சிலாபத்திலிருந்து ஆசியாவை வெல்ல தாய்லாந்துக்குச் சென்று, அங்கு இருந்து உலகை வெல்வதற்கு ஆர்ஜென்டீனா வரை சென்ற 17 வயதான பாரமி வசந்தி மாரிஸ்டெலா, இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை வென்று கொடுத்த வீராங்கனையாக வரலாற்றில் இடம்பிடித்துவிட்டார்.
இலங்கையின் முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனையும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான சுசந்திகா ஜயசிங்க 2007 உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் பெற்றுக்கொண்ட வெண்கலப் பதக்கத்திற்குப் பிறகு, அதாவது சுமார் 11 வருடங்களுக்குப் பிறகு சர்வதேச மெய்வல்லுனர் போட்டியொன்றில் இலங்கை வீரர் ஒருவரால் பெற்றுக்கொள்ளப்பட்ட முதலாவது பதக்கமாகவும் இது சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது.
இளையோர் ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்ற இளம் வீராங்கனை பாரமி வசந்தி
ஆர்ஜெண்டீனாவின் தலைநகர் புவனர்ஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்று வரும் 3 ஆவது கோடை கால இளையோர் ஒலிம்பிக்……
இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 6ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை அர்ஜெண்டீனாவின் தலைநகர் புவனர்ஸ் அயர்ஸ் நகரில் ஆரம்பமாகியது. இதில், 206 நாடுகளைச் சேர்ந்த 4,000 வீர வீராங்கனைகள் கலந்துகொன்டிருந்தனர். இலங்கை சார்பில் 13 வீரர்கள் 7 வகையான விளையாட்டுக்களில் பங்கேற்றனர்.
இதுஇவ்வாறிருக்க, இம்முறை இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் பிரதான பதக்க எதிர்ப்பாக அமைந்த மெய்வல்லுனர் போட்டிகளில் 4 வீரர்கள் பங்கேற்றிருந்ததுடன், பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் போட்டி முக்கிய இடத்தை வகித்தன.
இந்த நிலையில், பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் உலக தரவரிசையில் முதல் 3 இடங்களுக்குள் இடம்பெற்றிருந்த பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டலின் முதல் நிலைப் போட்டியில் பங்குபற்றியிருந்தார்.
பதினேழு வீராங்கனைகள் பங்கேற்ற குறித்த போட்டியை 6 நிமிடங்களும் 33.06 செக்கன்களில் நிறைவுசெய்த பாரமி, அதிசிறந்த காலப் பெறுமதியைப் பதிவுசெய்து மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
இதுஇவ்வாறிருக்க, சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் புதிய விதிமுறைகள் பிரகாரம் 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியின் முதல் நிலையில் பங்குபற்றிய வீரர்கள் அனைவரும் 4 கிலோமீற்றர் நகர்வல ஓட்டத்திலும் பங்குபற்றியிருந்தனர். இந்தப் போட்டியில் பங்குகொண்ட பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, போட்டித் தூரத்தை 13.47.00 செக்கன்களில் நிறைவுசெய்து ஒட்டுமொத்த வீரர்கள் அடிப்படையில் 17ஆவது இடத்தையும், 2000 மீற்றர் தடைதாண்டல் போட்டிப் பிரிவில் 4ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.
இதன்படி, இரண்டு நிலைகளைக் கொண்ட போட்டியாக அமைந்த பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டலில் வீரர்கள் பெற்ற ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் 3ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்ட பாரமி, வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார்.
அத்துடன், முதல் நிலையில் முதலிடத்தையும், நகர்வல ஓட்டத்தில் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்ட சிரோனோ பென்சி தங்கப் பதக்கத்தையும், முதல் நிலையில் 2ஆவது இடத்தையும், நகர்வல ஓட்டத்தில் 11ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்ட எத்தியோப்பியாவைச் சேர்ந்த அபீபி மீகிட்ஸ் வெள்ளிப் பதக்கத்தினையும் பெற்றுக் கொண்டனர்.
பாரமி உள்ளிட்ட இந்த இளம் வீர வீராங்கனைகளால் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றிகளானது மீண்டும் ஒருமுறை இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்றுவிட்டது என்றால் மிகையாகாது.
