யாழ்ப்பாணத்தின் இரு முன்னணி கால்பந்து அணிகளான யாழ்ப்பாணம் சென் நீக்கிலஸ் மற்றும் நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக் கழக அணிகள் தமக்கிடையிலான நீண்ட கால சரித்திரத்தை இன்று (30) மாற்றியுள்ளன.
மேற்குறிப்பிட்ட இந்த இரு கழகங்களும் யாழ்ப்பாணத்தின் நாவாந்துறை என்ற ஒரே ஊரைப் பிரிதிநிதித்துவப்படுத்தும் கழகங்களாக இருந்தாலும், கடந்த காலங்களில் அறியாமையினால் இடம்பெற்ற சில மோதல் சம்பவங்களால் சுமார் 15 வருடங்களுக்கும் மேலாக எந்தவிதமான கால்பந்துப் போட்டிகளிலும் ஒன்றை ஒன்று மோதாமல் இருந்து வந்துள்ளன.
லக்கி ஸ்ராரை வீழ்த்தி FA கிண்ண அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது சென் நீக்கிலஸ்
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த பருவகாலத்திற்கான FA கிண்ண சுற்றுப்……
குறிப்பாக, இவற்றில் ஒரு கழகம் மோதும் சுற்றுத் தொடரில் அடுத்த கழகம் பங்கு கொள்ளாமல் இருந்த பல சம்பவங்களும் இதற்கு முன்னைய காலங்களில் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக, இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இளம் சமூகத்தினர் அனைவரும் இந்த இரு அணிகளினதும் போட்டி ஒன்றைக் காண முடியாத துரதிஷ்டத்திற்கு உள்ளாகி இருந்தனர்.
இவ்வாறான ஒரு நிலையில், இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்து நடாத்தப்படும் FA கிண்ண கால்பந்து சுற்றுப் போட்டியின் 32 அணிகள் பங்கு கொள்ளும் சுற்றுக்கான குலுக்கலின்படி புனித நீக்கிலஸ் மற்றும் சென் மேரிஸ் அணிகள் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த குலுக்களின் பின்னர், நீண்ட காலம் தமக்கிடையே எந்த போட்டிகளிலும் மோதாத இவ்விரு அணிகளும் இந்தப் போட்டியிலும் ஒன்றை ஒன்று மோதாது என்றே பலரும் நினைத்தனர். ஆனால், இன்று சரித்திரம் மாற்றம் பெற்றது.
கொழும்பு சிடி கால்பந்து அரங்கில் இடம்பெற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மோதலுக்காக, இரு தரப்பினரும் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்திருந்தனர். எந்தவித பிரச்சினைகளும் ஏற்படக்கூடாது என்பதற்காக போட்டி கொழும்புக்கு மாற்றப்பட்டாலும், ஆட்டத்தின் போது ஏதாவது சிறு சிறு முரண்பாடுகளாவது ஏற்படுமோ என்றும் சிலர் மனதில் அச்சம் இருந்தது. ஆனால், இவ்வாறான சந்தேகங்கள், அச்சங்கள் அனைத்திற்கும் சிறந்த பதிலைக் கொடுத்தனர் இவ்விரு அணிகளினதும் வீரர்களும், பார்வையாளர்களும்.
மலேசியாவை எதிர்கொள்ளவுள்ள இலங்கை கால்பந்து அணி
இலங்கை மற்றும் மலேசிய தேசிய கால்பந்து அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான போட்டியொன்று எதிர்வரும் ஒக்டோபர்……
போட்டியின் ஆரம்பம் முதல் சம பலத்துடன் ஆடிய இரு வீரர்களும் தமக்கான முதல் கோலுக்காக கடுமையாகப் போராடினர். எனினும், எந்தவொரு கோலும் பெறப்படாத நிலையில் முதல் பாதி ஆட்டம் நிறைவுக்கு வந்தது. தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது பாதியாட்டத்திலும் எந்தவொரு தரப்பினராலும் போட்டியின் வெற்றி கோலைப் பெற முடியாத நிலையில், ஆட்டம் சமநிலையடைந்தது.
