புதிய அணியாக, புதிய சவாலாக ஆசிய கிண்ணத்தை சந்திக்கும் இலங்கை

1937

இம்முறை ஆசிய கிண்ணத்தில் பங்குபற்றுகின்ற அணிகளை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது எனவும், அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி ஆசிய கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆசியக் கிண்ண வெற்றிகள் – ஒரு மீள்பார்வை

ஆசியாவில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு..

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் ஆகிய ஆறு நாடுகளுக்கு இடையிலான 14ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர், எதிர்வரும் 15ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையிலான இலங்கை அணி, நேற்று மாலை (11) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அஞ்செலோ மெதிவ்ஸ் கருத்து வெளியிடுகையில்,

”ஆசியாவில் நடைபெறுகின்ற மிகப் பெரிய கிரிக்கெட் தொடர் இதுவாகும். இப்போட்டியில் பங்குபற்றுகின்ற அனைத்து அணிகளும் சமபலம் கொண்டவையாகும். ஆசிய கிண்ணப் போட்டியை முன்னிட்டு கடந்த இரண்டு வாரங்களாக கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டோம். நாங்கள் உறுதியான மனோநிலையுடன் இப்போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளோம்” என்றார்.

கடந்த 2014இல் ஆசிய கிண்ணத்தை வென்றபோது இலங்கை அணியின் தலைவராக இருந்த நினைவுகள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மெதிவ்ஸ் பதிலளிக்கையில்,

Photo Album – Sri Lanka Team’s Asia Cup Departure

”ஏராளமான நினைவுகள் மனதில் நிலைத்திருக்கின்றன. 2014 இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் போட்டியிட்டு சம்பியன் பட்டத்தை வென்றோம். ஆனால் அவையனைத்தும் கடந்தகால சம்பவங்களாகும். அவற்றை படிப்பினையாகக் கொண்டு தற்போது புதிய அணியாக ஒரு புதிய சவாலை, புதிய பயணத்தை ஆரம்பிக்கவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

”அத்துடன், அண்மையில் நிறைவுக்கு வந்த தென்னாபிரிக்க அணியுடனான முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளில் தோல்வியைத் தழுவினாலும், இறுதி இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியிருந்தோம். அதில் எமது வீரர்களின் மனோநிலையை இனங்கண்டு கொள்ள முடிந்தது.  

ஆனால், ஆசிய கிண்ணத்தில் நிறைய தவறுகள் செய்ய முடியாது. நொக்அவுட் போட்டித் தொடராக இருப்பதால் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெற வேண்டும். அதேபோல, டுபாயில் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தாலும், அதற்கேற்ப சிறப்பாக விளையாடி ஓட்டங்களைக் குவிக்க எதிர்பார்த்துள்ளோம்.

அதுமாத்திரமின்றி, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளையும் குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அணிகளுடன் சிறப்பாக விளையாடினால் தான் அடுத்த சுற்றுக்குத் தெரிவாக முடியும். எனவே, அந்த சவால்களுக்கு முகங்கொடுக்க சிறந்த அணியொன்று எம்மிடம் உள்ளது” எனவும் அஞ்சலோ மெதிவ்ஸ் தெரிவித்தார்.

இலங்கை அணியில் இருந்து சந்திமால் நீக்கம், திக்வெல்ல இணைப்பு

இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால்…

லசித் மாலிங்க மீண்டும் இலங்கை அணியில் இடம்பெற்றமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மெதிவ்ஸ் பதிலளிக்கையில்,

”லசித் மாலிங்க மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டதை நான் பெரிதும் வரவேற்கிறேன். அவருடைய திறமையை நாம் அனைவரும் அறிவோம். அவர் அண்மைக்காலமாக ஒரு நாள் போட்டிகளில் விளையாடாவிட்டாலும், டி-20 போட்டிகளில் மாத்திரம் விளையாடியிருந்தார். எனவே, ஒரு தலைவராக அவருக்கு எனது பூரண ஒத்துழைப்பை வழங்குவேன் என்றார்.

இதேவேளை, ஆசிய கிண்ணத்தில் முதலிரண்டு போட்டிகளிலும் சந்திக்கவுள்ள அணிகள் தொடர்பில் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க கருத்து வெளியிடுகையில்,

உண்மையில் இலங்கையுடன் பி குழுவில் இடம்பெற்றுள்ள பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அங்குள்ள ஆடுகளங்களின் தன்மைக்கேற்ப விளையாடக் கூடிய மிகவும் திறமையான அணிகளாக உள்ளன. எனவே, எமது எதிரணியினை ஒருபோதும் குறைத்து மதிப்பிடமாட்டோம். இதன்காரணமாகவே அனுபவமிக்க வீரர்களை அணிக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்தோம். இந்த தொடருக்காக நாம் முன்னெடுத்த பயிற்சிகள் தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். எனவே, முதலிரண்டு போட்டிகளை வெற்றிகொண்டு அடுத்த சுற்றுக்குத் தெரிவாகுவதே எமது நோக்கமாகும்” என தெரிவித்தார்.

ஆசிய கிண்ணமும் லசித் மாலிங்கவின் அசத்தல் பந்து வீச்சும்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள்…

லசித் மாலிங்க மீண்டும் இலங்கை அணியில் இடம்பெற்றமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பயிற்றுவிப்பாளர் பதிலளிக்கையில்,  

கிரிக்கெட் போட்டிகளின் கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்துவீசக் கூடியவர்களில் லசித் மாலிங்கவும் ஒருவராவார். கடந்த ஒன்றரை மாதங்களில் அவர் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவரது உடற்தகுதியும் எமது எதிர்பார்ப்புக்கு அமைய முன்னேற்றம் கண்டுள்ளது. எனவே, இம்முறை ஆசிய கிண்ணத்தில் மாலிங்க சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

இதேவேளை, ஆசிய கிண்ணத்திற்காக அறிவிக்கப்பட்ட 16 பேர் கொண்ட இலங்கை குழாத்தில் இடம்பெற்றிருந்த அகில தனன்ஞய, முதலிரண்டு போட்டிகளிலும் விளையாட மாட்டார் எனவும், அதன்பிறகு அணியுடன் வந்து இணைந்துகொள்வார் என இலங்கை அணியின் முகாமையாளர் சரித் சேனாநாயக்க தெரிவித்தார்.

>> கிரிக்கெட் காணொளிகளைப் பார்வையிட <<