இம்முறை இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் 13 இலங்கை வீரர்கள்

364

ஆர்ஜென்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸில் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ள மூன்றாவது இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள 23 பேர் கொண்ட இலங்கை குழாம் நேற்று (02) ஆர்ஜென்டீனா நோக்கி பயணமாகியது.

இம்முறை இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் வில்லாளர் (1), மெய்வல்லுனர் (4), 3x3 உள்ளக கூடைப்பந்தாட்டம் (04), ஜிம்னாஸ்டிக் (1), இலக்கை நோக்கி சுடுதல் (1), நீச்சல் (1), பெட்மின்டண் (1) ஆகிய ஏழு வகையான போட்டிகளில் 13 வீர வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.

பாடசாலைகள் மெய்வல்லுனர் இரண்டாம் நாளில் மேலும் 11 சாதனைகள் முறியடிப்பு

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் …

இந்த நிலையில், இம்முறை இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் குறைந்தபட்சம் 2 பதக்கங்களையாவது பெற்றுக்கொடுக்கின்ற போட்டி நிகழ்ச்சியாக மெய்வல்லுனர் போட்டிகள் கருதப்படுகின்றது.  

இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதியினைப் பெற்றுக்கொள்வதற்காக தாய்லாந்தின் பெங்கோக் நகரில் கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற ஆசிய தகுதிகாண் போட்டிகளில் ஏழு வீரர்கள் பங்குபற்றியிருந்ததுடன், இதில் 4 வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெற்றனர்.  

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற குளியாப்பிட்டிய மத்திய கல்லூரி மாணவி பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, ஆசிய தகுதிகாண் போட்டிகளில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கத்துடன் இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார்.  

குறித்த போட்டித் தூரத்தை 6 நிமிடங்களும் 35.20 செக்கன்களில் ஓடிமுடித்த அவர், அதிசிறந்த தனிப்பட்ட நேரப் பெறுதியையும் பதிவுசெய்தார். இதேநேரம், இளையோர் ஒலிம்பிக் விழாவுக்கான அதிசிறந்த காலத்தைப் பதிவு செய்த முதல் வீராங்கனையாகவும் அவர் இடம்பிடித்தார்.

முன்னதாக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கிளயர் பலு என்ற வீராங்கனை குறித்த போட்டியை 6 நிமிடங்களும் 35.80 செக்கன்களில் ஓடிமுடித்ததே சிறந்த காலப் பிரதியாகப் பதிவாகியிருந்தது. எனவே, இம்முறை இளையோர் ஒலிம்பிக்கில் இலங்கையின் பிரதான பதக்க எதிர்பார்ப்பாக பாரமி வசந்தி கருத்தப்படுகின்றார்.  

இதேநேரம், ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் கலந்துகொண்ட கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் செனிரு அமரசிங்க, 2.14 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

தனது அதிசிறந்த தனிப்பட்ட உயரத்தைப் பதிவுசெய்த அவர், குறித்த போட்டிப் பிரிவில் உலக இளையோர் தரவரிசையில் நான்காவது இடத்தை பெற்று இம்முறை இயையோர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்தார். இவரும் இம்முறை இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் பிரதான பதக்க எதிர்பார்ப்பாக இடம்பெற்றுள்ளார்.

இலங்கை மெய்வல்லுனர் அணி

இதேவேளை, ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் குருநாகல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல கல்லூரியைச் சேர்ந்த டிலான் போகொட குமாரசிங்க மற்றும் பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் கேட்வே சர்வதேச பாடசாலை மாணவி ஷெலிண்டா ஜென்சென் ஆகியோர் மெய்வல்லுனர் போட்டிகளுக்காக இலங்கை அணியை பிரதிநித்துவப்படுத்தவுள்ளனர்.

ஆசிய பரா விளையாட்டு விழாவில் 35 இலங்கை வீரர்கள் பங்கேற்பு

மூன்றாவது ஆசிய பரா விளையாட்டு விழா …

அத்துடன், இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் முதற்தடவையாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 3x3 உள்ளக கூடைப்பந்தாட்டத்தில் வைல்ட் கார்ட் முறையில் இலங்கை பெண்கள் கூடைப்பந்தாட்ட அணிக்கு பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.  

இந்த நிலையில், இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கான இலங்கை அணியின் பிரதானியாக டாக்டர் சூலாபத்ம சேனாரத்ன செயற்படவுள்ளார். அத்துடன், 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய முன்னாள் நீச்சல் வீரரான ரசிக உடுகம்பொல இலங்கை அணியின் முக்கிய அதிகாரியாகவும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இதேவேளை, இவ்வருடம் நடைபெறுகின்ற 3ஆவது சர்வதேச விளையாட்டு விழாவாக இது அமையவுள்ளதால், இலங்கை வீரர்கள் அதிக திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், 206 நாடுகளைச் சேர்ந்த சுமார் 4000 வீர, வீராங்கனைகள் 32 போட்டி நிகழ்ச்சிகளுக்காக இம்முறை இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க…