முப்பாய்ச்சல் நடப்புச் சம்பியனை வீழ்த்தி தங்கம் வென்றார் சப்ரின்

779

44 ஆவது தேசிய விளையாட்டு விழா பொலன்னறுவையில் இன்று (14) நிறைவுக்கு வந்தது. மெய்வல்லுனர் போட்டிகளின் இறுதி நாளான இன்று தமிழ் பேசும் வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.

ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் பங்குகொண்ட தென் மாகாணத்தைச் சேர்ந்த சப்ரின் அஹமட், முதல் தடவையாக தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தார். போட்டியில் அவர் 15.80 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து திறமையை வெளிப்படுத்தினார்.

44ஆவது தேசிய விளையாட்டு விழாவில் சம்பியனானது மேல் மாகாணம்

இதேநேரம், ஆண்களுக்கான முப்பாய்சசல் போட்டியின் நடப்புச் சம்பியனும், தொடர்ந்து 2 தடவைகள் தேசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கத்தினை வென்றவருமான சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த சன்ஜய ஜயசிங்க, 3 ஆவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார். போட்டியில் அவர் 15.62 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்தார்.

அத்துடன், தேசிய மட்டப் போட்டிகளில் சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு சன்ஜய ஜயசிங்க தோல்வியைத் தழுவியிருந்த அதேநேரம், தேசிய விளையாட்டு விழாவில் சுமார் 7 வருடங்களுக்குப் பிறகு சப்ரின் அஹமட் பதக்கமொன்றைப் பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதில், கடந்த வருடம் மாத்தறையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான நீளம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சல் போட்டிகளில் பங்குகொண்ட சப்ரின் அஹமட், 5 ஆவது இடங்களைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தேசிய மட்டப் போட்டிகளில் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் இலங்கை இராணுவத்துக்காக விளையாடி வருகின்ற வெலிகமையைச் சேர்ந்த சப்ரின் அஹமட், கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 16.22 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இது சப்ரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த தூரமாகவும் பதிவாகியது.

இறுதியாக, கடந்த மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 15.85 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட சப்ரின், அதற்கு முன் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் போட்டிகளில் 3 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

எனினும், கடந்த மே மாதம் நடைபெற் முதல் கட்ட தகுதிகாண் போட்டியில் பங்குபற்றியிருந்த அவர், 15.68 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 4 ஆவது இடத்தினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த அனைத்துப் போட்டிகளிலும் சன்ஜய ஜயசிங்க முதலிடங்களைப் பெற்றுக்கொண்டதுடன், இறுதியாக கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனர் போட்டித் தொடரில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சரித்துக்கு அசாதாரணம்: ஆஷிக்குக்கு பதக்கம்

இம்முறை தேசிய விளையாட்டு விழாவின் முதல் நாளன்று ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் புதிய போட்டிச் சாதனையும், அதே நாளில் ஆண்களுக்கான தட்டெறிதலில் தங்கப் பதக்கமும் வென்ற வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த சரித் கப்புகொட்டுவ, இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தனது ஹெட்ரிக் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார். போட்டியில் 16.24 மீற்றர் தூரத்தை அவர் பதிவுசெய்தார்.

ஆசிய பரா விளையாட்டில் 14 பதக்கங்களுடன் இலங்கைக்கு 14ஆவது இடம்

எனினும், போட்டி நிறைவடைந்து அரை மணத்தியாலங்கள் செல்வதற்கு முன் சரித் கப்புகொட்டுவ, விதிமுறைகளை மீறி போட்டிகளில் பங்குபற்றியிருந்ததாகவும், அவருக்கான பதக்கத்தை பறிமுதல் செய்யும் படியும் தெரிவித்து மேல் மற்றும், தென் மாகாணங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மேன்முறையீடு செய்தனர்.

இதனையடுத்து விளையாட்டுத்துறை பணிப்பாளர் புவனேக ஹேரத் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்றதுடன், இறுதியில் அவருக்கான பதக்கத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி, குறித்த போட்டியில் 15.11 மீற்றர் தூரத்தை எறிந்த மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஜோய் தனுஷ்க பெரோரா தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொள்ள, ஊவா மாகாணத்தைச் சேர்ந்த எஸ்.சி ரணசிங்க (13.87 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ZTM ஆஷிக் (13.79 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தினையும் சுவீகரித்தனர்.

மைதான நிகழ்ச்சிகளில் தட்டெறிதலைப் போன்று குண்டு எறிதலிலும் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற நிந்தவூரைச் சேர்ந்த ZTM ஆஷிக், கடந்த வருடம் மாத்தறையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் குண்டு எறிதல் போட்டியில் பங்குபற்றி வெண்கலப் பதக்கத்தையும், 2016 யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, போட்டி விதிமுறைகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டு பதக்கத்தை இழந்த சம்மட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளின் தேசிய சம்பியனாகிய சரித் கப்புகொட்டுவ, குண்டு எறிதல் போட்டியில் 16.24 மீற்றர் தூரத்தை எறிந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.


