ஆசிய விளையாட்டு விழாவை ஆக்கிரமிக்கும் ஆபிரிக்க நாட்டு வீரர்கள்

293

18 ஆவது ஆசிய விளையாட்டு விழா போட்டிகள், இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பேங் ஆகிய நகரங்களில் இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்ததுடன், கடந்த ஞாயிற்றுக்கிழமை (2) நடைபெற்ற நிறைவு விழாவுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக நிறைவுக்கு வந்தன.

இம்முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 45 நாடுகள் பங்கேற்றிருந்தன. தொடர்ந்து ஆறு நாட்களாக நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் இரண்டு ஆசிய சாதனைகளுடன், 11 போட்டிச் சாதனைகளும் நிகழ்த்தப்பட்டன.

ஆசிய விளையாட்டில் தோல்விகள், ஏமாற்றங்களுடன் நாடு திரும்பிய இலங்கை

இதேநேரம், மெய்வல்லுனர் போட்டிகளுக்கான பதக்கப்பட்டியலில் சீனா முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது. அந்த அணி 12 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 33 பதக்கங்களை வென்று கொண்டது. 12 தங்கப் பதக்கங்களை வென்ற பஹ்ரைன் இரண்டாவது இடத்தையும், 7 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.

ஆசிய விளையாட்டு விழாவின் மைதான நிகழ்ச்சிகளில் சீனா, வியட்னாம், ஜப்பான், இந்திய வீர, வீராங்கனைகள் பதக்கங்களை வென்றாலும், சுவட்டு நிகழ்ச்சிகளில் ஆபிரிக்க நாட்டு வீரர்களின் ஆதிக்கம் மேலோங்கி காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

இது இவ்வாறிருக்க, இம்முறை ஆசிய விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டிகளில் கட்டார் மற்றும் பஹ்ரைன் நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் கலந்து கொண்ட ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த 16 வீரர்கள் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தனர். ஆனால் இவ்வனைத்து பதக்கங்ளையும் ஆசிய நாட்டைச் சேர்ந்த வீரர்களால் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது இங்கு குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஆண்களுக்கான 100, 200, 1500, 3000, 5000 மற்றும் 10,000 மீற்றர் மரதன் ஓட்டப் போட்டிகளில் பஹ்ரைன் அணி தங்கப் பதக்கங்களை வென்றது.

எனினும், அந்தப் பதக்கங்களை நைஜீரியா, எத்தியோப்பியா, மொராக்கோ, கென்யா ஆகிய ஆபிரிக்க நாடுகளின் வீர, வீராங்கனைகளே பஹ்ரெய்னுக்கு வென்று கொடுத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கான 4 x 400 மீற்றர் அஞ்சலோட்டத்தில் பஹ்ரெய்ன் அணி தங்கப் பதக்கம் வென்ற போதிலும், அந்த அணியில் பஹ்ரெய்னின் ஒரேயொரு வீராங்கனை மாத்திரமே இடம்பெற்றிருந்தார். ஏனைய மூவரும் ஆபிரிக்க நாட்டவர்கள் என்பதுடன், கலப்பு 4 x 400 அஞ்சலோட்டத்தில் பஹ்ரெய்ன் அணிக்கு ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த வீர, வீராங்கனைகளே தங்கப் பதக்கத்தை ஈட்டிக்கொடுத்தனர்.

4×400 mix relay

அவ்வாறே, 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டம், ஆண்களுக்கான சம்மெட்டி எறிதல், ஆண்களுக்கான 4 x 400 அஞ்சலோட்டம் ஆகியவற்றில் கட்டார் அணி தங்கம் வென்ற போதிலும், அதனை சூடான், எகிப்து போன்ற ஏனைய ஆபிரிக்க நாடுகளின் வீர, வீராங்கனைகளே வென்று கொடுத்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

SAFF கிண்ண வெற்றி வாய்ப்புகள் பற்றி இலங்கை நம்பிக்கை

அதுமாத்திரமின்றி, இம்முறை மெய்வல்லுனர் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட இந்திய அணி 10 வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தது. இதில் ஏழு தங்கப் பதக்கங்களை ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த வீரர்களிடம் இந்தியா இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று இலங்கை அணிக்கு பதக்கமொன்றைப் பெற்றுக்கொடுக்கின்ற 4 x 400 அஞ்சலோட்டத்திலும் கட்டார் அணி தங்கப் பதக்கத்தை வென்றது. இப்போட்டியில் 0.03 செக்கன்களினால் தேசிய சாதனையை முறியடிக்க தவறிய இலங்கை அணி, நான்காவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தது.

