தேசிய விளையாட்டு விழா கராத்தேயில் பாலுராஜுக்கு அதி சிறந்த வீரர் விருது

417

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த 44ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான கராத்தே போட்டிகளின் தனிநபர் கராத்தே காட்டா போட்டியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சௌந்தர ராஜா பாலுராஜ் தங்கப் பதக்கத்தை வென்றார். அத்துடன், இம்முறை தேசிய கராத்தே போட்டிகளின் சிறந்த வீரருக்கான விருதையும் அவர் தட்டிச் சென்றார்.

44ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கராத்தே போட்டிகள் கொழும்பு டொரிங்டன் மைதானத்தில் கடந்த 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெற்றது. இதில் ஒன்பது மாகாணங்களையும் சேர்ந்த வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்.

தெற்காசிய கராத்தே சம்பியன்ஷிப்பில் ஹெட்ரிக் தங்கம் வென்ற பாலுராஜ்

தெற்காசிய கராத்தே தோ சம்மேளனம் நடாத்திய…

இதில் ஆண்களுக்கான தனிநபர் கராத்தே காட்டா போட்டியில் பங்குபற்றிய எஸ். பாலுராஜ், தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். 2012ஆம் ஆண்டு முதல் தேசிய விளையாட்டு விழா கராத்தே போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற பாலுராஜ், இந்த வெற்றியுடன் தொடர்ச்சியாக 7ஆவது தடவையாகவும் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

அத்துடன், குழுநிலைக்கான காட்டாய் போட்டியிலும் கிழக்கு மாகாணத்திற்கு வெண்கலப் பதக்கத்தினை பெற்றுக்கொடுத்ததன் மூலம் 3ஆவது தடவையாக சிறந்த வீரருக்கான விருதையும் பாலுராஜ் தட்டிச் சென்றார். முன்னதாக, அவர் 2014 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா கராத்தே போட்டிகளில் இவ்விருதை பெற்றுக்கொண்டார்.

கல்முனை, சேனைக்குடியிருப்பை பிறப்பிடமாகக் கொண்ட பாலுராஜ், 2006ஆம் ஆண்டு முதல் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பதிவு செய்து வருகின்றார்.

இந்த நிலையில், தேசிய கராத்தே குழாத்தில் இடம்பெற்ற ஒரேயொரு தமிழ் பேசும் வீரராக கடந்த வருடம் நடைபெற்ற 3ஆவது தெற்காசிய கராத்தே தோ சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கத்தை வென்ற பாலுராஜ், முன்னதாக 2014 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தெற்காசிய கராத்தே தோ சம்பியன்ஷிப் போட்டித் தொடரிலும் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், 3 தடவைகள் ஆசிய கராத்தே தோ சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபற்றியுள்ள பாலுராஜ், இறுதியாக கஸகஸ்தானில் நடைபெற்ற போட்டியில் முதல் சுற்றில் வெற்றியினைப் பதிவுசெய்திருந்தார்.

அத்துடன். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் முதற்தடவையாக கராத்தே விளையாட்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டிற்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுக்கும் எதிர்பார்ப்புடன் பாலுராஜ் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இதுஇவ்வாறிருக்க, குழுநிலைக்கான காட்டா நிகழ்ச்சியில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய பாலுராஜ் மற்றும் அவரது சகோதரர்களான எஸ். கோமான்ராஜ், எஸ். சோபன்ராஜ் ஆகிய மூவரும் வெண்கலப் பதக்கத்தினை வென்று கொடுத்தனர்.

குறித்த வீரர்கள் மூவரும், 2000ஆம் ஆண்டு முதல் கராத்தே கலையில் பல சாதனைகளை பெற்று வருகின்ற கிழக்கு மாகாணத்தில் இயங்கி வருகின்ற ஜே.கே.எம்.துமுஆழு  (ஜப்பான் கராத்தே மகுயோசிக்காய் அமைப்பு) கழகத்தில் பயிற்சிகளை பெற்று வருகின்றனர். இந்த கழகத்தின் போதனாசிரியராக சர்வதேச கராத்தே கறுப்பட்டியைக் கொண்டவரும், ஆசிய கராத்தே போட்டி நடுவருமான சென்சி எஸ். முருகேந்திரன் செயற்பட்டு வருகின்றார். இவர் பாலுராஜின் இரண்டாவது சகோதரர் என்பதும் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<