ஜகார்த்தாவின் கலேரா பங் கர்னோ விளையாட்டரங்கில் இன்று (25) ஆரம்பமாகிய மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுவட்டு மைதான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட காலிங்க குமாரகே, ஜானக பிரசாத் விமலசிறி ஆகியோர் தத்தமது தகுதிச் சுற்று மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் வெற்றிகளைப் பதிவுசெய்து இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றனர்.
இதன்படி, நாளை (25) நடைபெறவுள்ள இறுதிப் போட்டிகளில் இந்த இரண்டு வீரர்களும் இலங்கைக்காக குறைந்தபட்சம் ஒரு பதக்கத்தையாவது பெற்றுக்கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, மத்திய தூர ஓட்டப் போட்டிகளில் தேசிய மற்றும் ஆசிய கனிஷ்ட சம்பியனான அருண தர்ஷனவுக்கு, ஆண்களுக்கான 400 மீற்றர் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. முன்னதாக இன்று காலை நடைபெற்ற தகுதிச் சுற்றில் முதலாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அருண தர்ஷன, அதன் பிறகு நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை இழந்தார்.
ஆசிய விளையாட்டு விழாவில் முதல் வெற்றியை பதிவுசெய்த இலங்கை ஹொக்கி அணி
இது இவ்வாறிருக்க, பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் முதற்தடவையாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட ஹிருனி விஜேரத்னவுக்கு போட்டியின் இடைநடுவில் வெளியேற நேரிட்டது. இதனால் அவருக்கு இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் எந்தவொரு இடத்தையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பால்பேங்கில் நடைபெற்று வரும் 18ஆவது ஆசிய விளையாட்டு விழா 7ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றதுடன், இலங்கை வீரர்கள் கலந்துகொண்ட மெய்வல்லுனர், குத்துச்சண்டை, பெட்மின்டண், கராத்தே, கரப்பந்தாட்டம் ஆகிய போட்டிகள் இன்றைய தினம் (25) இடம்பெற்றன.
இதில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மைதான மற்றும் சுவட்டு நிகழ்ச்சிகள் இன்றைய தினம் ஆரம்பமாகியதுடன், இதில் முதலாவது தங்கப் பதக்கத்தை ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட ஜப்பான் வீரர் இனோ ஹிரோடோ பெற்றுக்கொண்டார். குறித்த போட்டியை அவர் 2 மணித்தியாலம் 18.22 செக்கன்களில் நிறைவு செய்திருந்தார்.
இதேநேரம், கலேரா பங் கர்னோ விளையாட்டரங்கில் இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் தகுதிச் சுற்றில் கலந்துகொண்ட இலங்கை வீரர்களான அருண தர்ஷன மற்றும் காலிங்க குமாரகே ஆகியோர் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் முறையே 3ஆவது மற்றும் முதலாவது இடங்களைப் பெற்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றனர்.
மத்திய தூர ஓட்டப் போட்டிகளில் இலங்கையின் முன்னாள் தேசிய சம்பியனான காலிங்க குமாரகே, ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் முதலாவது தகுதிச் சுற்று ஓட்டப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டார்.
குறித்த போட்டியை 45.99 செக்கன்களில் நிறைவுசெய்த காலிங்க, தனது தனிப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுமதியையும் பதிவுசெய்தார். அத்துடன், குறித்த போட்டிப் பிரிவில் 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை வீரர் ஒருவர் பதிவுசெய்த அதிசிறந்த இரண்டாவது நேரப்பெறுமதியாகவும் அது இடம்பிடித்தது.
ஆசிய விளையாட்டில் இலங்கை பளுதூக்கல் வீரர்களுக்கு ஏமாற்றம்
மத்திய தூர ஓட்டப் போட்டிகளில் தேசிய மற்றும் ஆசிய கனிஷ்ட சம்பியனான அங்குரம்பொட, வீரகெப்பெட்டிப்பொல தேசிய கல்லூரி மாணவன் அருண தர்ஷன, ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் ஐந்தாவது தகுதிச் சுற்றில் கலந்துகொண்டு முதலிடத்தைப் பெற்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார். குறித்த போட்டியை அவர் 46.97 செக்கன்களில் நிறைவு செய்திருந்தார்.
இதன்படி, தத்தமது போட்டிகளில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்த காலிங்க குமாரகே மற்றும் அருண தர்ஷன ஆகியோர் இன்று (25) இரவு நடைபெற்ற அரையிறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதிபெற்றனர்.