இன்று முழு நாடும் பாரமியின் இந்த வெற்றியைக் கொண்டாடிக் கொண்டும், அவருக்கு வாழ்த்துக்களை சொல்லிக் கொண்டும் இருக்கின்ற இத்தருணத்தில் பாரமியின் வெற்றிக்கான அனைத்து கௌரவமும் முழுக்க முழுக்க அவரது பெற்றோரையே சாறும் என்றால் மிகையாகாது. அதேபோல, மிகவும் பின்தங்கிய கிராமத்தில் இருந்து வந்து மெய்வல்லுனர் விளையாட்டில் காலடிவைத்த பாரமி, பல கஷ்டங்கள், தியாகங்களையெல்லாம் செய்து இன்று வெற்றி சாதனை நாயகியாக எம் மத்தியில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றார்.
இளையோர் ஒலிம்பிக்கில் ஷெலிண்டாவுக்கு முதலிடம் : உலகில் 9ஆவது இடம்
ஆர்ஜென்டீனாவின் புவனர்ஸ் அயேர்ஸில் நடைபெற்றுவரும் 3ஆவது கோடைகால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப்…….
இதுஇவ்வாறிருக்க, இம்முறை இளையோர் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா உள்ளிட்ட இலங்கை குழாத்தினர் நேற்று (20) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
விளையாட்டுத்துறை அமைச்சும், கல்வி அமைச்சும் இணைந்து இந்த வீரர்களை கௌரவிக்கும் முகமாக விசேட நிகழ்வொன்றை அங்கு ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது, ஒலிம்பிக் பதக்கம் வென்ற பாரமி வசந்திக்கு அமோக வரவேற்பும் வழங்கப்பட்டது.
அம்பகந்தவில சரப்பு தோட்டத்தில் வசித்து வருகின்ற 17 வயதான பாரமி வசந்தி மாரிஸ்டெல்லாவின் தந்தையின் பெயர் கே.எம் அந்தோனி டியுடர் பெர்னாண்டோ (49 வயது). அவருடைய தந்தை மீன்பிடித் தொழில் செய்து வருகின்றார். தாயாரின் பெயர் எம். ரீடா பெர்னாண்டோ (43 வயது), அக்கா ஒரு மெய்வல்லுனர் வீராங்கனை. தேசிய மட்டத்தில் 800 மற்றும் 1500 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்தவர். அவருடைய பெயர் தில்ஹானி பெர்னாண்டோ.
பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் சுமார் 10 வருடங்கள் பழமையான கனிஷ்ட சாதனையை 2014ஆம் ஆண்டு அவர் முறியடித்தார். அதற்குமுன் 2013இல் சீனாவில் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் தற்போது சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்று வருகின்றார். அவருடைய சகோதரர் திருமணம் முடித்து தனியாக வாழ்ந்து வருகின்றார்.
பாரமிக்காக தியாகம் செய்த பெற்றோர்
தமது மகளின் திறமையை சிறுவயதிலேயே இனங்கண்டு அதற்கு எப்போதும் முன்னுரிமை கொடுத்த பாரமியின் பெற்றோர், இம்முறை நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக்கிலும் அவர் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தாம் வசிக்கின்ற சொந்த வீட்டை வங்கியில் அடகு வைத்து அந்தப் பணத்தை மகளின் வெற்றிப் பயணத்துக்காக பயன்படுத்தி அதற்கான பிரதிபலனை பெற்றுவிட்டனர்.
சிறுவயது முதல் அக்காவின் தனிமைக்காக சிலாபம், அம்பகந்தவில கடற்கரையில் ஓடிய பாரமி, இன்று இளையோர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கமொன்றை வெற்றி கொண்டார் என்பதை கேட்டவுடன் நாம் மட்டில்லா சந்தோஷமடைந்தோம். பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தான் எனது மகள் இந்த பதக்கத்தை பெற்றுக்கொண்டார் என பாரமியின் பெற்றோர் தமது மகளின் வெற்றி குறித்து பேசியிருந்தனர்.
யாருடைய தயவும் இல்லாமல் மகளை இந்த அளவு தூரத்துக்கு அழைத்து வந்தததையிட்டு பெற்றோராக நாம் பெருமிதம் கொள்கிறோம். எனது கணவர் மீன்பிடித் தொழில் செய்கின்றார். எமக்கு இரண்டு மகள்மார் உள்ளனர். இருவரும் மெய்வல்லுனர் விளையாட்டுக்கு அதிக திறமை கொண்டவர்கள். மூத்த மகள் கல்வியோடு அதிக ஈடுபாடு கொண்டவராக இருப்பதால் அவர் மெய்வல்லுனர் போட்டிகளை இடைநடுவில் விட்டுவிட்டார். ஆனால் அவரைப் பார்த்து வளர்ந்த இளைய மகள் பாரமி, எப்போதும் மெய்வல்லுனர் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். பாடசாலை மட்டத்தில் இடம்பெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் அவர் திறமைகளை வெளிப்படுத்தி வந்தார். இதனால், அம்பந்தவல புனித ரோகுஸ் கல்லூரியில் கற்றுவந்த எனது மகளுக்கு குளியாப்பிட்டிய மத்திய கல்லூரியில் கல்வி கற்பதற்கு புலமைப்பரிசில் ஒன்று கிடைத்தது. அந்த பாடசாலையில் இருந்த மெய்வல்லுனர் பயிற்றுனரான ஜனித் ஜயசிங்கவின் முயற்சியினால் எனது இரு மகள்களும் சர்வதேசப் போட்டிகள் வரை சென்று வெற்றிகளைப் பெற்றுக்கொண்டனர்.
சர்வதேச மெய்வல்லுனர் போட்டியொன்றுக்காக 2016இல் பாரமி, ரஷ்யாவுக்குச் சென்றார். ஆனால் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் கடன்பட்டு நாம் அவரை அனுப்பிவைத்தோம். எனினும், இதற்குப் பிறகு அவரை விளையாட்டில் ஈடுபடுவதை நிறுத்துவதற்கு நாம் தீர்மானித்தோம். ஆனால், தான் விளையாட்டை கைவிட்டு கல்வியை முன்னெடுப்பதாகவும், தங்கையை விளையாட்டில் தொடர்ந்து முன்செல்வதற்கு வசதிகளை செய்துகொடுப்போம் என அவருடைய அக்கா சொன்னார். பாரமிக்காக அவருடைய விளையாட்டையே அக்கா தியாகம் செய்தார். அதேபோல பாரமியின் விளையாட்டு செலவுக்காக பல பேரிடம் கடன் பெற்றோம். அவருக்கு போசனைமிக்க பால்மா உள்ளிட்ட விட்டமின்களை வாங்கிக் கொடுக்க நாம் பட்டினியில் இருந்த சந்தர்ப்பங்கள் ஏராளம் ஏராளம்.
ஆனால், பாரமியின் திறமைக்கு நாம் ஒருபோதும் தடையாக இருக்கவில்லை. அவருடைய அனைத்து தேவைகளையும் நாங்கள் செய்து கொடுத்தோம். எமக்கு உதவிய செய்ய எவரும் முன்வரவில்லை. எங்களிடம் பணம் இல்லை என்று மகளுக்கு குறைவைக்கவில்லை. அவருக்கான தேவைகளை தேடித் தேடி செய்தோம்.
கடற்கரைக்கு அருகாமையில் உள்ள ஒரு சிறிய வீட்டில் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். சிறிய மழையொன்று பெய்தவுடன் எமது வீடு முழுவதும் தண்ணீர் நிரம்பி விடும். ஆனால் எமது பிள்ளைகளின் கல்வி மற்றும் விளையாட்டு செலவுகளுக்காக பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இவ்வருட முற்பகுதியில் எமது வீட்டை கிராமிய வங்கியில் 2 அரை இலட்சம் ரூபாவுக்கு அடகு வைத்தோம். அதை மீட்டெடுக்க இன்னும் ஒரு இலட்சம் ரூபா பணத்தை செலுத்த வேண்டும். எதுஎவ்வாறாயினும், எனது மகளின் திறமையைப் பார்த்து இங்கிலாந்தில் தொழில் புரிகின்ற, தெஹிவளையைச் சேர்ந்த தனவந்தர் ஒருவர் எமது வீட்டின் பத்திரத்தை மீட்டுக் கொடுத்தார்.
தேசிய விளையாட்டு விழா முதல் நாளில் சண்முகேஸ்வரன், ஆஷிக் ஹெரீனாவுக்கு பதக்கம்
விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள வருடத்தின் மிகப் பெரிய…….
இதேநேரம், ஜப்பானில் கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் எனது மகள் தங்கப் பதக்கத்தை வென்று நாடு திரும்பிய போது வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸ எமக்கான வீடொன்றைப் பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதி இன்னும் செய்து தரப்படவில்லை என்றாலும், எமது வீட்டையாவது செய்து தாருங்கள் என கேட்டுக் கொள்கின்றோம். அதேபோல, 15 இலட்சம் ரூபா பெறுமதியான நிரந்தர வங்கிக் கணக்கொண்றை ஜனாதிபதி ஆரம்பித்து தந்தார். ஆனால், அதில் இருந்து மாதாந்தம் 10 ஆயிரம் பணம் தான் எங்களுக்கு கிடைக்கின்றது. அது பாரமியின் செலவுகளுக்கு போதாது.
