ஆசிய கிண்ணத்தின் முதல் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்ட பங்களாதேஷ் அணி, 137 ஓட்டங்களால் அபார வெற்றியை பெற்றுக்கொண்டது. இதற்கு முக்கிய காரணமாக 144 ஓட்டங்களை விளாசிய முஷ்பிகூர் ரஹீமின் அதிரடிதான் என புகழப்பட்டு வந்தது.
எனினும் முஷ்பிகூர் ரஹீமின் முழுமையான துடுப்பாட்ட வெளிப்பாட்டுக்கும், பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கும் மிக முக்கிய காரணமாக அமைந்தவர் அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால் என்றால் அது மிகையாகாது.
ஆசியக் கிண்ண தொடரில் இருந்து முழுமையாக விலகிய தமிம் இக்பால்
பங்களாதேஷ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும்…
பங்களாதேஷ் அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பால் தனது நாட்டின் வெற்றிக்காக உபாதையையும் பொருட்படுத்தாது, ஒரு கையில் துடுப்பெடுத்தாடி, அணியின் ஓட்டங்களை உயர்த்துவதற்கு மிக முக்கிய காரணமாகியிருந்தார். இரண்டாவது ஓவரில் சுராங்க லக்மால் வீசிய பந்து, நேரடியாக தமிம் இக்பால் கையின் மணிக்கட்டு பகுதியை பதம் பார்க்க, உபாதை காரணமாக தமிம் மைதானத்தை விட்டு வெளியேறினார். பின்னர் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அவருக்கு மணிக்கட்டு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டமை உறுதிசெய்யப்பட்டது.
இதனால் கடும் சவாலுக்கு மத்தியில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி ஒரு கட்டத்தில் 229 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. தமிம் இக்பாலின் உபாதையால் பங்களாதேஷ் அணியின் ஆட்டம் நிறைவுசெய்யப்படலாம் என்ற நேரத்தில் மைதானத்துக்கு வருகைத்தந்த அவர், ஒரு கையால் துடுப்பெடுத்தாடி முஷ்பிகூர் ரஹீமுக்கு பங்களிப்பு வழங்கினார். இதன் மூலம் அதிரடியாக ஆடிய ரஹீம் அணியின் ஓட்ட எண்ணிக்கையை 261 ஆக உயர்த்தினார்.
சிலவேளையில் தமிம் இக்பால் மைதானத்துக்கு வருகைத்தராவிடின், குறைந்த ஓட்டங்கள் காரணமாக இலங்கை அணி உளவியல் ரீதியில் வழுவடைந்து போட்டியில் வெற்றியீட்டியிருக்கலாம். இதனால் பங்களாதேஷ் அணி பெற்ற வெற்றியின், மிகப்பெரிய பங்கு தமிம் இக்பாலுடையதாகும். இவ்வாறானதொரு நிலையில், எலும்பு முறிவுக்கு மத்தியில் துடுப்பெடுத்தாட வந்ததற்கான காரணத்தை அவர் ஊடகங்களுக்கு விளக்கியுள்ளார்.
தமிம் இக்பால் மீண்டும் துடுப்பெடுத்தாட வந்தமை தொடர்பில் குறிப்பிடுகையில்,
“உடைமாற்றும் அறையில் வைத்து அணித் தலைவர் மஷ்ரபி மொர்டஷா, என்னை துடுப்பெடுத்தாடுமாறு கூறினார். நான் அதனை நகைப்பாக எடுத்துக்கொண்டேன். எனினும் மறுபக்கம் யோசிக்கும் போது என்னால் ஒரு பந்தை தடுத்தாட முடிந்தால் அணிக்கு இன்னும் 10 ஓட்டங்கள் மேலதிகமாக பெறப்படும் என்ற நம்பிக்கை எழுந்தது.
அதனால் என்னால் நாட்டுக்காக என்ன செய்ய முடியும் என நினைக்கத் தொடங்கினேன். நான் ஒரு பந்தை எதிர்கொண்டால் அணிக்கு அது மிகப்பெரிய பலன் என்பதை உணர்ந்தேன். முஷ்தபிசூர் ரஹ்மான் ஆட்டமிழந்த பின்னர், காற்கவசங்களை எடுத்தேன் (Pads). மஷ்ரபீ எனக்கு கையுறைகளை வெட்டி, மாட்டிவிட்டார். என் வாழ்க்கையில் முதன் முறையாக அடிவயிறு பகுதியை பாதுகாக்கும் கவசத்தை அணி வீரர்களில் ஒருவர் அணிந்து விட்டார். மொமினுல் ஹக் மற்றும் ஏனைய வீரர்கள் எனது ஏனைய கவசங்களை மாட்டிவிட உதவினர்.
>> ஆப்கானிஸ்தானுடான போட்டி அழுத்தங்களைக் கொடுக்கும் – மெதிவ்ஸ்
பின்னர் நான் களமிறங்கியதும் மைதானத்தில் ரசிகர்கள் கொடுத்த உற்சாகத்தால் நம்பிக்கை எழுந்தது. நான் ஆட்டமிழந்திருக்கலாம். ஆனால் நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உறுதி எழுந்தது. நான் ஒரு பந்தை மாத்திரம் எதிர்கொள்ள, மறுபக்கம் முஷ்பிகூர் ரஹீம் 32 ஓட்டங்களை விளாசினார். அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது. அதனால் நான் மைதானத்துக்கு வந்தமைக்கான பலன் கிடைத்ததை உணர்ந்தேன். அத்துடன் முஷ்பிகூர் ரஹீமின் துடுப்பாட்டமானது மிகவும் அற்புதமானது” என்றார்.
இதேவேளை தமிம் இக்பாலின் இடது கை மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு காரணமாக அவர் ஆசிய கிண்ணத் தொடரில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணி அவரது இரண்டாவது ஸ்கேன் அறிக்கையை எதிர்நோக்கியிருந்த போதிலும், ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்திருந்த தமிம் இக்பால் ஆசிய கிண்ணத்தில் விளையாடுவதில் உறுதியில்லை என்பதை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் அணி தங்களது இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்வரும், 20 ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளதுடன், இலங்கை அணி இன்று (17) ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<