அகில தனன்ஜய திறமை வாய்ந்த பந்துவீச்சாளர் – ஜோ ரூட்

443

இலங்கை அணியின் இளம் வீரரான அகில தனன்ஜய மிகத் திறமை வாய்ந்த சுழல் பந்து வீச்சாளர் என இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் ஜோ ரூட் கருத்து தெரிவித்துள்ளார். அகில தனன்ஜயவால் பந்தை இரண்டு பக்கங்களுக்கும் சுழற்ற முடியும். சிறப்பான கூக்லி (Googly) பந்துகளையும் வீச முடியும். அவர் ஒரு மிகச்சிறந்த பந்து வீச்சாளர் என ரூட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (13) தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் நடைபெறவுள்ளமையை முன்னிட்டு, இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து அகில தனன்ஜய

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த ஜோ ரூட்,

“அகில தனன்ஜய சிறந்த பந்து வீச்சாளர். அவரால் எமக்கு சவாலை கொடுக்க முடியும். ஆனால், அவரது ஓரிரு ஓவர்களை, கவனத்துடன் துடுப்பெடுத்தாடினால், அதனைத் தொடர்ந்து அவரை சிறப்பாக எதிர்கொள்ள முடியும். எவ்வாறாயினும், அவர் மிக திறமை வாய்ந்த பந்து வீச்சாளர் என்பதை மறுக்க முடியாது.

கடந்த இரண்டு வருடங்களை நோக்கும் போது, நாம் ஒரு அணியாக பல முன்னேற்றங்களை கண்டுள்ளோம். ஆனால் சுழல் பந்துவீச்சை எதிர்கொள்வதில் இதுவரையில், சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றோம். இந்த தொடரில் அதனை மாற்றுவதற்கு முயற்சிக்க உள்ளோம். இலங்கை அணி அவர்களது சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து, எமக்கு அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடும். இந்த சூழ்நிலையை பொருத்தவரையில் அவர்களுக்கான சாதகத் தன்மை அதிகம்.

எனினும், எம்மிடம் சிறந்த அணி ஒன்று உள்ளது. சகல துறைகளிலும் சிறந்த வீரர்கள் இருக்கின்றனர். அத்துடன், எமது துடுப்பாட்ட வீரர்கள் பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தங்களை கொடுக்க கூடியவர்கள். இதன் மூலம் எதிரணிக்கு சவால் கொடுக்க எண்ணியுள்ளோம்.

உலகக் கிண்ணத்துக்கான எமது பயணம் நேர்த்தியாக அமைந்திருந்தது. தற்போது இந்த தொடரின் அனுபவத்தை பெற்றுக்கொண்டு மேலும் முன்னேற வேண்டும். தொடர் நிறைவடையும் போது, இவ்வாறான சூழ்நிலையில் எம்மால் சிறப்பாக விளையாட முடியும் என்பதை அனைவருக்கும் வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.

இதேவேளை இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் அதிகம் புதிரான (Surprise) பந்து வீச்சாளர்களா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,

“எந்தவொரு பந்து வீச்சாளரையும் எதிர்கொள்வதற்கு முன் அவர் ஒரு புதிரான பந்து வீச்சாளர்தான். ஏனென்றால் அவரின் பந்து வீச்சு பற்றி எமக்கு தெரியாது. அதனால் நாம் அவருடைய பந்து வீச்சு தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டும். முக்கியமாக அவர்கள் பந்து வீசும் காணொளிகளை பார்வையிட்டு, அதற்கேற்ப தயாராக வேண்டும்”

இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர்கள் மிகத் திறமையானவர்கள். அவர்களை எதிர்கொண்டு எம்மால் அதிக ஓட்டங்களை குவிக்க முடியுமானால் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளன.

கட்புலனற்றோர் முத்தரப்பு டி-20 தொடரில் இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்திய இலங்கை

சுழற்பந்து வீச்சுக்கு எதிரான இங்கிலாந்து அணியின் தயார் நிலை எப்படி?

“நாம் கடந்த முறை இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டதை விட, இம்முறை அதிக முன்னேற்றங்கள் இருக்கின்றன. எமது வீரர்கள் பந்து வீச்சாளர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கி துடுப்பெடுத்தாடுபவர்கள். கடந்த மூன்று வருடங்களாக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளோம். உலகக் கிண்ணத்துக்கு செல்லும் போது, சுழல் பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய அணியாக நாம் செல்ல வேண்டும். அதற்கு இந்த தொடர் சிறந்த வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க