இலங்கை கால்பந்து சம்மேளத்தின் (FFSL) ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த பருவத்திற்கான FA கிண்ண கால்பந்து சுற்றுத் தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 32 அணிகள் மோதும் சுற்றின் (Round of 32) போட்டிகள் விபரம் வெளியாகியுள்ளது.
FA கிண்ண 64 அணிகள் சுற்றின் போட்டி விபரம்
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த..
இலங்கையின் மிக பழமையான போட்டித் தொடரான FA கிண்ணத்தின் 56ஆவது பருவத்திற்கான போட்டிகளே தற்பொழுது நடைபெற்று வருகின்றன. 64 அணிகள் பங்கேற்ற சுற்று போட்டிகள் மூலம் தெரிவான அணிகளே 32 அணிகள் மோதும் சுற்றில் பங்கேற்கவுள்ளன.
இதன்படி, குலுக்கல் (Draw) அடிப்படையிலேயே 32 அணிகள் மோதும் சுற்றுக்கான போட்டிகள் நிர்ணயிக்கப்பட்டன. இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமையகத்தில் நேற்று (25) இந்த குலுக்கல் நிகழ்வு இடம்பெற்றது. எனினும், போட்டிகள் நடைபெறும் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் யாழ்ப்பாணம் புனித நிக்கீலஸ் விளையாட்டுக் கழகம், யாழ்ப்பாணம் புனித மேரிஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்கொள்ளவுள்ளது. மற்றொரு யாழ். அணியான, பிரிவு இரண்டுக்கான சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள பாடும்மீன் விளையாட்டுக் கழகம், மாவனல்லை யுனைடெட் விளையாட்டுக் கழகத்துடன் பலப்பரீட்சை நடத்தி, அதில் வெற்றி பெறும் பட்சத்தில் 32 அணிகள் சுற்றுக்கு தெரிவாகும்.
இதில் நடப்புச் சம்பியனான இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் இந்த நொக் அவுட் சுற்றில் பாணந்துறை சரிகமுல்லை யூத் விளையாட்டுக் கழகத்துடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
லக்கி ஸ்ராரை வீழ்த்தி FA கிண்ண அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது சென் நீக்கிலஸ்
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த…
FA கிண்ண வரலாற்றில் அதிகமுறை சம்பியனான (15) சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகத்தை காலிறுதிக்கு முந்திய சுற்றில் சந்திக்கவுள்ளது.
அதேபோன்று, இந்த சுற்றில் இடம்பெறும் மேலும் சில முக்கிய மோதல்களாக, கொழும்பு ரினௌன் எதிர் கம்பளை கிறிஸ்டல் பெலஸ், இலங்கை விமானப்படை எதிர் களுத்தறை புளூ ஸ்டார் மற்றும் அநுராதபுரம் சொலிட் எதிர் நீர்கொழும்பு யூத் அணிகளுக்கு இடையிலான போட்டிகளைக் குறிப்பிடலாம்.
இலங்கையில் உள்ள 65 கால்பந்து லீக்குகளில் அங்கம் வகிக்கும் 716 கால்பந்து அணிகளுக்காக நொக் அவுட் முறையில் இடம்பெறும் இந்த பருவத்திற்கான FA கிண்ண கால்பந்து தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது. லீக் மட்டத்தில் இடம்பெற்ற ஆரம்ப சுற்றுப் போட்டிகள் நிறைவு பெற்றதன் பின், அடுத்த கட்டமான மாவட்ட மட்டத்திலான மோதல்கள் இடம்பெற்றன.
மாவட்ட மட்ட மோதல்களின் நிறைவில் 64 அணிகள் பங்கேற்கும் தேசிய மட்டத்திலான போட்டிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
32 அணிகள் சுற்றின் போட்டி விபரம்
போட்டி இல. | போட்டி |
685 | புனித நிக்கீலஸ் வி.க. (யாழ்.) எதிர் சென் மேரிஸ் வி.க. (யாழ்.) |
686 | ரெட் சன் வி.க. (கம்பளை) எதிர் மாநகர சபை வி.க. (இரத்தினபுரி) |
687 | கிறிஸ்டல் பெலஸ் கா.க. எதிர் ரனௌன் வி.க. |
688 | எவரெடி வி.க. (கொழும்பு) எதிர் ரெட் ரொபின்ஸ் வி.க. (காலி) |
689 | ஜுப்பிட்டர்ஸ் வி.க. எதிர் நியூ யங்ஸ் கா.க. |
690 | இலங்கை விமானப்படை வி.க. எதிர் புளூ ஸ்டார் வி.க. |
691 | ரேஞ்சர்ஸ் வி.க.(வடமராச்சி) எதிர் நியூ ஸ்டார் வி.க. (கொழும்பு) |
692 | இலங்கை பொலிஸ் வி.க. எதிர் கோல்டன் ரைஸ் வி.க. (பேருவளை) |
693 | உருதிராபுரம் வி.க. (கிளிநொச்சி) எதிர் லிவர்பூல் வி.க. (புத்தளம்) |
694 | சௌண்டர்ஸ் வி.க. எதிர் இலங்கை கடற்படை வி.க. |
695 | கொழும்பு கா.க எதிர் விம்பிள்டன் வி.க. (புத்தளம்) |
696 | சொலிட் வி.க. எதிர் நீர்கொழும் யூத் வி.க. |
697 | யுனைடெட் வி.க./பாடுமீன் வி.க. (யாழ்.) எதிர் SLTB வி.க. |
698 | இலங்கை இராணுவப்படை வி.க. எதிர் சரிகமுல்லை யூத் வி.க. |
699 | ஜாவா லேன் வி.க. எதிர் கிரேட் ஸ்டார் வி.க. (பேருவளை)/பெலிகன்ஸ் வி.க. |
700 | சிவில் பாதுகாப்பு வி.க. எதிர் சிறைச்சாலை வி.க. |
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<