பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனரில் விதூஷா, சச்சினி புதிய போட்டி சாதனை

210

10ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனர் போட்டித் தொடர் இன்று (13) காலை கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

இதில் பெண்களுக்கான முப்பாய்ச்சலில் விதூஷா லக்‌ஷானி மற்றும் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சச்சினி பெரேரா ஆகியோர் புதிய போட்டி சாதனைகளை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டயலொக் அனுசரணையில் இடம்பெறவுள்ள மகாவலி விளையாட்டு விழா/

இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளையும் சேர்ந்த வீர, வீராங்கனைகளின் பங்குபற்றலுடன் வருடந்தோறும் இடம்பெற்று வருகின்ற இப்போட்டித் தொடரில் கடந்த காலங்களை விட குறைந்தளவு வீரர்கள் பங்கேற்றிருந்ததை காணமுடிந்ததுடன், விமானப்படை மற்றும் கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட வீரர்கள் மிகவும் குறைவாகவே காணப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில், இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான முப்பாய்ச்சலில் பங்குபற்றிய தேசிய சாதனைக்கு சொந்தக்காரியான விதூஷா லக்‌ஷானி, 13.58 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து புதிய போட்டி சாதனை படைத்தார்.

கடந்த மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பெண்களுக்கான முப்பாய்ச்சலில் 13.60 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து புதிய போட்டி சாதனையை விதூஷா லக்‌ஷானி நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், குறித்த போட்டியில் விதூஷாவுடன் போட்டியிட்ட இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு வீராங்கனையான ஹன்சனி பிரபோதா, 13.40 மீற்றரைப் பாய்ந்து தனது சிறந்த தூரத்தைப் பதிவுசெய்து இரண்டாவது இடத்தையும், இலங்கை விமானப்படையின் கே.டீ லக்‌ஷானி (13.15 மீற்றர்) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, கடந்த மாதம் நடைபெற்ற 96ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வடக்கின் நட்சத்திரம் அனித்தா ஜெகதீஸ்வரனுக்கு பலத்த போட்டியைக் கொடுத்து முதலிடத்தைப் பகிர்ந்து கொண்ட இலங்கை இராணுவ வீராங்கனை சச்சினி பெரேரா, இன்று நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.40 மீற்றர் உயரத்தைப் பாய்ந்து புதிய போட்டி சாதனை நிகழ்த்தினார்.

அத்துடன், பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் தேசிய சாதனைக்கு சொந்தக்காரியான இலங்கை இராணுவத்தின் நிலானி ரத்னாயக்க, 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் தேசிய சம்பியனும், இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் 6ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்ட இலங்கை கடற்படை வீராங்கனை கயந்திகா அபேரத்னவிடம் தோல்வியைத் தழுவினார்.

குறித்த போட்டியை 4 நிமிடங்கள் 21.12 செக்கன்களில் நிறைவுசெய்து கயந்திகா அபேரத்ன முதலிடத்தையும், உபாதையுடன் போட்டியிட்ட நிலானி ரத்னாயக்க 4 நிமிடங்கள் 24.86 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

  • Gayanthika

இது இவ்வாறிருக்க, நீளம் பாய்தலில் தேசிய சம்பியனான ஜானக பிரசாத் விமலசிறி, இன்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான நீளம் பாய்தலில் 8.07 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை இராணுவத்துக்காக விளையாடிவரும் பிரசாத் விமலசிறி, அண்மையில் நிறைவுக்கு வந்த ஆசிய விளையாட்டு விழாவில் 7.86 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 5ஆவது இடத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது தடவையாகவும் சம்பியனாகிய கொழும்பு வெட்டரன்ஸ் அணி

இதேநேரம், ஜானகவுடன் போட்டியிட்ட இலங்கை விமானப்படை வீரர் அமில ஜயசிறி (7.98 மீற்றர்) இரண்டாவது இடத்தையும், இலங்கை கடற்படை வீரர் டி.சி திஸாநாயக்க (7.60 மீற்றர்) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவ வீராங்கனை ருமேஷிகா ரத்னாயக்க முதலிடத்தையும், ஆண்களுக்கான 200 மீற்றரில் அஜித் பிரேமகுமார முதலிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இவ்விரண்டு வீரர்களும், அண்மையில் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, போட்டிகளின் முதல் நாள் நிறைவுக்குவரும் போது 9 தங்கம், 6 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 18 பதக்கங்களை வென்ற இலங்கை இராணுவ அணி பதக்கப்பட்டியலில் முதலிடத்தையும், ஒரு தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களை வென்ற இலங்கை விமானப்படை அணி இரண்டாவது இடத்தையும், 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற இலங்கை கடற்படை அணி மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க