வீரர்கள் இறக்குமதி

பொதுவாக நடைபெறுகின்ற மெய்வல்லுனர் போட்டியொன்றில் இவ்வாறு வெளிநாட்டு வீரர்கள் பிற நாடுகளுக்கு விளையாடுவது சாதாரண விடயமாக இருந்தாலும், ஆசிய விளையாட்டு விழா, ஐரோப்பிய மெய்வல்லுனர் போன்ற தொடர்களில் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றி பதக்கங்களை வெல்வது மிகப் பெரிய அநீதி என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் சட்டவிதிமுறைகளுக்கு அமைய வெளிநாடொன்றைச் சேர்ந்த மெய்வல்லுனர் வீரர் ஒருவர் குறைந்த பட்சம் இன்னொரு நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் குறித்த நாட்டில் இருக்க வேண்டியிருந்தது.

ஆனாலும், பிற நாடுகளைச் சேர்ந்த மெய்வல்லுனர் வீரர்களை தமது நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கு அந்தந்த நாடுகளின் மெய்வல்லுனர் சங்கங்களின் ஒப்புதலுடன், ஒரு வருடத்திற்குள் மற்றொரு நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கான சட்டத்துக்கு சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம் அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, 20 வயதுக்கு குறைந்த எவரும் பிறந்த நாட்டை விட்டு வேறு நாடுகள் சார்பாக பங்கேற்க முடியாது என்ற புதிய விதியும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

SAFF முதல் மோதலில் பலம் மிக்க இந்தியாவிடம் வீழ்ந்தது இலங்கை

ஆனாலும், கடந்த காலங்களைவிட இம்முறை ஆசிய விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டிகளில் ஆபிரிக்க நாட்டு வீரர்களின் கனிசமான பங்குபற்றலானது பலரது விமர்சனங்களுக்கும் ஆளாகி இருந்தது.

அதிலும் குறிப்பாக, ஆசிய விளையாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட ஆபிரிக்க நட்சத்திரங்களால் ஆசிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் பதக்க கனவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்ததையும் காணமுடிந்தது.

நாங்களும் சளைத்தவர்கள் அல்ல

இம்முறை ஆசிய விளையாட்டு விழா மெய்வல்லுனரில் ஆபிரிக்க வீரர்களுக்கு பலத்த போட்டியைக் கொடுத்து பதக்கங்களை வென்ற ஒரு சில ஆசிய வீரர்களையும் இனங்காண முடிந்தது.

இதில் ஆசியாவின் மின்னல் வீரர் யார் என்பதை நிர்ணயிக்கும் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் சீனாவின் நட்சத்திர குறுந்தூர வீரர் சூ பிங்டியான் 9.92 செக்கன்களில் ஓடி முடித்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

100m race

இதேநேரம், 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஆசிய சாதனைக்கு சொந்தக்காரராகிய நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கட்டார் வீரர் பெம்மி ஒகுனோட்டின் (9.91 செக்.) சாதனையை 0.01 செக்கன்களினால் முறியடிக்கும் வாய்ப்பை பிங்டியான் இதன் போது தவறவிட்டார். எனினும், குறித்த போட்டியில் பிங்டியானுக்கு பலத்த போட்டியைக் கொடுத்த, பெம்மி ஒகுனோட்டின் இளைய சகோதரரான தசின் ஒகுனோட், 10.00 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தையும், ஜப்பான் வீரர் ரியோடா யமகட்டாவும் அதே 10.00 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

அதேபோன்று, பெண்களுக்கான 4 x 400 அஞ்சலோட்டத்தில் பஹ்ரெய்ன் அணியை வீழ்த்தி இந்தியா பதக்கம் வென்றது. பஹ்ரெய்ன் அணியில் 400 மீற்றர் ஆசிய சாதனைக்கு சொந்தக்காரியும், உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கமும் வென்ற சல்வா ஈத் நசீர் மற்றும் 2014 ஆசிய விளையாட்டில் 400 மீற்றரில் தங்கப் பதக்கம் வென்ற ஒலுவகெமி அடிகொயாவும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே ஆபிரிக்க வீரர்களின் பங்குபற்றலானது ஆசிய வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு சிறந்த களமாக இந்தப் போட்டித் தொடர் அமைந்துள்ளது. மேலும், ஆசிய மட்டத்திற்கும், உலக அளவிற்கும் இடையிலான இடைவெளி நாளுக்கு நாள் குறைவடைந்து வருவதையும் இந்த முடிவுகள் சான்று பகர்கின்றன.

தீர்வு கிடைக்குமா?

