தேசிய விளையாட்டு விழா குத்துச்சண்டையில் வடக்குக்கு 6 பதக்கங்கள்

509
6 Northern Province

இலங்கையின் மிகப் பெரிய விளையாட்டுத் தொடரான 44ஆவது தேசிய விளையாட்டு விழா பொலன்னறுவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவுக்கு வந்தது. இம்முறை தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக குத்துச்சண்டைப் போட்டிகள் பொலன்னறுவை தேசிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன. இதில் போட்டியிட்ட வட மாகாண வீரர்கள் 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலகப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற வட மாகாணம் கிளிநொச்சியைச் சேர்ந்த 24 வயதான விற்றாலிஸ் நிக்கலஸ், இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 81 கிலோ கிராம் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.   

இளையோர் ஒலிம்பிக்கில் ஷெலிண்டாவுக்கு முதலிடம் : உலகில் 9ஆவது இடம்

ஆர்ஜென்டீனாவின் புவனர்ஸ் அயேர்ஸில் நடைபெற்றுவரும்..

குறித்த போட்டியில் தேசிய மட்டத்தில் முன்னிலையில் உள்ள, இலங்கை இராணுவத்துக்காக விளையாடி வருகின்ற சந்தகெலுமுக்கு பலத்த போட்டியை நிக்கலஸ் கொடுத்திருந்த போதிலும், ஆட்டத்தின் நிறைவில் 4-1 என்ற புள்ளிகள் அடிப்படையில் அவருக்கு தோல்வியைத் தழுவ நேரிட்டது.

எனினும், கடந்த மே மாதம் நடைபெற்ற முப்படையினருக்கான பாதுப்பு சேவைகள் குத்துச்சண்டைப் போட்டித் தொடரில் இதே வீரருடன் போட்டியிட்டு நிக்கலஸ் தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் மாத்தறையில் நடைபெற்ற 43ஆவது தேசிய விளையாட்டு விழாவிலும் பங்கேற்றிருந்த நிக்கலஸ், ஆண்களுக்கான 69 கிலோ கிராம் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தினையும், 2015ஆம் ஆண்டு 64-69 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தினையும் வென்றிருந்தமை சிறப்பம்சமாகும்.

அத்துடன், இலங்கை இராணுவத்துக்காக 2016ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகின்ற நிக்கலஸ், இலங்கையின் முன்னணி குத்துச்சண்டை வீரர்களையெல்லாம் வீழத்தியிருந்ததுடன், இவ்வருடம் நடைபெற்ற பாதுகாப்பு சேவைகள் குத்துச்சண்டை, கிளபர்ட் குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். இதன்பிரதிபலனாக, அடுத்த வருடம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான உத்தேச இலங்கை குத்துச்சண்டை குழாத்திலும் அவர் இடம்பிடித்தார்.

முப்பாய்ச்சல் நடப்புச் சம்பியனை வீழ்த்தி தங்கம் வென்றார் சப்ரின்

44 ஆவது தேசிய விளையாட்டு விழா பொலன்னறுவையில்..

இதுஇவ்வாறிருக்க, குறித்த போட்டிப் பிரிவில் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த டபிள்யு..ஆர் சந்தகெலும் தங்கப் பதக்கத்தை வென்றதுடன், வவுனியா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று முதற்தடவையாக தேசிய விளையாட்டு விழாவில் பங்குகொண்ட வட மாகாணத்தைச் சேர்ந்த ஜெகநாதன் தர்ஷிகன் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இதேவேளை, கடந்த 2 வருடங்களாக தேசிய விளையாட்டு விழாவில் பதக்கங்களை வென்று வருகின்ற வட மாகாணத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி கேசவன், ஆண்களுக்கான 91 கிலோ கிராம் எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக 2006ஆம் ஆண்டு இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த கேசவன், 2015ஆம் ஆண்டு மீண்டும் தாயகம் திரும்பினார். சிறுவயது முதல் குத்துச்சண்டைப் போட்டியில் அதீத திறமை கொண்டவராக விளங்கிய அவர், சென்னையில் வைத்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

இதனையடுத்து 2015ஆம் ஆண்டு முதற்தடவையாக தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்ற அவர், கடந்த வருடம் மாத்தறையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 81 கிலோ கிராம் எடைப் பிரிவில் முதற்தடவையாக வெண்கலப் பதக்கத்தினை வென்றிருந்தார்.

இதேவேளை, குத்துச்சண்டையைப் போல ஜூடோவிலும் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற கேசவன், கடந்த 2 வருடங்களாக வட மாகாண விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டிப் பிரிவில் மற்றுமொரு வட மாகாண வீரரரான வவுனியாவைச் சேர்ந்த துரைமணி சதுர்சனும் முதற்தடவையாக வெண்கலப் பதக்கத்தினை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்தப் போட்டிப் பிரிவில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஜி..என் பெர்னாண்டோ தங்கப் பதக்கத்தையும், சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த எஸ்.டி திலகரத்ன வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

இதேநேரம், பெண்களுக்கான 60 கிலோ கிராம் எடைப் பிரிவில் பருத்தித்துறையைச் சேர்ந்த கே. பிரசாந்தினி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

குறித்த போட்டியில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த கே..கே ஹன்சிகா தங்கப் பதக்கத்தையும், வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த எஸ்.கஹட்பிட்டிய மற்றும் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த சி. ஜயசிங்க ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிலையில், பெண்களுக்கான 75 கிலோ கிராம் எடைப் பிரிவில் வட மாகாணத்தைச் சேர்ந்த எஸ்.எச் விஜயரத்ன வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் சார்பில் இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றிய வட மாகாண குத்துச்சண்டை அணியின் பயிற்றுவிப்பாளராக சுரங்க முன்நாயக்கவும், அணியின் முகாமையாளராக பசுபதி ஆனந்தராஜும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் மாத்தறையில் நடைபெற்ற 43ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை மாத்திரமே வட மாகாணம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண அணி 3 பதக்கங்களை வென்றது. இதில் ஆண்களுக்கான 60 கிலோ கிராம் எடைப் பிரிவில் .டபிள்யு. சந்தருவன் வெண்கலப் பதக்கத்தையும், ஆண்களுக்கான 91 கிலோ கிராமுக்கு அதிகமான எடைப் பிரிவில் மற்றுமொரு கிழக்கு மாகாண வீரரான கே.எம்.பி குமார வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதேவேளை, 44ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலாரிலும் மேல் மாகாணம் ஒட்டுமொத்த சம்பியனாகத் தெரிவாகியது.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<