இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் ஏழாவது வாரத்திற்கான முக்கிய ஐந்து போட்டிகள் சனிக்கிழமை (29) நடைபெற்றன. இதில் லிவர்பூல் மற்றும் செல்சி அணிகளுக்கு இடையிலான தீர்க்கமான போட்டி சமநிலையில் முடிந்ததோடு வெஸ்ட் ஹாமிடம் மன்செஸ்டர் யுனைடெட் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. ஏனைய போட்டிகளில் மற்றொரு வெற்றியை பெற்ற மன்செஸ்டர் சிட்டி முதலிடத்திற்கு முன்னேறிய நிலையில் ஆர்சனல், டொட்டன்ஹாம் அணிகள் இலகு வெற்றி பெற்றன.
வெஸ்ட் ஹாம் யுனைடெட் எதிர் மன்செஸ்டர் யுனைடெட்
வெஸ்ட் ஹாமிடம் 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த மன்செஸ்டர் யுனைடெட் அணி கடந்த ஐந்து தினங்களுக்குள் இரண்டாவது தோல்வியை சந்தித்திருப்பதோடு இது அந்த அணியின் முகாமையாளர் ஜோஸ் மோரின்ஹோவுக்கும் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவை எதிர்கொள்ளவுள்ள இலங்கை கால்பந்து அணி
மன்செஸ்டர் யுனைடெட் அணி கடந்த செவ்வாயன்று இரண்டாம் தர டெர்பி கௌண்டி அணியிடம் தோல்வியுற்ற நிலையிலேயே லண்டன் அரங்கில் சனிக்கிழமை மாலை வெஸ்ட் ஹாமை எதிர்கொண்டது.
எனினும் இந்தப் போட்டியில் தோல்வியை சந்தித்ததன் மூலம் இதுவரை ஆடிய ஏழு பிரீமியர் லீக் போட்டிகளில் மூன்றில் தோல்வியை சந்தித்து மன்செஸ்டர் யுனைடெட் அணி கடந்த 29 ஆண்டுகளில் இந்த தொடரில் மோசமான ஆரம்பத்தை பதிவு செய்துள்ளது.
போட்டி ஆரம்பித்து ஐந்தாவது நிமிடத்தில் பிலிப் அண்டர்சன் பெற்ற கோல் மற்றும் விக்டர் லிண்டலொப்பின் ஓன் கோல் காரணமாக வெஸ்ட் ஹாம் முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் மாற்று வீரராக வந்த மார்கஸ் ரஷ்போர்ட் மன்செஸ்டர் யுனைடெட் அணிக்காக கோல் ஒன்றை பெற்றபோதும் மார்கோ அர்னோடோவிக் 74 ஆவது நிமிடத்தில் வெஸ்ட் ஹாமுக்கு 3ஆவது கோலை பெற்று அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்த தோல்வி மூலம் பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் மன்செஸ்டர் யுனைடெட் அணி எட்டு புள்ளிகளோடு எட்டாவது இடத்தில் இருப்பதோடு அதன் பிரீமியர் லீக் வெற்றி வாய்ப்பும் சரிந்து காணப்படுகிறது.
ஆர்சனல் எதிர் வட்போர்ட்
கடைசி நிமிடங்களில் வட்போர்ட் கழகத்தின் கிரேக் கத்கார்ட் மூலம் பெற்ற ஓன் கோல் மற்றும் இரண்டு நிமிடங்கள் கழித்து மெசுட் ஒசில் பெற்ற கோல்கள் மூலம் ஆர்சனல் அணி தனது வெற்றியை உறுதி செய்து பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது.
லண்டன், எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற போட்டியில் வட்போர்ட் அதிக வாய்ப்புகளை உருவாக்கியபோதும் கடைசியில் அந்த அணிக்கு பாதகமான ஒரு கோல் விழுந்தது. 81ஆவது நிமிடத்தில் பின்கள வீரர் கத்கார்ட் கவனக்குறைவாக சொந்த வலைக்குள்ளேயே பந்தை தட்டிவிட்டார்.
இரண்டு நிமிடங்களின் பின் அலெக்சாண்ட்ரே லகசெட் தொலைவில் இருந்து தாழ்வாக பரிமாற்றிய பந்தை ஜெர்மனியின் மெசுட் ஒசில் சவாலின்றி வலைக்குள் செலுத்தினார்.
வளர்மதி கழகத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்த யங் ஹென்றீசியன்ஸ்
வட்போர்ட் அணி முந்தைய மூன்று பிரீமியர் லீக் போட்டிகளில் ஆர்சனலை எதிர்கொண்டபோதும் அதில் இரண்டில் வெற்றியீட்டியது. ஆனால் இம்முறை அந்த வெற்றியை தொடர முடியவில்லை. இதனால் புள்ளிப்பட்டியலில் ஆர்சனலிடம் ஐந்தாவது இடத்தை பறிகொடுத்த வட்போர்ட் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
ஹடர்ஸ்பீல்ட் டவுன் எதிர் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பூர்
பிரீமியர் லீக்கில் பின் வரிசையில் இருக்கும் அணியான ஹடர்ஸ்பீல்ட் டவுன் அணியை 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்ற டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பூர் நான்காவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது.