எனவே, நொக் அவுட் போட்டிகளாக இடம்பெறும் இந்த சுற்றுத் தொடரின் அடுத்த சுற்றுக்குள் நுழையும் அணியை தெரிவு செய்ய சமநிலை தவிர்ப்பு உதை (பெனால்டி) வழங்கப்பட்டது. அதன் நிறைவில் 5 – 4 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற சென் நீக்கீலஸ் அணி FA கிண்ண தொடரின் 16 அணிகள் மோதும் சுற்றுக்குத் தெரிவானது.
எவ்வாறிருப்பினும், இந்த மோதலில் யார் வெற்றி பெற்றார் என்ற விடயம் மறக்கப்பட்டு, இரு அணிகளுக்கும் இடையிலான ஒன்றரை தசாப்தத்திற்கும் மேலான பிளவு நிறைவுக்கு வந்துள்ளது என்பதே அனைவரும் சந்தோசமாகக் கதைக்கும் விடயமாக மாற்றம் பெற்றுள்ளது. அதனை இன்றைய போட்டியின்போதும், போட்டியின் நிறைவிலும் மைதானத்தில் காணக்கூடியதாக இருந்தது
ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் வளர்க்கவுமே விளையாட்டு என்ற ஒன்று இருக்கின்றது என்று வாயளவில் சொல்லித் திரியும் மக்களே எம் மத்தியில் இன்று அதிகம் உள்ளனர். ஆனால், இன்று கொழும்பில் இடம்பெற்ற இந்த யாழ் அணிகள் இரண்டுக்கும் இடையிலான மோதலானது, விளையாட்டின் உன்னதத் தன்மையை அனைவருக்கும் எடுத்துக் காட்டியுள்ளது.
FA கிண்ண 32 அணிகள் சுற்றின் போட்டி விபரம்
இலங்கை கால்பந்து சம்மேளத்தின் (FFSL) ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த பருவத்திற்கான FA கிண்ண கால்பந்து சுற்றுத் தொடரின்…..
இந்தப் போட்டி பலருக்கும் FA கிண்ணத்தின் ஒரு சாதாரண போட்டியாகப் பார்க்கப்பட்டாலும், இவ்விரு அணிகளும் தமது கால்பந்து வரலாற்றில் சிறப்புமிக்க 2 மணித்தியாலயங்களை கடத்தி சாதனை படைத்துள்ளன என்றால் அது மிகையாகாது.
எவ்வாறிருப்பினும், இவ்வாறான ஒரு ஆட்டம் இன்றோடு நின்றுவிடக் கூடாது. மாறாக, நாம் கடந்த காலத்தை மறந்த அணியாகவே இருக்கின்றோம் என்பதை இரு தரப்பினரும் இனிவரும் போட்டிகளிலும் காண்பிக்க வேண்டும். அதுவே இப்போதைய வீரர்கள் தமது அடுத்த சந்ததியினருக்கு எடுத்துக் காட்டும் சிறந்த உதாரணமாக இருக்கும்.
இவ்விரு அணியினரும் ஒரு பகுதியில் உள்ள வீரர்கள். ஆனால், தேசிய மட்டத்தில் உள்ள 700 இற்கும் அதிகமான அணிகள் மோதிய இந்த சுற்றுத் தொடரில், இரண்டு தரப்பாகப் பிரிந்திருந்த நிலையிலேயே இறுதி 32 வரை முன்னேற்றம் கண்டுள்ளனர். இவ்விரு அணியும் ஒன்றிணைந்து திறமையாக பதினொருவர் கொண்ட ஒரே அணியாக மாற்றம் பெற்றால், நாளை ஒரு நாள் இலங்கையின் மிகப் பெரிய தொடரான டயலொக் சம்பியன்ஸ் லீக்கில் கூட இவர்களால் அசத்தலாம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
எவ்வாறிருப்பினும், விளையாட்டின் உன்னதத் தன்மையை மதித்து உத்தமர்களாக விளையாடி சென் நீக்கிலஸ் மற்றும் நாவாந்துறை சென் மேரிஸ் அணிகளின் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் இலங்கையின் முதல் தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com எமது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.
வளரட்டும் உங்கள் சகோதரத்துவம், உயரட்டும் உங்கள் ஊரின் பெருமை.
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<