தோல்வியுறாத அணியாக ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை

864
Photo Courtesy - Netball Singapore

11 ஆவது முறையாக நடைபெற்று வரும் ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப் போட்டியில், ஹொங்கொங் வலைப்பந்து அணியை 55-46 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்திருக்கும் இலங்கை வலைப்பந்து அணி, இவ்வெற்றியுடன் தொடரின் எந்தவொரு போட்டிகளிலும் தோல்வியடையாத அணியாக இறுதிப் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தினை பெற்றிருக்கின்றது.

சிங்கப்பூரின் OCBC அரங்கில் நடைபெற்றிருந்த தீர்மானமிக்க அரையிறுதிப் போட்டியில், இலங்கை மங்கைகள் இத்தொடரின் கடந்த போட்டிகள் போல் அல்லாது ஒரு தளர்வான ஆரம்பத்தினையே காட்டியிருந்தனர். இதனால், ஆட்டத்தின் முதல் கால் பகுதியை 14-13 என ஒரு புள்ளி வித்தியாசத்தில் ஹொங்கொங் வலைப்பந்து அணி கைப்பற்றியது.

எனினும், இரண்டாம் கால் பகுதியின் ஆரம்பத்திலேயே நட்சத்திர வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கத்தின் கச்சிதமான புள்ளிகள் வேட்டையினால், ஹொங்கொங் அணியை விட தம்முடைய புள்ளிகளை விரைகதியில் அதிகரித்துக் கொண்ட இலங்கை இரண்டாம் கால் பகுதியில் மொத்தமாக 15 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டது. இதேநேரம் ஹொங்கொங் வலைப்பந்து அணி 11 புள்ளிகளையே பெற்றது.

தர்ஜினியின் சிறப்பட்டத்தால் சிங்கப்பூரையும் அச்சுறுத்திய இலங்கை வலைப்பந்து அணி

இதனால் ஆட்டத்தின் முதல் பாதி 28-24 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை வசமாகியது.

முதல் பாதி: இலங்கை 28 – 24 ஹொங்கொங்

பின்னர் இந்த தொடரில் எந்தவொரு போட்டியிலும் தோல்வியுறாத இலங்கை வலைப்பந்து அணிக்காக மூன்றாம் கால் பகுதியில் கயானி திஸ்ஸாநாயக்க மற்றும் சதுரங்கி ஜயசூரிய ஜோடி திறமையை வெளிப்படுத்தியது.

எனினும், இந்த கால் பகுதியில் 12 புள்ளிகளை மட்டுமே இலங்கையினால் பெற முடிந்தது. இதனால், பெரியதொரு முன்னிலை ஒன்றை எதிர்பார்த்த இலங்கை அணிக்கு ஆறு புள்ளிகள் வித்தியாச முன்னிலையையே மூன்றாம் கால் பகுதியில் கொடுக்க முடிந்தது. அந்தவகையில், ஆட்டத்தின் மூன்றாம் கால் பகுதி 40-34 என இலங்கையின் முன்னிலையோடு முடிந்தது.

அரையிறுதிக்கு முன்பாக இத்தொடரில் தமது இறுதிப் போட்டியில், ஹொங்கொங் வீராங்கனைகளையே எதிர்கொண்டிருந்த இலங்கை மங்கைகளுக்கு ஆட்டத்தின் இறுதி கால் பகுதியில் ஹொங்கொங் அணிக்காக GS மிச்செல் ஆர்க்கல் அழுத்தங்கள் தந்த போதிலும் தர்ஜினி சிவலிங்கம் மீண்டும் காட்டிய அபாரத்தினால் ஆட்டத்தின் இறுதி கால் பகுதியில் இலங்கை 15 புள்ளிகளைப் பெற்றது. மறுமுனையில்  12 புள்ளிகளை மட்டுமே பெற்ற ஹொங்கொங் தீர்மானமிக்க அரையிறுதியில் 55-46 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை வலைப்பந்து அணியிடம் தோல்வியடைந்தது.

முழு நேரம்: இலங்கை 55 – 46 ஹொங்கொங்

இலங்கை வலைப்பந்து அணி ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூரை நாளை (9) எதிர் கொள்ளவுள்ளதுடன், ஹொங்கொங் அணியுடனான அரையிறுதி வெற்றியினால் அடுத்த ஆண்டு இங்கிலாந்தின் லிவர்புல் நகரில் நடைபெறவுள்ள வலைப்பந்து உலக கிண்ணத்திற்கும் நேரடியாக தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<