கடந்த 2016, 2017 ஆகிய இரு ஆண்டுகளில் யாழ் மாவட்ட அணிகளை உள்ளடக்கிய “யாழின் கில்லாடி யார்?” கால்பந்து போட்டித்தொடர் மிகவும் பிரம்மாண்டமான முறையில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. எனினும், தமது அமைப்பின் நூற்றாண்டு விழாவினையொட்டி அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையமானது, யாழ் உதைபந்தாட்ட இரசிகர்கள் மத்தியில் பிரபலமான இத்தொடரினை இம்முறை வடமாகாணத்தின் 08 கால்பந்து லீக்குகளை உள்ளடக்கியதாக வடக்கின் கில்லாடியினை தெரிவு செய்யும் தொடராக விஸ்தரித்துள்ளது.
இறுதி நிமிட த்ரில் வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது பாடும்மீன்
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின்…
எனவே, பிரமாண்டமாக இடம்பெறும் ”வடக்கின் கில்லாடி யார்?” போட்டித் தொடரின் ஊடக அனுசரணையாளர்களாக இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான Thepapare.com பெருமிதத்துடன் இணைந்துள்ளது.
கடந்த 2016இல் சென். மேரிஸ் விளையாட்டுக் கழக அணியினை தண்ட உதை மூலமாகவும், 2017இல் ஞானமுருகன் விளையாட்டுக் கழக அணியினை ஒரு கோலாலும் வெற்றிகொண்ட குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழக அணி யாழின் கில்லாடி கிண்ணத்தினை தொடர்ந்து இரண்டு முறை தம்வசப்படுத்திய பெருமையுடன், தொடரின் நடப்புச் சம்பியன்களாக இம்முறை களங்காணுகின்றது.
இவ்வருட போட்டித் தொடரிற்கு கடந்த வருடம் அரையிறுதியில் தடம்பதித்திருந்த குருநகர் பாடும்மீன், மயிலங்காடு ஞானமுருகன், ஊரெழு றோயல் மற்றும் முதலாவது பருவத்தின் இறுதிப் போட்டியில் தடம்பதித்த நாவாந்துறை சென். மேரிஸ் ஆகிய அணிகள் உள்ளடங்கலாக யாழ்ப்பாண கால்பந்து லீக்கில் இருந்து 17 அணிகள் களங்காணுகின்றன.
அதேபோன்று, வடமராட்சி லீக்கிலிருந்து நான்கு அணிகளும், கிளிநொச்சி, தீவக லீக்குகளிலிருந்து தலா மூன்று அணிகள், கடந்த வருடம் அரையிறுதியில் தடம்பதித்திருந்த இளவாலை யங் ஹென்றீசியன்ஸ் அணி உள்ளடங்கலாக வலிகாமம் லீக்கிலிருந்து இரண்டு அணிகள், மன்னார் லீக்கில் இருந்து 2 அணிகள் மற்றும் முல்லைத்தீவு லீக்கிலிருந்து ஒரு அணியென இவ்வருட போட்டித்தொடரிற்கு மொத்தமாக 32 அணிகள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.
தொடரின் போட்டிகள் அனைத்தும், யாழ்ப்பாணம் அரியாலை கால்பந்து பயிற்சி மைதானத்தில் இடம்பெறும். இம்மாதம் 15ஆம் திகதி (சனிக்கிழமை) மாலை 2.30 மணிக்கு நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் குருநகர் சென்.றொக்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியுடன் ”வடக்கின் கில்லாடி யார்?” தொடர் ஆரம்பமாகவுள்ளது.
அசத்தல் ஆட்டத்தால் மாலைத்தீவுகளை சமன் செய்த இலங்கை
முன்னணி வீரர்களைக் கொண்ட …
முதலாவது சுற்றுப் போட்டிகள் 15ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. விசேடமாக 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று ஆறு போட்டிகள் இடம்பெறவுள்ளன. ஏனைய 05 நாட்களிலும் நாளொன்றிற்கு இரண்டு போட்டிகள் வீதம் மோதல்கள் இடம்பெறும். தொடரின் இடண்டாவது சுற்று ஆட்டங்கள் இம்மாதம் 22, 23 ஆம் திகதிகளில் (சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்) இடம்பெறவுள்ளன. தொடர்ந்து அடுத்த அடுத்த வார இறுதிகளில் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் இடம்பெறும்.
Thepapare.com இன் ஊடக அனுசரணையில் இடம்பெறும் “வடக்கின் கில்லாடி யார்?” போட்டித்தொடர் தொடர்பான செய்திகள், போட்டி அறிக்கைகள், புகைப்படங்கள் மற்றும் புள்ளிவிபரங்கள் ஆகியவற்றினை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள Thepapare.com உடன் இணைந்திருங்கள்.
தொடரில் பங்கு கொள்ளும் அணிகளின் விபரம்
- யாழ்ப்பாணம் கால்பந்து லீக்
குருநகர் பாடும்மீன், மயிலங்காடு ஞானமுருகன், நாவாந்துறை சென்.மேரீஸ், ஊரெழு றோயல், பாஷையூர் சென்.அன்ரனீஸ், ஆனைக்கோட்டை யூனியன், நாவற்க்குழி அன்னை, அச்செழு வளர்மதி, குருநகர் சென்.றோக்ஸ், அரியாலை ஜக்கியம், குப்பிளான் ஞானகலா, கொட்டடி முத்தமிழ், நாவாந்துறை கலைவாணி, மணியந்தோட்டம் ஜக்கியம், உரும்பிராய் திருக்குமரன், கொக்குவில் பொற்பதி, யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
- வடமராட்சி கால்பந்து லீக்
வதிரி டைமன்ஸ், கொற்றாவத்தை றேஞ்சர்ஸ், கரணவாய் கொலின்ஸ், நவிண்டில் கலைமதி
- தீவக கால்பந்து லீக்
துறையூர் ஜயனார், மெலிஞ்சிமுனை இருதயராஜா, புங்குடுதீவு நகரேத்
- கிளிநொச்சி கால்பந்து லீக்
கிளிநொச்சி உருத்திரபுரம், வலைப்பாடு மேசியா, இரணைமாதாநகர் மேரீஸ்
- வலிகாமம் கால்பந்து லீக்
இளவாலை யங்கென்றீஸ், குப்பிளான் குறிஞ்சிகுமரன்
- மன்னார் கால்பந்து லீக்
மன்னார் கில்லறி, ஜோசவாஸ்நகர் ஜக்கியம்
- முல்லைத்தீவு கால்பந்து லீக்
புதுக்குடியிருப்பு சுப்பர்றாங்
மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க