கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 88 ஆவது சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 2 ஆவது நாளான இன்றைய தினம் பன்னிரெண்டு போட்டி சாதனைகளும், 6 முன்னைய போட்டி சாதனைகளும் முறியடிக்கப்பட்டன.
இதில், குளியாப்பிட்டிய மத்திய கல்லூரியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவியான பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியை நிறைவுசெய்ய 9 நிமிடங்கள் 58.3 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார். அத்துடன், தேசிய மட்டத்தில் பதிவாகிய ஐந்தாவது அதிசிறந்த காலமாகவும் இது இடம்பிடித்தது.
ஜோர்ன் டாபர்ட் மெய்வல்லுனரில் வட மாகாண வீரர்களுக்கு ஐந்து பதக்கங்கள்
முன்னதாக, நேற்று (19) நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் போட்டியிலும் அவர் புதிய போட்டிச் சாதனை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், நேற்று நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி மாணவனான ஹிரூஷ ஹஷேன், இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டி மற்றும் ஆண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்று இம்முறை சேர் ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டிகளில் ஹெட்ரிக் பதக்கங்களை வென்ற முதல் வீரராகவும் இடம்பிடித்தார்.
இது இவ்வாறிருக்க, மைதான நிகழ்ச்சிகளில் இன்றைய தினமும் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்த வட மாகாண வீரர்கள் ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.
இதேநேரம், 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட பதுளை சரவஸ்வதி தேசிய கல்லூரி மாணவன் சி. அரவிந்தன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதன்படி, போட்டிகளின் இரண்டாவது நாள் முடிவில் வட மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஒட்டுமொத்தமாக 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக எட்டு பதக்கங்களை வென்றனர்.
மகாஜனாவுக்கு மேலும் இரு பதக்கங்கள்
கோலூன்றிப் பாய்தலில் வழமைபோல் தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி அணி, 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை சுவீகரித்தது.
இக்கல்லூரியைச் சேர்ந்த கே. கேதூஷன், 4.00 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை வென்றார். இதே ஆற்றலை வெளிப்படுத்திய மகாஜனா கல்லூரியின் மற்றுமொரு வீரரான எஸ். கபில்ஷன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
எனினும், அடுத்த இலக்காக 4.10 மீற்றர் உயரத்தை தாவுவதற்கு இவ்விரண்டு வீரர்களும் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் முடிந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.
அரையிறுதியில் ஈராக்கிடம் போராடி தோற்றது இலங்கை
3.80 மீற்றர் உயரத்திற்குத் தாவிய பிபிலதெனிய மத்திய கல்லூரியைச் சேர்ந்த அசங்க டில்ஷானுக்கு வெண்கலப் பதக்கம் கிட்டியது.
முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவர்களான எஸ். சுகிதர்தன், எஸ். ஜம்சன் மற்றும் ஏ. ஜினோயன் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பெற்று அசத்தியிருந்தனர்.
அத்துடன், 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் மகாஜனா கல்லூரி மாணவி சி. ஹெரீனா 1.54 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.
மிதுன்ராஜுக்கு 2ஆவது பதக்கம்
16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான பரிதிவட்டம் எறிதலில் பங்குகொண்ட ஹார்ட்லி கல்லூரி மாணவன் சுசிந்திரகுமார் மிதுன்ராஜ், 53.79 மீற்றர் தூரத்தை எறிந்து முன்னைய போட்டி சாதனையை முறியடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அண்மைக்காலமாக தேசிய மற்றும் அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் மைதான நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று வருகின்ற மிதுன்ராஜ், மைதான நிகழ்ச்சிகளான குண்டு எறிதல், பரிதிவட்டம் எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வருகின்றார்.
இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 14.55 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெண்கலப் பதக்கத்தினை வென்றார்.
