற சராசரியில் 195 ஓட்டங்களை குவித்து தொடரில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

இவ்வாறு இங்கிலாந்து அணி பலமான நிலையில் இருந்தாலும், ஆர்.பிரேமதாஸ மைதானத்தை பார்க்கும் போது இலங்கை அணிக்கு அதிக சாதகம் நிறைந்த மைதானமாகவே பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் இலங்கை அணி 107 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 65 போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கிறது. அதுமாத்திரமின்றி இங்கிலாந்து அணியுடன் 9 போட்டிகளில் மோதி 8 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளது.

இலங்கை அணியின் ஒருநாள் போட்டி முடிவுகள் (ஆர்.பிரேமதாஸ)

  • போட்டிகள் –  107
  • வெற்றி – 65
  • தோல்வி – 35

இலங்கை எதிர் இங்கிலாந்து ஒருநாள் போட்டி முடிவுகள் (ஆர்.பிரேமதாஸ)

  • போட்டிகள் – 9
  • இலங்கை – 8 வெற்றிகள்
  • இங்கிலாந்து – 1 வெற்றி

இதன்படி சொந்த மண்ணில் தங்களுக்கு அதிகம் சாதகமான முடிவுகளை வழங்கிய ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நாளை (23) இங்கிலாந்து அணியை இலங்கை எதிர்கொள்கிறது. அத்துடன்,  இறுதியாக இந்த மைதானத்தில் விளையாடிய ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி பாரிய வெற்றியைப் (178 ஓட்டங்களால் வெற்றி vs தென்னாபிரிக்கா) பெற்றுள்ளது. இந்த நம்பிக்கையுடன் தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இலங்கை அணி ஆறுதல் வெற்றியை பெறுமா? அல்லது இங்கிலாந்து அணி நாளையும் வெற்றிபெற்று இலங்கைக்கு மீண்டுமொரு தோல்வியை பரிசாக வழங்குமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

மைதான காலநிலை (ஆர்.பிரேமதாஸ)

கொழும்பை பொருத்தவரையில் காலநிலையானது, நாளைய போட்டிக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை குறுக்கிட்டாலும்,  இதனால் போட்டிக்கு மிகப்பெரிய பாதிப்பு இருக்காது என்பதுடன், போட்டியில் முடிவை எதிர்பார்க்க முடியும்.

ஐந்தாவது போட்டிக்கான இலங்கை உத்தேச பதினொருவர்

உபுல் தரங்க, நிரோஷன் டிக்வெல்ல, தனன்ஜய டி சில்வா, தினேஷ் சந்திமால் (தலைவர்), தசுன் ஷானக, திசர பெரேரா, அகில தனன்ஜய, லக்ஷான் சந்தகன், துஷ்மந்த சமீர, லசித் மாலிங்க

ரோகித் ஷர்மா மற்றும் கோஹ்லியின் அதிரடியால் இந்திய அணிக்கு அபார வெற்றி

ஐந்தாவது போட்டிக்கான இங்கிலாந்து உத்தேச பதினொருவர்

ஜேசன் ரோய், ஜொனி பெயார்ஸ்டோவ், ஜோ ரூட், இயன் மோர்கன் (தலைவர்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயின் அலி, ஆதில் ரஷீட், லியாம் பிளங்கட், மார்க் வூட், டொம் கரன்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…