ரெட் புல் அனுசரணையில் இலங்கையில் நடைபெற்று வரும் உலகின் சிறந்த பல்கலைக்கழக அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் இறுதிக்கட்ட போட்டிகளில் இன்று (26) இடம்பெற்ற போட்டிகளில் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் வெற்றி பெற்றன.
- இலங்கை எதிர் ஜிம்பாப்வே
NCC மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஜனித் லியனகேயின் சகலதுறை ஆட்டத்தின் மூலம் இலங்கை அணி 151 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பாக ஜனித் லியனகே அதிகபட்சமாக 66 ஓட்டங்களை பெற்றதோடு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மலிந்து மதுரங்க 39 ஓட்டங்களையும் பெற்றிருந்தார். பந்து வீச்சில் தவன்டா சாரும்பிரா மூன்று விக்கெட்டுகள் மற்றும் அனேலெ கெவென்யா இரண்டு விக்கெட்டுகள் என வீழ்த்தியிருந்தனர்.
இறுதிப்போட்டிக்கான வாய்பபை அதிகரித்துக்கொண்ட இந்திய அணி
வெற்றி பெறுவதற்கு 180 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் தமது இன்னிங்சை ஆரம்பித்த ஜிம்பாப்வே அணி ஜனித் லியனகே வீசிய முதலாவது ஓவரிலே ஓட்டமெதுவுமின்றி தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. தொடர்ந்து மூன்றாவது ஓவரை வீசிய அவர் ஹெட்ரிக் உட்பட நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். இறுதியில் ஜிம்பாப்வே அணி 8.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 28 ஓட்டங்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தது. பந்து வீச்சில் ஜனித் லியனகே நான்கு ஓவர்களில் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 6 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். அது தவிர கோஷான் தனுஷ்க இரண்டு விக்கெட்டுகளையும் டேவிந்த் பத்மநாதன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.
ஜிம்பாப்வே அணியினரால் பெறப்பட்ட 28 ஓட்டங்களுள் இலங்கை அணி தமது இன்னிங்சில் விளையாடிய போது எனேர்ஜைஸர் ஓவரில் (Energizer Over) இரண்டு விக்கெட்டுகளை இழந்தமைக்காக எதிரணியான ஜிம்பாப்வே அணிக்கு விக்கெட் ஒன்றுக்கு 5 ஓட்டங்கள் வீதம் என வழங்கப்பட்ட 10 பெனால்டி ஓட்டங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியின் ஆட்ட நாயகனாக சகலதுறைகளிலும் பிரகாசித்த இலங்கை அணியின் ஜனித் லியனகே தெரிவு செய்யப்பட்டார்.
- பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ்
SSC மைதானத்தில் இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 49 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்பபை பாகிஸ்தான் அணிக்கு வழங்கியிருந்தது. அந்த வகையில் அவ்வணி தமது இன்னிங்சிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பாகிஸ்தான் அணி சார்பாக குர்ராம் ஷஃஸாட் மற்றும் ஷஃஸார் ஹஸன் ஆகியோர் முறையே 58, 32 ஓட்டங்களைப் பெற்றனர். பங்களாதேஷ் அணி சார்பாக பந்து வீச்சில் அரிபுர் ரஹ்மான் மற்றும் ராஹில் ஹஸன் ஆகிய இருவரும் இரண்டு விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்றால் ப்லே ஓஃப் (Play off) சுற்றில் விளையாடுவதற்கான சந்தர்ப்பத்தை தக்க வைத்துக்கொள்ளலாம் என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 17.5 ஓவர்களில் 107 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. அவ்வணி சார்பாக இன்சமாம் உல் ஹக் மற்றும் ஷஃபாப் ஜமில் ஆகியோர் 25, 23 ஓட்டங்களைப் பெற்றனர். பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில் முஹம்மத் அஸாத் மூன்று விக்கெட்டுகளும் குர்ராம் ஷஃஸாட் மற்றும் மஹ்மூத் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
- இந்தியா எதிர் ஐக்கிய அரபு இராச்சியம்
NCC மைதானத்தில் இடம் பெற்ற இப்போட்டியில் 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை மேலும் உறுதி செய்துள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணியினர் தமது இன்னிங்சுக்காக 8 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். துடுப்பாட்டத்தில் மெஹ்தி ஆசாரியா, இமாத் முஸ்தாக் மற்றும் சயிட் பைஷான் ஆகியோர் முறையே 30, 29 மற்றும் 27 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் சுப்ஹம் டைஸ்வால் மற்றும் திவ்யங் ஹிங்கேகர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
அடுத்த உலக கிண்ணத்தை இலங்கை வெல்வது கடினம்: அர்ஜுன ரணதுங்க
140 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியினர் 18.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர். இந்திய அணிக்காக ஓம்கார் கட்பே பெற்ற 28 ஓட்டங்கள் உட்பட ஏனைய வீரர்களின் பங்களிப்புக்களும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. பந்து வீச்சில் மெஹ்தி ஆசாரியா 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். போட்டியின் ஆட்ட நாயகனாக ஐக்கிய அரபு இராச்சிய அணியின் சகலதுறை வீரர் மெஹ்தி ஆசாரியா தெரிவு செய்யப்பட்டார்.
இத்தொடரின் கடைசி லீக் போட்டிகள் நாளை (27) நடைபெறவுள்ளது. நாளைய போட்டிகளில் பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் NCC மைதானத்தில் விளையாடவுள்ள அதே நேரம் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை SSC மைதானத்தில் எதிர்கொள்கிறது. இறுதியாக இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையேயான போட்டி NCC மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க