இங்கிலாந்து அணித் தலைவரான ஹரி கேன் 25 ஆவது நிமிடத்தில் கீரன் டிரிப்பியரின் கோனர் கிக்கை தலையால் முட்டி ஹொட்ஸ்பூர் அணிக்கு முதல் கோலை பெற்றார். தொடர்ந்து 9 நிமிடங்கள் கழித்து டென்னி ரொஸ் பெனால்டி எல்லைக்குள் கீழே வீழ்த்தப்பட்டதை அடுத்து கிடைத்த பெனால்டி கிக்கை கேன் கோலாக மாற்றினார்.
எனினும் ஹொட்ஸ்பூர் எதிர்வரும் புதன்கிழமை (ஒக்டோபர் 03) ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடருக்காக பலம்மிக்க பார்சிலோனாவை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் அந்த அணி மேலும் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. பின்கள வீரர் ஜான் வெர்டொன்கல் மற்றும் மத்தியகள வீரர் மூசா டெம்பலே இருவரும் சனிக்கிழமை போட்டியில் பாதி நேரத்தில் உபாதையால் வெளியேறினர். ஏற்கனவே முன்கள வீரர் டெலே அலியும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.
மன்செஸ்டர் சிட்டி எதிர் பிரைட்டன் மற்றும் ஹோவ் அல்பியோன்
ரஹீம் ஸ்டெர்லிங் மற்றும் செர்கியோ அகுவேரோவின் கோல்கள் மூலம் பிரைட்டன் அணியை இலகுவாக வென்ற மன்செஸ்டர் சிட்டி பிரீமியர் லீக்கில் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டது.
போட்டியின் ஆரம்பத்தில் நீடித்த இழுபறியை 29ஆவது நிமிடத்தில் முடிவுக்கு கொண்டு வந்த ஸ்டெர்லிங், லெரோய் சேன் பரிமாற்றிய பந்தை கோலாக மாற்றினார். தொடர்ந்து போட்டியில் ஆதிக்கம் செலுத்திய மன்செஸ்டர் சிட்டி அணிக்கு அகுவேரா அதிரடி கோல் ஒன்றை பெற்றார்.
மன்செஸ்டர் சிட்டி அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் 6 வெற்றி, ஒரு சமநிலை என மொத்தம் 19 புள்ளிகளை பெற்றிருப்பதோடு கோல் வித்தியாசத்தில் முதலிடத்தை பிடித்தது. செல்சி அணியும் 19 புள்ளிகளுடன் உள்ளது.
செல்சி எதிர் லிவர்பூல்
டானியல் ஸ்ட்ரிட்ஜ் கடைசி நிமிடங்களில் பெற்ற கோல் மூலம் லிவர்பூல் அணி செல்சியுடனான பரபரப்பான போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டதோடு பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்தும் தனது முன்னிலையை தக்கவைத்துக் கொண்டது.
இம்முறை வர்த்தக நிறுவன எழுவர் கால்பந்து தொடரில் 34 அணிகள் மோதல்
25ஆவது நிமிடத்தில் மாடியோ கொவாசிக் வேகமாக பரிமாற்றிய பந்தை எதிரணி பெனால்டி எல்லைக்குள் இருந்து பெற்ற ஈடன் ஹசார்ட் நேர்த்தியாக உதைத்து கோலாக மாற்றினார். இதன் மூலம் முன்னிலை பெற்ற செல்சி கடைசி நிமிடங்கள் வரை தனது முன்னிலையை தக்கவைத்து வெற்றி வாய்ப்பை நெருங்கியது.
எனினும் போட்டி முழுவதிலும் லிவர்பூல் கோல் பெறும் மூன்று அல்லது நான்கு பொன்னான வாய்ப்புகளை தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் போட்டியின் முழு நேரம் முடிவதற்கு இரண்டு நிமிடங்கள் மாத்திரமே இருக்கும்போது ஸ்ட்ரிட்ஜ் பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து உதைத்த பந்து கோல்காப்பாளர் தாவித் தடுத்தபோதும் முடியாமல் பறந்து சென்று கோலாக மாறியது. இதன் மூலம் லிவர்பூல் தோல்வியை தவிர்த்து போட்டியை சமநிலை செய்தது.
லிவர்பூல் அணி இம்முறை பிரீமியர் லீக் போட்டிகளின் ஆறு ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற நிலையில் இந்தப் போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<