கரீபியன் பிரிமியர் லீக் (CPL) T20 தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் இர்பான், T20 போட்டிகள் வரலாற்றில் பந்துவீச்சாளர் ஒருவரினால் ஓட்டங்கள் குறைவாக கொடுக்கப்பட்ட . (Most Economical) மிகச் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து புதிய சாதனையை நிலைநாட்டியிருக்கின்றார்.
கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் 16 ஆவது போட்டி நேற்று (25) பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணிக்கும் சென். கிட்ஸ் மற்றும் நெவில் பேட்ரியட்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்றது.
நேற்றைய போட்டியில் பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணிக்காக ஆடிய மொஹமட் இர்பான், தனக்கு வீச அனுமதி வழங்கப்பட்ட நான்கு ஓவர்களில் ஒரு ஓட்டத்தை மாத்திரம் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார். இர்பானின் இந்த பந்துவீச்சானது T20 போட்டிகள் வரலாற்றில் பந்துவீச்சாளர் ஒருவரினால் ஓட்டங்கள் குறைவாக கொடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட அதிசிறந்த பந்துவீச்சாகும்.
தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை சுவைத்த சந்திமாலின் கொழும்பு அணி
இதற்கு முன்னர், T20 போட்டிகளில் அனுமதி வழங்கப்பட்ட நான்கு ஓவர்களிலும் மிகவும் குறைவான ஓட்டங்கள் கொடுத்த பந்துவீச்சாளராக தென்னாபிரிக்க அணியின் கிரிஸ் மொர்ரிஸ் பதிவாகியிருந்தார்.
2014 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க உள்ளூர் T20 தொடர் ஒன்றில் லயன்ஸ் அணிக்காக ஆடிய கிரிஸ் மொர்ரிஸ் கேப் கோப்ராஸ் அணிக்கு எதிராக நான்கு ஓவர்களுக்கு 2 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்ததே அந்த சிறந்த பந்துவீச்சாகும்.
இர்பானின் நான்கு ஓவர்களிலும் வீசப்பட்ட முதல் 23 பந்துகளில் ஓட்டங்கள் எதுவும் பெறப்படாமல் போயிருந்ததுடன், இறுதிப் பந்திலேயே ஒரேயொரு ஓட்டம் பெறப்பட்டிருந்தது.
இர்பான் மிகச்சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்த போதிலும், குறித்த போட்டியில் இர்பான் ஆடிய பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணி, சென். கிட்ஸ் மற்றும் நெவில் பெட்ரியட்ஸ் அணியிடம் 6 விக்கெட்டுக்களால் துரதிஷ்டவசமாக தோல்வியைத் தழுவியது.
இர்பான் புதிய சாதனையை பதிவு செய்த போட்டியின் ஸ்கோர் சுருக்கம்
பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் – 147/6 (20) ஜேசன் ஹோல்டர் 54
சென். கிட்ஸ் மற்றும் நெவில் பெட்ரியட்ஸ் – 148/4 (18.5)
7 அடி, 1 அங்குல உயரம் கொண்ட இர்பான் தனது பந்துவீச்சு பற்றி பேசியிருந்த போது, “நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். எனது அணி வெற்றி பெற்றிருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும், ஆனாலும் T20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பந்துவீச்சு ஒன்றை பதிவு செய்தது எனக்கு மகிழ்ச்சியாகவே இருக்கின்றது“ எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இர்பான் பேசுகையில், “நான் விக்கெட்டை நோக்கி உயிர்ப்பாகவே எப்போதும் பந்துவீச முனைகின்றேன். அத்தோடு, நான் உயரமாக இருப்பதால் எனக்கு மேலதிகமான பெளண்சர்களை பெற்றுக்கொள்ள முடிகின்றது. அந்தவகையில், இது (பந்துவீச்சு) திருப்தியளிக்கின்றது“ என்றார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<