இதுஇவ்வாறிருக்க, தற்போது எனது மகள் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பிறகு எமது வீட்டைக் கட்டித் தருவதாகவும், பாரமிக்கு கொழும்பில் தங்கியிருந்து பயிற்சிகள் பெறுவதற்காக தொடர் மாடியிருப்பில் ஒரு வீட்டைப் பெற்றுக்கொடுப்பதாகவும் அவர் மீண்டும் எமக்கு வாக்குறுதியளித்தார். உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளதுடன், அவருக்கும், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பாரமியின் தந்தை ஒரு இருதய நோயாளி. பழைய வலையைப் பின்னிப் பின்னிதான் எனது கணவர் மீன்பிடிக்க கடலுக்கு செல்வார். அவ்வாறு பிடிக்கின்ற மீன்களும் எமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய போதாமல் உள்ளது. பாரமி பயிற்சிகளுக்காக கொழும்புக்குச் செல்லவே அதிக பணத்தை செலவிடுகின்றோம். எனவே எனது கணவனுக்கு நல்லதொரு வலையும், என்ஜின் இயந்திரம் ஒன்றையும் பெற்றுக்கொடுத்தால் எமது முயற்சியால் நாம் வாழ்ந்துவிடுவோம்.
நாம் பட்ட கஷ்டங்களுக்கு மத்தியில் எமது மகள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுக்கொடுத்துவிட்டாள். அவர் வெண்கலப் பதக்கத்தை வென்ற பிறகு என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அம்மா நான் வெண்கலப் பதக்கமொன்றை வெற்றிகொண்டேன். இது போதாது தானே? என்று சொன்னார். அம்மா கவலைப்பட வேண்டாம். 2020இல் நடைபெறவுள்ள ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் மற்றும் 2024இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் நிச்சயம் தங்கப் பதக்கத்தை வெல்வேன் என தெரிவித்ததாக பாரமியின் தாயார் ஆனந்த கண்ணீருடன் தெரிவித்தார்.
ஆசிய பரா விளையாட்டு விழாவில் இலங்கைக்கு மேலும் ஒரு தங்கம் உட்பட 4 பதக்கங்கள்
இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்றுவரும் ஆசிய பரா விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டிகளின்…….
பெற்றோரின் கனவை நனவாக்கிய பாரமி
ஆர்ஜென்டீனாவில் இருந்து நாடு திரும்பிய இளம் ஒலிம்பிக் வீராங்கனை பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா தனது வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கையில், இந்த பதக்கத்தை வெல்வதற்கு பல தியாகங்ளை நானும், எனது பயிற்சியாளர் ஜனித் ஜயசிங்கவும் செய்தோம். இளையோர் ஒலிம்பிக் பதக்கத்தை இலக்காகக் கொண்டுதான் இவ்வருட ஆரம்பத்திலிருந்து பயிற்சிகளை எடுத்து வந்தேன். மிகப் பெரிய நம்பிக்கை இருந்தது. அந்தக் கனவு நிறைவேறியுள்ளது. உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது.
எனது தந்தை மீன்பிடித் தொழில் செய்து வருகின்றார். அம்மா வீட்டில் உள்ளார். எனது விளையாட்டுக்காக செலவு செய்வதற்கு, விளையாட்டு உபகரணங்களை வாங்கும் அளவுக்கு அவர்களிடம் பணம் கிடையாது. அதுதான் மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது.
ஜப்பானில் கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று நாடு திரும்பிய போது விளையாட்டுத்துறை அமைச்சினால் மாதாந்தம் 75 ஆயிரம் ரூபா கொடுப்பனவொன்றை தருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், ஒரு மாதத்துடன் அந்த கொடுப்பனவு நிறுத்தப்பட்டு விட்டது. அதேபோல, ஜனாதிபதி வழங்கிய 15 இலட்சம் ரூபா பணத்துக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா வட்டி பணம் மாத்திரமே கிடைக்கின்றது. அந்தப் பணம் கொழும்புக்கு வருவதற்கு செலவாகி விடுகின்றது.
அதிலும், குறிப்பாக எனது விளையாட்டு தேவைக்காக வீட்டை அடகுவைத்ததை நான் சில தினங்களுக்கு முன்தான் அறிந்து கொண்டேன். எனினும், எனது பெற்றோரின் கனவை நான் இன்று நனவாக்கியுள்ளேன். எனவே, எதிர்வரும் 2020இல் நடைபெறவுள்ள ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர் மற்றும் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுக்கும் இலட்சியத்துடன் எனது விளையாட்டை தொடர்ந்து முன்னெடுப்பேன் என அவர் தெரிவித்தார்.