எது எவ்வாறாயினும், ஒரு காலத்தில் அகதிகளாக மத்திய கிழக்கு நாடுகளில் குடிபெயர்ந்த ஆபிரிக்க நாட்டு வீரர்கள் அந்தந்த நாடுகளின் குடியுரிமையினைப் பெற்றுக்கொண்டு விளையாட்டுத்துறையில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். அதிலும் குறிப்பாக உலக மெய்வல்லுனர் அரங்கில் இதன் தாக்கமானது தற்போது தவிர்க்க முடியாத விடயமாகவும் மாறிவிட்டது. வெறுமனே அகதிகளாக வந்த ஆபிரிக்க நாட்டு வீரர்களுக்கு குடியுரிமையை வழங்கி தமது நாட்டுக்கு எழுதிக் கொண்ட பஹ்ரைன், சவூதி அரேபியா, கட்டார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள், தற்போது பணம், பதவி, பொருள் என சகலவிதமான உதவிகளையெல்லாம் வழங்கி சொல்லப்போனால் இறக்குமதி செய்யப்பட்ட வீரர்களாக இன்று உலக மெய்வல்லுனர் அரங்கில் பல வெற்றிகளையும், சாதனைகளையும் படைத்து வருகின்றனர்.

இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் தமிம் இக்பால் விளையாடுவதில் சந்தேகம்

உலகின் பெரும்பாலான ஆபிரிக்க நாடுகள் வறுமைக் கோட்டின் கீழ் கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பதை அனைவரும் அறிவர். அங்கு வாழ்கின்ற அப்பாவி மக்கள் உண்ண உணவின்றி, குடிக்க தண்ணீரின்றி மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே அங்குள்ள திறமையான வீரர்களுக்கு தமது நாட்டின் குடியுரிமையினை வழங்கி விளையாட்டுத்துறையில் முன்னேறிச் செல்வதற்கு மத்திய கிழக்கு நாடுகள் வழங்கி வருகின்ற சமூக சேவையினை நிச்சயம் பாராட்டி ஆக வேண்டும்.

மறுபுறத்தில் ஆசிய விளையாட்டு விழா போன்ற போட்டிகளில் பங்குபற்றுகின்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு ஆபிரிக்க நாட்டு வீரர்களது பங்குபற்றலனாது எந்தளவு தூரத்துக்கு நீதியானது என்பதை ஆசிய நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு அதிகாரிகள் ஆழமாக சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

இவ்வனைத்து சலுகைகளுடன், ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இன்று ஆசியாவில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கின்றனர். எனினும், ஆசியாவைச் சேர்ந்த வீரர்களுக்கு தொடர் ஏமாற்றங்களுக்கு மாத்திரமே முகங்கொடுக்க நேரிட்டது. இதற்கான உரிய தீர்வினை சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் பெற்றுக்கொடுக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

ஆசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கங்களை வென்ற ஆபிரிக்க நாட்டு வீரர்களின் விபரங்கள் பின்வருமாறு,

போட்டி பெயர் போட்டியிட்ட நாடு பிறந்த நாடு
400 மீற்றர் அப்தில்லாஹ் ஹரோன் கட்டார் சூடான்
5000 மீற்றர் பிர்ஹானு பலிவ் பஹ்ரெய்ன் எத்தியோப்பியா
10000 மீற்றர் ஹசன் சானி பஹ்ரெய்ன் மொரோக்கோ
400 மீற்றர் தடைதாண்டல் அப்திர் ரஹ்மான் சம்பா கட்டார் மௌரிடேனியா
சம்மெட்டி எறிதல் அஷ்ரப் எல் சீபி கட்டார் எகிப்து
100 மீற்றர் எடிடியங் ஒடியாங் பஹ்ரெய்ன் நைஜீரியா
200 மீற்றர் எடிடியங் ஒடியாங் பஹ்ரெய்ன் நைஜீரியா
1500 மீற்றர் கல்கிடான் ஙிசாஹிங்னி பஹ்ரெய்ன் எத்தியோப்பியா
5000 மீற்றர் கல்கிடான் ஙிசாஹிங்னி பஹ்ரெய்ன் எத்தியோப்பியா
400 மீற்றர் தடைதாண்டல் ஒலுவகெமி அடிகொயா பஹ்ரெய்ன் நைஜீரியா
3000 மீற்றர் தடைதாண்டல் வின்பிரெட் யாவி பஹ்ரெய்ன் கென்யா
மரதன் ரோஸ் செலிமோ பஹ்ரெய்ன் கென்யா
4 x 100 அஞ்சலோட்ட பெண்கள் அணி பஹ்ரெய்ன் அணி பஹ்ரெய்ன் ஒரேயொரு பஹ்ரெய்ன் நாட்டு வீரர்
4 x 400 ஆண்கள் அஞ்சலோட்ட அணி கட்டார் அணி கட்டார் இவர்களில் எவரும் கட்டார் நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல.
4 x 400 கலப்பு அஞ்சலோட்ட அணி பஹ்ரெய்ன் அணி பஹ்ரெய்ன் இவர்களில் எவரும் பஹ்ரெய்ன் நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க