நூற்றாண்டு கிண்ணத்தை வென்றது ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி

861
Hameedia

களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதத்தில், ஒழுங்கு செய்யப்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான அழைப்பு கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அணியை பெனால்டி முறையில் வீழ்த்திய கொழும்பு ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி அணி தொடரின் சம்பியன் கிண்ணத்தை வென்றது. 

களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு தொடர்: முதல் சுற்று முடிவுகள்

களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு..

களுத்துறை வெட்டும்கட பாகிஸ்தான் மைதானத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த கால்பந்து தொடரில் எட்டுப் பாடசாலை அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன.

தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் அளுத்கமை ஸாஹிரா கல்லூரி அணியினை வீழ்த்தி களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அணியும், கிந்தொட்டை ஸாஹிரா கல்லூரியை வீழ்த்தி கொழும்பு ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியும் இறுதிப் போட்டியில் ஆடும் சந்தர்ப்பத்தினை பெற்றிருந்தன.

இறுதிப் போட்டி

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமான இறுதிப் போட்டியில் மைதானச் சொந்தக்காரர்களான களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு முதற்பாதியில் உஸ்மான் கோல் ஒன்றினைப் பெற்று அதிரடியான துவக்கத்தை வழங்கினார்.

எனினும், ஹமீட் அல் ஹுசைனி கல்லூரிக்கு எவ்வளவு முயன்றும் முதற்பாதியில் கோல் ஒன்றைப் பெறுவது சிரமமாகவே அமைந்தது. இதனால், ஆட்டத்தின் முதற்பாதி களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் முன்னிலையுடன் நிறைவடைந்தது.

முதற்பாதி: களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி 1 – 0 ஹமீட் அல் ஹூசைனி கல்லூரி

இரண்டாம் பாதியில் திருப்பு முனையான ஆட்டம் ஒன்றை எதிர்பார்த்து ஆடிய ஹமீட் அல் ஹுசைனி கல்லூரிக்கு ஆஷிக் தனது அபார திறமையினால் கோல் ஒன்றை பெற்றுக் கொடுத்தார். இதனால் இரண்டு அணிகளினதும் கோல்களின் எண்ணிக்கை சமனானதுடன் ஆட்டமும் விறுவிறுப்பானது.

தொடர்ந்து எந்த அணி வெற்றிக்கான கோலினை பெறும் என எதிர்பார்த்தவாறு முன்னேறிய ஆட்டத்தில் மேலதிக கோல்கள் எதுவும் இரண்டு பாடசாலை அணிகளாலும் பெறப்படாது போக இறுதிப் போட்டி சமநிலையில் முடிந்தது.

முழு நேரம்: களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி 1 -1 ஹமீட் அல் ஹூசைனி கல்லூரி

இதன் பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்க இரு தரப்பினருக்கும் பெனால்டி சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அதில், ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி அணி மூன்று கோல்களை போட்டது. எனினும், களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி வீரர்களால் எந்த கோல்களையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

இதன்படி, பெனால்டியில் 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியினர், களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு கால்பந்து தொடரின் வெற்றியாளர்களாக மாறினர்.

விருதுகள்

போட்டியின் ஆட்ட நாயகன் உஸ்மான் (களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி)

தொடரின் ஆட்ட நாயகன் – உஸ்மான் (களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி கல்லூரி)

சிறந்த கோல் காப்பாளர் – நுஸ்கான் (ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி)

அரையிறுதிப் போட்டிகள்

முதல் அரையிறுதி

களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி எதிர் அளுத்கமை ஸாஹிரா கல்லூரி  

குழு A இல் இருந்து அரையிறுதிக்கு தெரிவாகிய, தொடரினை நடாத்தும் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அணிக்கும் அளுத்கமை ஸாஹிரா கல்லூரி அணிக்கும் இடையில் முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெற்றது.

சிறந்த பின்களத்தை கொண்டிருந்த களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி, அளுத்கமை ஸாஹிரா வீரர்களை முதற்பாதியில் கோல்கள் எதனையும் போடவிடாமல் தடுத்ததோடு, முதற்பாதியில் தமக்காக இரண்டு கோல்களையும் பெற்றனர்.

ரொனால்டோவின் ‘பைசிகல் கிக்’ ஐரோப்பாவின் சிறந்த கோலாக தெரிவு

போர்த்துக்கல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ..

இரண்டாம் பாதியிலும்,  முதற்பாதி போன்ற ஒரு நிலைமையே நீடித்த நிலையில் இன்னும் இரண்டு கோல்களைப் போட்டு களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் முதல் அணியாக மாறியது.

முழு நேரம்: களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி 4 – 0 அளுத்கமை ஸாஹிரா கல்லூரி

இரண்டாவது அரையிறுதி

ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி எதிர் கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரி

குழு B இல் இருந்து அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகிய கொழும்பு ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியும், கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரி அணியும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆடின.

போட்டியின் முதற் பாதியில் மூன்று கோல்களை, ஹமீட் அல் ஹுசைனி வீரர்கள் பெற, கிந்தோட்டை ஸாஹிரா வீரர்களுக்கு எந்தவித கோல்களையும் பெற முடியவில்லை.

இரண்டாம் பாதியில் கோல் மழை பொழியத் தொடங்கிய கொழும்பு தரப்பு நான்கு கோல்களை இந்தப் பாதியில் மட்டும் பெற்றது. இரண்டாம் பாதியிலும் கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரி வீரர்களால் கோல்கள் எதனையும் பெற முடியாத நிலையில், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஹமீட் அல்ஹுசைனி கல்லூரி அணி 7-0 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

முழு நேரம்: ஹமீட் அல்ஹுசைனி கல்லூரி 7 – 0 கிந்தோட்டை  ஸாஹிரா கல்லூரி  

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<