ரஷீட் கானை 2019ஆம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்த சசெக்ஸ் அணி

240
Cricbuzz

ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ரஷீட் கானின் ஒப்பந்தத்தை இங்கிலாந்தின் கவுண்டி அணியான சசெக்ஸ் ஷார்க்ஸ் 2019ஆம் ஆண்டுவரை நீடித்துள்ளது.

T-20 பிளாஸ்ட் தொடரில் சசெக்ஸ் அணியுடன் இந்த பருவகாலத்தின் முதல் பாதிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ரஷீட் கான் 11 போட்டிகளில் விளையாடி 14.35 என்ற சராசரியில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அத்துடன் சசெக்ஸ் ஷார்க்ஸ் அணி இம்முறை அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான முக்கிய காரணமாகவும் இருந்தார்.

எனினும் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடுவதன் காரணமாக, T-20 பிளாஸ்டிலிருந்து விலகிய இவர், செப்டம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ள சசெக்ஸ் ஷார்க்ஸ் அணியின் அரையிறுதிப் போட்டி உட்பட முக்கிய நான்கு போட்டிகளிலிருந்து துரதிஷ்டவசமாக வெளியேறினார்.

ரஷீட் கானின் திறமையை அறிந்த சசெக்ஸ் ஷார்க்ஸ் அணி அவரை அடுத்த வருடம் வரை அணிக்காக ஒப்பந்தம் செய்துள்ளது. எவ்வாறாயினும் ரஷீட் கான் 2019ஆம் ஆண்டு CPL தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக நடைபெறும் T-20 பிளாஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடுவார் என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஒப்பந்தம் குறித்து தெரிவித்த ரஷீட் கான், “சசெக்ஸ் அணிக்காக அடுத்த வருடம் விளையாடவுள்ளமை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இம்முறை விளையாடிய போதும், வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் நிர்வாகம் எனக்கு உதவியாக இருந்தது. அடுத்த வருடம் விளையாடுவதற்காக காத்திருக்கிறேன். அத்துடன் இம்முறை அணி கிண்ணத்தை வெல்வதற்கும் எனது வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ரஷீட்டின் வருகை குறித்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஜேசன் கில்லஸ்பி, “நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். ரஷீட் கானின் திறமை தொடர்பில் நான் கூறவேண்டியதில்லை. மைதானத்திலும் சரி, உடைமாற்றும் அறையிலும் சரி வீரர்கள் அனைவருடனும் அவர் அதிகம் நெருங்கி பழகுகின்றார். மீண்டும் ரஷீட் கான் அணிக்கு திரும்புகின்றமை அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

ஆப்கானிஸ்தான் அணியின் இளம் வீரரான ரஷீட் கான் சர்வதேச ரீதியில் நடைபெறும் T-20 போட்டிகளில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகின்றார். இதுவரை 125 T-20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 15.24 என்ற சராசரியில் 190 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.