பாரமியின் வெற்றிப் பயணம்
குளியாப்பிட்டிய மத்திய கல்லூரியில் கல்வி பயின்று வருகின்ற 17 வயதுடைய பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற 88ஆவது சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் போட்டியை 6 நிமிடங்களும் 37.9 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் (6 நிமி. 59.63செக்.) புதிய போட்டிச் சாதனையுடன் அவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், இலங்கை 16 வயதுக்குட்பட்ட பெண்கள் றக்பி அணிக்காக விளையாடிய பாரமி வசந்தி, ஜப்பானின் ஜிபு நகரில் கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
இதனையடுத்து, ஆர்ஜென்டீனாவில் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஆசிய தகுதிகாண் மெய்வல்லுனர் போட்டிகளிலும் அவர் பங்குபற்றியிருந்தார். தாய்லாந்தின் பெங்கொங் நகரில் கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற குறித்த போட்டித் தொடரில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பாரமி உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டார்.
இதன்படி, இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவதற்கான வாய்ப்பையும் பாரமி பெற்றுக்கொண்டதுடன், சுமார் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு மெய்வல்லுனர் போட்டியொன்றில் இலங்கைக்கான முதலாவது சர்வதேச பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தார்.
ஒரே நாளில் 3 இரட்டைச் சாதனைகள்; வட மாகாணத்துக்கு மேலும் 3 பதக்கங்கள்
34 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்ச்சியான மெய்வல்லுனர் போட்டிகள் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் இன்று (03) கொழும்பு….
அத்துடன், மத்திய மற்றும் நீண்ட தூரப் போட்டிகளில் உலக அரங்கில் முன்னிலை வீரர்களாக வலம்வருகின்ற கென்யா மற்றும் எத்தியோப்பிய நாட்டு வீராங்கனைகளையெல்லாம் பின்தள்ளி பாரமி பெற்ற இந்த வெற்றி நிச்சயம் இலங்கையின் மெய்வல்லுனர் துறை வளர்ச்சியின் அடுத்த கட்டத்துக்கான முக்கிய காரணியாகவும் அமையவுள்ளது.
இதுஇவ்வாறிருக்க, இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் அறிவிக்கப்பட்ட இவ்வருடத்துக்கான தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் சிறப்புக் குழுவிலும் அவர் முதற்தடவையாக உள்வாங்கப்பட்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இறுதியாக…
பல்வேறு கஷ்டத்துக்கு மத்தியில் இலங்கைக்கு முதலாவது இளையோர் ஒலிம்பிக் பதக்கத்தை வென்று கொடுத்துவிட்டு 2024 ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை தாய் நாட்டுக்காக பெற்றுக்கொடுக்கும் இலட்சியத்துடன் மெய்வல்லுனர் விளையாட்டில் சாதனைக்கு மேல் சாதனை படைக்க காத்திருக்கின்ற பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா போன்ற சாதனை வீராங்கனைகளுக்கு இனியாவது உரிய வசதிகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும்.
அதிலும் குறிப்பாக, இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க பாரமி மற்றும் அவருடைய பெற்றோரின் தியாகமும், அர்ப்பணிப்பும் முக்கிய காரணம் எனலாம். அதேபோல, எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் அவருடைய பயிற்சியாளர் ஜனித் ஜயசிங்க வழங்கிய பங்களிப்பினையும் இங்கு ஞாபகப்படுத்த வேண்டும். பாடசாலைக் கல்வியைப் போல, விளையாட்டையும் சரிசமமாக முன்னெடுத்து செல்கின்ற பாரமி, இந்த நாட்டிற்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷமாகும். எனவே, அவருக்கான அனைத்து தேவைகளையும் பெற்றுக்கொடுத்து 2024 ஒலிம்பிக் பதக்கம் வரை கொண்டு செல்வது விளையாட்டை நிர்வகிக்கும் அதிகாரிகளின் பொறுப்பாகும்.
அதேபோல, எந்த தயவும் இல்லாமல் சொந்தக் காலில் நின்று தனது மகளை ஒலிம்பிக் பதக்கம் வரை கொண்டு செல்ல எதையும் செய்யத் தயாராக இருக்கும் பாரமியின் பெற்றோர், அனைத்து பெற்றோர்களுக்கும் சிறந்த முன் உதாரணமாகும். அவர்களது கஷ்டத்துக்கு அரசியல் தலைமைகள், தனவந்தர்கள் செவி சாய்த்து உரிய வசதிகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது விளையாட்டை நேசிக்கும் அனைவரது பிரார்த்தனையாகும்.