இது இவ்வாறிருக்க, இன்று காலை நடைபெற்ற பரிதிவட்டம் எறிதல் போட்டியின் ஆரம்ப சுற்றுக்களில் சிறந்த தூரங்களைப் பதிவுசெய்து முன்னிலை பெற்ற மிதுன்ராஜுக்கு, கைவிரலில் ஏற்பட்டுள்ள காயத்தினால் இறுதி சுற்றுக்களில் எதிர்பார்த்தளவு திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனது. இதன்படி, 53.79 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த அவர், இம்முறை சிரேஷ்ட ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டித் தொடரில் தனது 2 ஆவது பதக்கத்தையும் பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், கடந்த வருடம் நடைபெற்ற சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான பரிதிவட்டம் எறிதலில் பங்குபற்றியிருந்த மிதுன்ராஜ், 53.23 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், குறித்த போட்டியில் மிதுன்ராஜுக்கு அண்மைக்காலமாக பலத்த போட்டியைக் கொடுத்து வருகின்ற பம்பலப்பிட்டிய புனித பேதுரு கல்லூரி மாணவன் ருமேஷ் தரங்க 61.67 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.
பொன் விழாக் கோலம் பூணும் மட்டக்களப்பின் வெபர் கிண்ண கூடைப்பந்து தொடர்
முன்னதாக கடந்த வருடம் பம்பலப்பிட்டிய புனித பேதுரு கல்லூரியைச் சேர்ந்த அகலங்க விஜேசூரிய, 52.48 மீற்றர் தூரத்தை எறிந்து நிலைநாட்டிய சாதனையை ருமேஷ் தரங்க முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
அரவிந்தன் அபாரம்
20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்த சந்திரகுமார் அரவிந்தன், குறித்த போட்டியை ஒரு நிமிடமும் 55.65 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார். ஆனால் குறித்த போட்டியில் அவருடைய சிறந்த காலத்தை பதிவு செய்ய முடியாமல் போனது.
கடந்த மே மாதம் இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 800 மீற்றரில் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அரவிந்தன், ஏப்ரல் மாதம் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 3 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியில் கல்வி பயின்று வருகின்ற அரவிந்தன், 2015ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா, கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர், ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனர் மற்றும் தேசிய இளையோர் விளையாட்டு விழாக்களில் வெற்றிகளைப் பதிவுசெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், குறித்த போட்டியில் பம்பலப்பிட்டிய புனித பேதுரு கல்லூரியின் இசுரு லக்ஷான் (ஒரு நிமி. 55.65 செக்.) தங்கப் பதக்கத்தையும், கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியின் எல். ஜயதிஸ்ஸ (ஒரு நிமி. 57.29 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வெற்றி கொண்டனர்.
அஞ்சலோட்டத்தில் 3 சாதனைகள்
இன்று காலை நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 4 x 100 அஞ்சலோட்டத்தில் பெந்தொட்ட காமினி தேசிய கல்லூரி அணி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. குறித்த போட்டியை நிறைவுசெய்ய 49.74 செக்கன்களை அந்த அணி எடுத்துக்கொண்டது.
முன்னதாக 2003ஆம் ஆண்டு நடைபெற்ற ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் வென்னப்புவ திருக்குடும்ப கன்னியர் மடம் மாணவிகளால் (49.96 செக்.) நிலைநாட்டப்பட்ட சாதனையை சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு காமினி தேசிய கல்லூரி மாணவிகள் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த போட்டியில் ராஜகிரிய கேட்வே சர்வதேச கல்லூரி அணி (50.86 செக்.) முன்னைய சாதனையை விட சிறப்பாக ஓடி முடித்து வெள்ளிப் பதக்கத்தையும், குருநாகல் சேர். ஜோன் கொத்தலாவல கல்லூரி (50.96 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.
அத்துடன், இப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜகிரிய கேட்வே சர்வதேச கல்லூரி அணியில் தேசிய கனிஷ்ட அணியில் இடம்பெற்றுள்ள ஷெலிண்டா ஜென்சன் மற்றும் சதீபா ஹெண்டர்சன் போன்ற அனுபமிக்க வீராங்கனைகளை மிகவும் பின்தங்கிய பாடசாலையான பெந்தொட்டயில் உள்ள காமினி தேசிய கல்லூரி அணி வீழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
“வடக்கின் கில்லாடி யார்?” ஐந்தாவது நாள் போட்டிகளின் முடிவுகள்
இது இவ்வாறிருக்க, 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 4×100 அஞ்சலோட்டத்தில் கொழும்பு றோயல் கல்லூரி அணி மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான அஞ்சலோட்டத்தில் கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரி அணியும் புதிய போட்டி சாதனைகளுடன் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தன. அத்துடன், இவ்விரண்டு பாடசாலை அணிகளும் 2015ஆம் மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் நிலைநாட்டப்பட்ட ஜோன் டார்ப்ட் சாதனைகளை முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
12 போட்டி சாதனைகள் முறியடிப்பு
இன்று காலை நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 5000 மீற்றர் வேக நடைப் போட்டியில் மாகந்துர மத்திய கல்லூரி மாணவி சசிகலா தில்ஹானி (27 நிமி. 58.35 செக்.), புதிய போட்டிச் சாதனை படைத்தார்.
முன்னதாக, 2008ஆம் ஆண்டு நமடகஸ்வௌ மத்திய கல்லூரியைச் சேர்ந்த எல்.ஏ நிமாலி நிலைநாட்டிய சாதனையை சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு அவர் முறியடித்தார்.
இதேவேளை, ஜப்பானின் கிபு நகரில் கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 400 மீற்றரில் வெள்ளிப் பதக்கத்தையும், அதற்குமுன் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் 400 மீற்றர் மற்றும் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டிகளில் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற குருநாகல் மலியதேவ கல்லூரி மாணவன் பசிந்து கொடிகார (52.69 செக்.) புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
இந்த மாதம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை 4 x 400 அஞ்சலோட்ட குழாமிலும் பசிந்து கொடிகார இடம்பெற்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதேவேளை, ஆர்ஜென்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்றாவது இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள கொழும்பு றோயல் கல்லூரி மாணவனான செனிரு அமரசிங்க, 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 2.10 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
முன்னதாக, 2004ஆம் ஆண்டு கொடகவல மத்திய கல்லூரியைச் சேர்ந்த டி. ரணதுங்கவினால் நிலைநாட்டிய சாதனையை சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு அவர் முறியடித்தார்.
இதேநேரம், மத்திய தூரப் போட்டிகளில் தேசிய மற்றும் தெற்காசிய சம்பியனாகிய வலள ஏ. ரத்னாயக்க கல்லூரி மாணவி டில்ஷி குமாரசிங்க, 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் (2நிமி. 12.67 செக்.) புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
இலங்கை வரும் இங்கிலாந்து ஒருநாள் குழாம் அறிவிப்பு
இதேவேளை, 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் கொழும்பு பிஷப்ஸ் கல்லூரி மாணவி ஒவினி சந்திரசேகர (13.15 செக்.), 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியைச் சேர்ந்த ரமேஷ் மல்ஷான் (21.92 செக்.), 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வலள ஏ ரத்னாயக்க கல்லூரியைச் சேர்ந்த டில்ஷி குமாரசிங்க (2நிமி. 12.67 செக்.) மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் மாதம்பே டி.எஸ் சேனநாயக்க கல்லூரியைச் சேர்ந்த லஹிரு அவிஷ்க குருசிங்க (ஒரு நிமி. 59..02 செக்.), ஆகிய வீரர்கள் புதிய போட்டி சாதனைகளை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
88 ஆவது தடவையாகவும் நடைபெற்றுவருகின்ற சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் தொடரின் மூன்றாவது நாள் போட்டிகள் நாளை (21) நடைபெறவுள்ளது.
>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<