மேற்கிந்திய தீவுகளை வைட் வொஷ் செய்து டெஸ்ட் தொடரை வென்றி இந்தியா

302
Image Courtesy - AP

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என வெற்றி கொண்டுள்ளது.

இந்தியாவுக்கு கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் ஒரு சர்வதேச டி20 போட்டி என முத்தரப்பு தொடரில் விளையாடி வருகிறது.

சாதனைகளுடன் டெஸ்ட் தொடரை ஆரம்பித்த இந்திய அணி

இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள்…

முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சாதனைகளுடன் இன்னிங்ஸ் மற்றும் 272 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது. அந்த வகையில் இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 12ஆம் திகதி ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமானது. இப்போட்டியில், முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாத மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் விளையாடியிருந்ததோடு இந்திய அணி சார்பாக வேகப் பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் டெஸ்ட் போட்டிகளில் அறிமுக வீரராக  இணைக்கப்பட்டிருந்தார்.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்பம் முதல் நிலையான இணைப்பாட்டம் ஒன்றை பெறாமல் குறைந்த ஓட்டங்களுடன் விக்கெட்டுக்களை இழந்தது. ஒரு கட்டத்தில் அவ்வணி 182 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து நிலை தடுமாறிய சந்தர்ப்பத்தில் ரோஸ்டன் சேஸ் மற்றும் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் இணைந்து 104 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். இது அவர்கள் இருவரும் இணைந்து 100 ஓட்டங்களுக்கு மேல் பெற்றுக் கொண்ட மூன்றாவது சந்தர்ப்பமாகும்.

ஜேசன் ஹோல்டர்  52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததோடு முதல் நாள் ஆட்ட நிறைவில் சேஸ் ஆட்டமிழக்காமல் 98 ஓட்டங்களை பெற்ற நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 295 ஓட்டங்களை பெற்றிருந்தது.

பாகிஸ்தானின் வெற்றியை பறித்த உஸ்மான் கவாஜாவின் துடுப்பாட்டம்

விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த…

நேற்று (13) இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி 16 ஓட்டங்களை மேலதிகமாக பெற்று 311 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக ரோஸ்டன் சேஸ் 106 ஓட்டங்களை பெற்றிருந்தார். பந்து வீச்சில் உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

தமது முதல் இன்னிங்ஸை அதிரடியாக தொடங்கிய இந்திய அணி 162 ஓட்டங்களுக்கு முதல் 4 விக்கெட்டுகளையும் இழந்தது. அதிரடியாக விளையாடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ப்ரித்திவ் ஷாவ் 70 ஓட்டங்கள் மற்றும் விராட் கோஹ்லி 45 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து 5ஆவது விக்கெட்டுக்காக கைகோர்த்த அஜின்க்கியா ரஹானே மற்றும் ரிஷாஃப் பான்ட் ஜோடி பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 146 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை இரண்டாம் நாள் நிறைவுக்கு வந்தது. இரண்டாம் நாள் நிறைவில் இந்திய அணி  4 விக்கெட்டுகளை இழந்து 308 ஓட்டங்களை பெற்றிருந்தது. ரிஷாஃப் பான்ட் 85 ஓட்டங்களுடனும் அஜின்க்கியா ரஹானே 75 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

லசித் மாலிங்க ஒரு தனித்துவமான பந்துவீச்சாளர் – இயன் மோர்கன்

சனிக்கிழமை (13) தம்புள்ளையில்…

இன்றைய தினம் (14) தமது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 367 ஓட்டங்களை பெற்று மேற்கிந்திய தீவுகள் அணியை விட 56 ஓட்டங்களை மேலதிகமாக பெற்றிருந்தது. இந்திய அணி சார்பாக பான்ட் 92 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததுடன் ரஹானே 80 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். இருவரும் இணைந்து 152 ஓட்டங்கள் பகிர்ந்து கொண்டிருந்தமை விஷேட அம்சமாகும். ரிஷாஃப் பான்ட் முதலாவது டெஸ்ட் போட்டியிலும் 92 ஓட்டங்களை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பந்து வீச்சில் ஹோல்டர் 5 விக்கெட்டுகளையும் கேப்ரியல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

தொடர்ந்து தமது இரண்டாம் இன்னிங்ஸிற்காக களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி உமேஷ் யாதவ் மற்றும் இந்திய சுழல் பந்து வீச்சாளர்களின் துள்ளியமான பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களை மாத்திரம் பெற்று இந்திய அணியை விட வெறும் 71 ஓட்டங்கள் முன்னிலையுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக பந்து வீசிய உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், 72 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கை கடந்து 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ப்ரித்திவ் ஷாவ் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தலா 33 ஓட்டங்கள் வீதம் பெற்றிருந்தனர். இவ்வெற்றியானது இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 10 விக்கெட்டுகளால் வெற்றி பெறும் முதலாவது சந்தர்ப்பமாகும்.  மேலும், இவ்வெற்றி இந்திய அணியின் சொந்த மண்ணில் பெறப்பட்ட தொடர்ச்சியான 10 ஆவது டெஸ்ட் வெற்றியாகும்.  

கன்னிப் போட்டியில் சதமடித்த இளம் ப்ரித்திவ் ஷாவ்

மேற்கிந்திய தீவுகளுக்கு …

போட்டியின் சிறப்பாட்டக்காரராக 133  ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுகளை கைப்பற்றி டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த பந்து வீச்சு பிரதியை பதிவு செய்த இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தெரிவு செய்யப்பட்டிருந்ததோடு தொடர் நாயகனாக இத்தொடர் மூலம் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி சார்பாக அறிமுகமாகிய வீரர் ப்ரித்திவ் ஷாவ் தெரிவு செய்யப்பட்டார். அவர் இத்தொடரில் மொத்தமாக 237 ஓட்டங்களை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் அணி  (முதல் இன்னிங்ஸ்) 311 – சேஸ் 106, , ஹோல்டர் 52, உமேஷ் யாதவ் 88/6, குல்தீப் யாதவ் 85/3

இந்திய அணி (முதல் இன்னிங்ஸ்) 367 – பான்ட் 92, ரஹானே 80, ஷாவ் 70, ஹோல்டர் 56/5, கேப்ரியல் 107/3

மேற்கிந்திய தீவுகள் அணி  (இரண்டாவது இன்னிங்ஸ்) 127 – சுனில் அம்ப்ரிஸ் 38, சாய் ஹோப் 28, உமேஷ் யாதவ் 45/4, ஜடேஜா 12/3, அஷ்வின் 24/2

இந்திய அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) 75/0ப்ரித்திவ் ஷாவ் 33*, லோகேஷ் ராகுல் 33*

போட்டி முடிவு : இந்திய அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி