கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்று வரும் முதலாவது ஆசிய சவால் கிண்ண கரப்பந்தாட்ட தொடரில், தங்களுடைய இறுதி லீக் போட்டியில் விளையாடிய இலங்கை அணி 1-3 என்ற செட்கள் கணக்கில் சவூதி அரேபிய அணியிடம் தோல்வியடைந்துள்ளது.
ஆசிய கரப்பந்தாட்ட தரவரிசையில் பின் நிலைகளை பிடித்துள்ள எட்டு அணிகள் பங்கேற்கும் கரப்பந்தாட்ட தொடரை ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளனம் முதல் தடவையாக ஏற்பாடுசெய்துள்ளது.
இதில் முன்னதாக ஹொங்கொங் மற்றும் மலேசிய அணிகளுக்கு எதிராக மோதி முதலிரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி செட் தோல்வியில்லாத வெற்றிகளை பெற்றுக்கொண்டது. எனினும் ஆசிய தரவரிசையில் குறித்த இரண்டு அணிகளும் இலங்கை அணியை விடவும் சர்வதேச தரவரிசையில் பின்னடைவில் உள்ள அணிகளாக இருந்தன.
மலேசியாவை இலகுவாக வீழ்த்திய இலங்கைக்கு இரண்டாவது வெற்றி
எவ்வாறாயினும், இன்றைய தினம் ஆசியா மற்றும் சர்வேச தரவரிசையில் முன்னிலையில் உள்ள சவூதி அரேபிய அணியுடன் நடைபெற்ற போட்டியில் 1-3 என்ற செட்கள் கணக்கில் தோல்வியடைந்துள்ளது
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் இலங்கை அணி முதல் செட்டை வெற்றியுடன் ஆரம்பித்தது. முதலாவது செட்டை இலங்கை அணி 25-22 என கைப்பற்றியிருந்தது. எனினும் அடுத்த மூன்று செட்களிலும் சிறப்பாக ஆடிய சவூதி அரேபிய அணி 25-22, 25-19 மற்றும் 25-20 என்ற செட்கள் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தது.
இதேவேளை தங்களது குழுவில் (A) 6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்திருந்த இலங்கை அணி, இன்றைய தினம் பெற்ற தோல்வியுடன் இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளதுடன், சவூதி அரேபிய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. அத்துடன் லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், காலிறுதிப் போட்டிகள் நாளை மறுதினம் (19) ஆரம்பிக்கவுள்ளன.
ஏனைய போட்டி முடிவுகள்
ஈராக் எதிர் ஐக்கிய அரபு இராச்சியம்
- ஐக்கிய அரபு இராச்சிய அணி 3-2 என்ற செட்கள் கணக்கில் வெற்றி
- செட் புள்ளிகள் : 25-18, 24-26, 23-25, 25-22, 15-09
பங்களாதேஷ் எதிர் மொங்கோலியா
- பங்களாதேஷ் அணி 3 -1 என்ற செட்கள் கணக்கில் வெற்றி
- செட் புள்ளிகள் : 25-22, 25-23, 23-25, 25-19
மலேசியா எதிர் ஹொங்கொங்
- மலேசிய அணி 3 – 0 என்ற நேர் செட்கள் கணக்கில் வெற்றி
- செட் புள்ளிகள் : 30-28, 25-19, 25-19
>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<