100 மீற்றரில் சபான், பாசிலுக்கு வெற்றி

44 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதிநாள் மெய்வல்லுனர் போட்டிகளில் வருடத்தின் அதிவேக வீரர் யார் என்பதை தீர்மானிக்கும் 100 மீற்றர் ஓட்டப் போட்டி முக்கிய இடத்தை வகித்தது.

தெற்காசியாவின் அதிவேக வீரரான ஹிமாஷ ஏஷான் மற்றும் தெற்காசிய விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கத்தை வென்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அஷ்ரப் ஆகிய வீரர்கள் இம்முறை போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மற்றுமொரு நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான வினோஜ் சுரன்ஜய டி சில்வா, போட்டி தூரத்தை 10.73 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

டெங்குக் காய்ச்சலால் இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கும் வாய்ப்பை தவறவிட்ட வினோஜ் சுரன்ஜய, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஆண்களுக்கான 100 மீற்றரில் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

லசித் மாலிங்க ஒரு தனித்துவமான பந்துவீச்சாளர் – இயன் மோர்கன்

இதேநேரம், அண்மைக்காலமாக 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.எம் சபான், போட்டித் தூரத்தை 11.01 செக்கன்களில் கடந்து வெள்ளிப் பதக்கத்தையும், அவருக்கு பலத்த போட்டியைக் கொடுத்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பாஸில் உடையார், போட்டித் தூரத்தை 11.06 செக்கன்களில் கடந்து வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.

போட்டிகளின் முதல் நாளன்று நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் சபான் வெள்ளிப் பதக்கத்தையும், பாஸில் உடையார், ஆறாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

எனினும், கடந்த வருடம் மாத்தறையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் பாசில் உடையார் தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


லயனெலுக்கு 2ஆவது தோல்வி

தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தொடர்ந்து 7 ஆவது தடவை தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த மத்திய மாகாணத்தைச் சேர்ந்த லயனெல் சமரஜீவ இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதல் தடவையாக தோல்வியைத் தழுவினார்.

குறித்த போட்டியில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஆர்.எம்.எஸ் புஷ்பகுமார தங்கப் பதக்கம் வென்றார். போட்டியை நிறைவு செய்ய 15 நிமிடங்கள் 09.35 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார். போட்டியை 15 நிமிடங்கள் 14.85 செக்கன்களில் ஓடி முத்த லயனெல் சமரஜீவ வெள்ளிப் பதக்கத்தையும், சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த ஏ.கே தரங்க (15 நிமி. 20.58 செக்.) வெண்கலப் பதக்கத்தினையும் வென்றனர்.

இந்த நிலையில், வட மாகாணம் சார்பாக போட்டியிட்ட எஸ். கிந்துஷன் (16 நிமி. 33.35 செக்.) 8 ஆவது இடத்தையும், கே. ஜெயன்தன் (17 நிமி. 12.18 செக்.) 10 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

எனினும் போட்டிகளின் முதல் நாளன்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 ஆயிரம் ஓட்டப் போட்டியிலும் பங்குபற்றியிருந்த லயனெல் சமரஜீவ, 2 ஆவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார். குறித்த போட்டியில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன் தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த நிலானி ஆரியதாஸ தங்கப் பதக்கம் வென்றார்.அவர் குறித்த போட்டி தூரத்தை 36 நிமிடங்கள் 56.54 செக்கன்களில் நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


அஞ்சலோட்டத்தில் தென் மாகாணம் முன்னிலை

தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் முதல் தடவையாக கடந்த வருடம் தங்கப் பதக்கத்தினை வென்ற கிழக்கு மாகாண 4×100 அஞ்சலோட்ட அணி, இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கத்தினை வென்று ஆறுதல் அடைந்தது.

போட்டிகளின் இறுதி நாளான இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 4×100 அஞ்சலோட்டப் போட்டியில் தென் மாகாண அணி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. குறித்த போட்டியை நிறைவு செய்ய 41.50 செக்கன்களை அந்த அணி எடுத்துக் கொண்டது. தேசிய விளையாட்டு விழாவில் அந்த மாகாணம் சுமார் நான்கு வருடங்களுக்குப் பிறகு தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில், தென் மாகாணத்துக்கு பலத்த போட்டியைக் கொடுத்த மொஹமட் அஷ்ரப் தலைமையிலான கிழக்கு மாகாண அணி, போட்டித் தூரத்தை 42.11 செக்கன்களில் நிறைவு 2 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.

மேற்கிந்திய தீவுகளை வைட் வொஷ் செய்து டெஸ்ட் தொடரை வென்றி இந்தியா

அத்துடன், 4232 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்த சப்ர்கமுவ மாகாண அணி 3 ஆவது இடத்தைப் பெற்றுக்கொள்ள, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேல் மாகாண அணி 5 ஆவது இடத்துடன் ஏமாற்றம் அடைந்தது.

இந்த நிலையில், பெண்களுக்கான 4×100 அஞ்சலோட்டத்தில் தென் மாகாண அணி தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டது. 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த மாகாணம் வெற்றி பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஆண்களுக்கான 4×400 அஞ்லோட்டத்தில் ஊவா மாகாணமும், பெண்களுக்கான 4×400 அஞ்சலோட்டத்தில் தென் மாகாணமும் தங்கப் பதக்கங்களை வெற்றி கொண்டன.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<