விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள வருடத்தின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான 44 ஆவது தேசிய விளையாட்டு விழா நாளை (11) முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி பொலன்னறுவை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
2 ஆவது தடவையாக வட மத்திய மாகாணத்தில் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு விழா, முன்னதாக 2012 ஆம் ஆண்டு பொலன்னறுவையில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, நாளை பிற்பகல் 2.30 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் 44 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்ச்சியான மெய்வல்லுனர் போட்டிகள் வண்ணமயமான தொடக்க நிகழ்வுடன் ஆரம்பமாகவுள்ளன.
>> மும்பை அணியிலிருந்தது மாலிங்கவின் பந்துவீச்சை அறிய உதவியாக இருந்தது – ஜோஸ் பட்லர்
2018 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விழாவின் 33 போட்டிகளுக்கான இறுதி கட்டப் போட்டிகள் கடந்த மே மாதம் ஆரம்பமாகியதுடன், இதில் பெரும்பாலான போட்டிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், வலைப்பந்தாட்டம், குத்துச்சண்டை, கபடி, ஆணழகர் மற்றும் மெய்வல்லுனர் போட்டிகள் பொலன்னறுவை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் 4 நாட்களுக்கு நடைபெறவுள்ளன.
அதுமாத்திரமின்றி, இம்முறை தேசிய விளையாட்டுப் போட்டியில் மெய்வல்லுனர் போட்டிகளுக்காக நாட்டின் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 1500 இற்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளனர். அத்துடன், போட்டி நிகழ்ச்சிகளை மேற்பார்வை செய்வதற்கு சுமார் 450 அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இம்முறை தேசிய விளையாட்டு விழாவுக்கான தீபத்தை ஏற்றும் சந்தர்ப்பம் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 4×400 அஞ்சலோட்டத்தில் வெண்கலப் பதக்கத்தினை வென்ற இலங்கை அணியில் இடம்பெற்ற கே. கசுன் கல்ஹார செனவிரத்ன மற்றும் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற 5 ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஏ.ஜி.எல் பிரியங்கிகா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனவே நாளை முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறவுள்ள மெய்வல்லுனர் போட்டிகளில் தகுதிச்சுற்று, அரையிறுதி மற்றும் இறுதி என 60 போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன், வருடத்தின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கான விருதுகள் மற்றும் சம்பியன் அணிக்கான விருதினை இறுதிநாள் நிகழ்வுகளின் போது வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 44 ஆவது தேசிய விளையாட்டு விழா தொடர்பான அனைத்து தகவல்களையும், செய்திகளையும், thepapare.com இணையத்தளத்தின் வாயிலாக வழங்கவுள்ளோம்.
>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<