அகில இலங்கை பாடசாலை விளையாட்டில் வட மாகாண வீரர்களுக்கு மூன்று பதக்கங்கள்

958

கல்வி அமைச்சின் பூரண மேற்பார்வையின் கீழ் வருடாந்தம் இடம்பெற்றுவரும் 34 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வான தேசிய ரீதியான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் இன்று (01) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

12, 14, 18 மற்றும் 20 வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவுகளில் நடைபெறுகின்ற இம்முறைப் போட்டித் தொடரின் முதல் நாளில் 3 போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

விறுவிறுப்பான போட்டியுடன் நிறைவுக்கு வந்தது நீக்கீலஸ் – மேரிஸ் பகை

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கான நீளம் பாய்தல் போட்டியில் பாணந்துறை நல்லாயன் கன்னியாஸ்திரிகள் மட கல்லூரியைச் சேர்ந்த ஷிஹாரா சதமினி 4.89 மீற்றர் தூரம் பாய்ந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

அத்துடன், 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான பரிதி வட்டம் எறிதல் போட்டியில் கந்தானை புனித செபஸ்தியார் பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த ஹேஷானி மஹேஷிகா 38.98 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இவ்விரண்டு மாணவிகளும் கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் நிகழ்த்திய தமது சொந்த சாதனைகளை முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான உயரம் பாய்தலில் கொழும்பு கேரி கல்லூரியைச் சேர்ந்த ஒமெத் சொனித்து 1.50 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டிச் சாதனை நிகழ்த்தினார்.

இது இவ்வாறிருக்க, இன்று மாலை ஆரம்பமாகிய மைதான நிகழ்ச்சிகளில் வட மாகாணத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மூன்று பதக்கங்களை வென்று அசத்தினர்.

இதில் விறுவிறுப்பாக நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஏ. புவிதரன் 4.55 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 4.70 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டி சாதனை நிகழ்த்தியிருந்த ஏ. புவிதரனுக்கு, அதே போட்டியில் 4.10 மீற்றர் உயரத்தைத் தாவி வெண்கலப் பதக்கத்தை வென்ற யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவன் ஜதூஷன் பலத்த போட்டியைக் கொடுத்திருந்தார்.

ஆரம்ப சுற்றுக்களில் முறையே 4.15, 4.30, 4.45 மீற்றர் ஆகிய உயரங்களை அடுத்தடுத்து இவ்விரண்டு வீரர்களும் தாவி தமது பலத்தை வெளிப்படுத்தியிருந்தனர். எனினும், 4.55 மீற்றர் உயரத்தை தாவுவதற்கான சவாலில் முதல் முயற்சியிலேயே புவிதரனுக்கு வெற்றி கிடைத்தது.

எனினும், குறித்த உயரத்தைத் தாவுவதற்கு ஜதூஷனினால் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்ததால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதன்படி, 4.45 மீற்றர் உயரத்தைத் தாவிய ஜதூஷன், இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், அளவெட்டி அருணோதயாக் கல்லூரி மாணவன் நெப்தலி ஜொய்சனால் கடந்த 2016 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட 4.61 மீற்றர் போட்டி சாதனையை முறியடிக்கும் நோக்கில் 4. 62 மீற்றர் உயரத்தை தனது அடுத்த இலக்காக புவிதரன் நிர்ணயித்தார். எனினும், மூன்று முயற்சிகளிலும் சோபிக்கத் தவறிய அவர், 0.06 மீற்றர் வித்தியாசத்தில் போட்டி சாதனையை முறியடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். இறுதியில் 4.55 மீற்றர் உயரத்தைத் தாவிய புவிதரன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா மற்றும் தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் ஆகிய போட்டிகளில் அண்மைக்காலமாக பிரகாசித்து வருகின்ற  ஏ. புவிதரன், இம்முறை வட மாகாண மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 4.60 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

இது இவ்வாறிருக்க, முதல் தடவையாக தேசிய மட்டப் போட்டியொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பையும் பெற்ற புவிதரன், கடந்த மே மாதம் கொழும்பில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவுக்கான வீரர்களைத் தெரிவுசெய்யும் தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றி, 4.70 உயரத்தைத் தாவி முதலிடத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கணுக்காலில் ஏற்பட்ட உபாதையினால் கடந்த மாத இறுதியில் கொழும்பில் நடைபெற்ற சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் அவர் பங்குபற்றவில்லை.

இதேவேளை, 20 வயதுக்கு உட்பட்ட கோலூன்றிப் பாய்தலின் நடப்புச் சம்பியனான யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவன் நெப்தலி ஜொய்சன், 4.00 மீற்றர் உயரத்தைத் தாவி நான்காவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார். எனினும், குறித்த போட்டியில் குளியாப்பிட்டிய பிபிலதெனிய மகா வித்தியாலத்தைச் சேர்ந்த டில்ஷான் மல்லேவ 4.00 மீற்றர் உயரத்தைத் தாவி மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாணவிக்கு மூன்றாமிடம்

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எஸ். அருணவி 4.53 மீற்றர் தூரம் பாய்ந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

வளர்மதி கழகத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்த யங் ஹென்றீசியன்ஸ்

குறித்த போட்டியில் பாணந்துறை நல்லாயன் கன்னியாஸ்திரிகள் மட கல்லூரியைச் சேர்ந்த ஷிஹாரா சதமினி 4.89 மீற்றர் தூரம் பாய்ந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், பொலன்னறுவை மெதிரிகிரிய தேசிய பாடசாலையைச் சேர்ந்த டி. காவிந்தியா 4.58 மீற்றர் உயரத்தைத் தாவி முன்னைய போட்டி சாதனையை முறியடித்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<