52 வருடங்களின் பின் 13 ஆவது இடத்தைப் பிடித்த இலங்கை கரப்பந்தாட்ட அணி

208

ஆசிய விளையாட்டு விழாவில் 1966 ஆம் ஆண்டுக்கு பின்னர் (52 வருடங்களுக்கு பின்னர்) போட்டியிட்டிருந்த இலங்கை ஆடவர் கரப்பந்தாட்ட அணி  நம்பிக்கை தரக்கூடிய வகையில் விளையாடி 13 ஆவது இடத்தை பெற்றது.

புதிய உத்வேகத்துடன் களமிறங்கியிருந்த இலங்கை அணி, இன்று (31) நடைபெற்ற வியட்னாம் அணிக்கு எதிரான 13-14 ஆம் இடங்களுக்கான நிரல்படுத்தல் போட்டியில் 3-0 என்ற நேர் செட்கள் கணக்கில் வெற்றியை சுவைத்து, 13 ஆம் இடத்தை தக்கவைத்தது.

ஆசிய விளையாட்டில் இலங்கை அஞ்சலோட்ட அணிக்கு நான்காமிடம்

ஆரம்ப செட்டிலிருந்து போட்டி விறுவிறுப்பாக இடம்பெற்ற நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி மூன்று செட்களையும் முறையே 25-21, 25-21 மற்றும் 25-20 என கைப்பற்றி வெற்றிபெற்றது.

இந்த போட்டித் தொடரை முழுமையாக நோக்கும் போது இலங்கை அணியின் வெளிப்பாடு, எதிர்காலத்தில் வெற்றிகளை தரக்கூடிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 20 அணிகள் பங்கேற்ற ஆசிய விளையாட்டு விழாவின் கரப்பந்தாட்ட தொடரில், இலங்கை அணி, சீனா, வியட்னாம் மற்றும் தாய்லாந்து அணிகளுடன் E பிரிவில் இடம்பிடித்தது.

முதல் போட்டியில் தாய்லாந்து அணியுடன் மோதிய இலங்கை எதிரணிக்கு கடுமையான சவாலைக் கொடுத்த போதிலும், 1-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது. பின்னர் இரண்டாவது போட்டியில் சீன அணியை வீழ்த்திய வியட்னாம் அணியை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி நம்பிக்கையுடன் தொடரை எதிர்கொண்டது.

எனினும் துரதிஷ்டவசமாக சீன அணியிடம் 1-3 என தோல்வியடைந்த இலங்கை காலிறுதிக்கான வாய்ப்பை இழந்தது. எனினும் நிரல்படுத்தல் போட்டிகளில் சிறப்பாக ஆடி, முதல் போட்டியில் மாலைத்தீவுகள் அணியை 3-1 என வீழ்த்தியதுடன், அடுத்த போட்டியில் நேபாள அணியை 3-1 என வீழ்த்தி 13-14 ஆம் இடங்களுக்கான இறுதிப்போட்டிக்கு முன்னேறியதுடன், அதில் இன்று வெற்றியை கண்டது.

இந்த போட்டித் தொடரில் இலங்கை அணிக்கு நம்பிக்கை தரக்கூடிய விடயத்தை பொருத்தவரையில், 6 போட்டிகளில் விளையாடிய இலங்கை அதில் இரண்டு போட்டிகளில் மாத்திரமே தோல்வியடைந்திருந்தது. குறித்த இரண்டு தோல்விகளிலும் எதிரணிக்கு இலங்கை கடுமையான சவாலை கொடுத்திருந்தது. அத்துடன் போட்டித் தொடர் முழுவதும், எந்த ஒரு போட்டியிலும் 3-0 என்ற செட்கள் கணக்கில் தோல்வியடையவில்லை. எதிர்கொண்ட ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் இலங்கை அணி ஒரு செட்டையாவது வெற்றிகொண்டிருந்தது.

அதுமாத்திரமின்றி இவ்வருடம் இலங்கை கரப்பந்தாட்ட அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட டெஜான் உலுசுவிச்சின் பயிற்றுவிப்பு காலத்தில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அதில் 9 போட்டிகளில் வெற்றியடைந்துள்ளது.

இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியில் இரண்டு யாழ்.வீராங்கனைகள்

இதன்படி இலங்கை அணியானது தங்களது புதிய பயிற்றுவிப்பாளரின் கீழ் தொடர்ந்து தங்களது முன்னேற்றத்தை வெளிப்படுத்தி வருவதுடன், வீரர்களும் தங்களது முழுத் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றர்.

ஆசிய விளையாட்டு விழாவில் 13 ஆவது இடத்தை பிடித்துள்ள இலங்கை கரப்பந்தாட்ட அணிக்கு அடுத்து மற்றுமொரு சவால் காத்திருக்கிறது. கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆசிய சவால் கிண்ண கரப்பந்தாட்ட தொடர் ஆரம்பிக்கவுள்ளது. குறித்த தொடரில் இலங்கை சிறப்பாக செயற்படுமாயின் ஆசிய தரவரிசையில் முன்னேறக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<