இதனையடுத்து நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் முதலாவது அரையிறுதிப் போட்டியில் பங்குகொண்ட அருண தர்ஷன, போட்டித் தூரத்தை 46.53 செக்கன்களில் ஓடி முடித்து மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
எனவே, ஒட்டுமொத்த நிலையில் 10ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அருண தர்ஷனவுக்கு இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனினும், அவருடன் குறித்த போட்டியில் பங்குகொண்ட பஹ்ரெய்ன் வீரர் அப்பாஸ் (45.59 செக்.) மற்றும் இந்தியாவின் ஆரோக்கியராஜிவ் (46.08 செக்.) ஆகியோர் முதலிரு இடங்களைப் பெற்றுக்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது தகுதிச் சுற்று ஓட்டப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட காலிங்க குமாரகே, போட்டியை 46.21 செக்கன்களில் நிறைவுசெய்து மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
ஒட்டுமொத்த நிலையில் அதிசிறந்த காலத்தைப் பதிவுசெய்த வீரர்களுள் 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட இறுதி வீரராக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
எனினும், குறித்த போட்டியில் இந்தியாவின் மொஹமட் அனஸ் (45.30 செக்.) முதலிடத்தையும், ஜப்பானின் ஜுலியன் ஜுரும்மி (46.01) இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
இதன்படி, ஒட்டுமொத்த வீரர்களில் 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட காலிங்க குமாரகே, குறித்த போட்டிப் பிரிவில் இறுதி வீரராக நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
SAFF கிண்ண தொடருக்கான இலங்கை கால்பந்து குழாம் அறிவிப்பு
எனவே, நாளை (26) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை பெற்றுக்கொடுக்கும் எதிர்பார்ப்புடன் காலிங்க குமாரகே களமிறங்கவுள்ளார். எனினும், முதல் தகுதிச் சுற்று மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் பங்குபற்றி முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட இந்திய வீராங்கனை ஜிஸ்னா மெதிவ் இறுதிப் போட்டியில் டில்ஷிக்கு பலத்த போட்டியை கொடுப்பார் எதிர்பார்க்கப்படுகி;ன்றது.
இறுதிப் போட்டியில் பிரசாத்
ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டிகளின் தகுதிச் சுற்றுப் போட்டிகள் A மற்றும் B பிரிவுகளாக இன்று (25) நடைபெற்றது. இதன் A பிரிவில் போட்டியிட்ட இலங்கை மெய்வல்லுனர் அணியின் தலைவர் ஜானக பிரசாத் விமலசிறி, முதல் முயற்சியில் 7.56 மீற்றர் தூரத்தைப் பாய்ந்தார். எனினும், அடுத்த இரண்டு முயற்சிகளிலும் துரதிஷ்டவசமாகத் தோல்வியைத் தழுவினார்.
இதன்படி, ஒட்டுமொத்த வீரர்களின் அடிப்படையில் 11ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்ட அவர், இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை உறுதி செய்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் கொழும்பில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவுக்கான முதலாவது தகுதிகாண் போட்டியில் பங்குகொண்ட ஜானக பிரசாத், 8.14 மீற்றர் உயரம் பாய்ந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். இந்த மைல்கல்லை தனது இறுதி முயற்சியில் அவர் பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
எனவே, இம்முறை போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்களுக்குள் மூன்றாவது அதிசிறந்த தூரத்தைப் பதிவுசெய்துள்ள பிரசாத், நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி இலங்கைக்கான முதலாவது பதக்கத்தைப் பெற்றுக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹிருனிக்கு ஏமாற்றம்
அமெரிக்காவில் வசித்து வரும் அரை மரதன் ஓட்ட தேசிய சம்பியனான ஹிருனி விஜேரத்ன, 18ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் முதற்தடவையாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டார்.
போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஹிருனி விஜேரத்ன, தனது ஆடையின் முன்பக்கத்தில் ஒரு இலக்கத்தையும், பின்புறத்தில் மற்றுமொரு இலக்கத்தையும் அணிந்திருந்தார். இதன் காரணமாக போட்டியை ஆரம்பிப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. சுமார் 10 நிமிடங்கள் இந்த சர்ச்சை தொடர்ந்து நீடிக்க, போட்டி நடுவர்கள் ஹிருனியின் சரியான இலக்கமான முன்பக்க இலக்கத்தினை மாத்திரம் அணிவதற்கு அனுமதியளித்து போட்டியை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்தனர்.
இதன்படி, போட்டி ஆரம்பமாகி முதல் 400 மீற்றரை சக வீராங்கனைகளுடன் ஓடி முடித்த ஹிருனி விஜேரத்ன, அடுத்தடுத்த சுற்றுக்களில் பின்னடைவை சந்தித்தார். தொடர்ந்து ஓடுவதில் சிரமப்பட்ட அவர், 2000 மீற்றர் தூரத்தை அதாவது 5 சுற்றுக்களை ஓடிய பிறகு போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். இதன்படி, போட்டியை நிறைவுசெய்யாத வீராங்கனையாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
சீனாவுக்கு எதிரான போட்டியில் வெற்றியை தவறவிட்ட இலங்கை
முன்னதாக கடந்த ஜுன் மாதம் அமெரிக்காவின் ஒரிகோன் மாநிலத்தில் இடம்பெற்ற போர்ட்லேன்ட் சுவட்டு நிகழ்ச்சியில் பங்குகொண்ட ஹிருனி, பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டிகளுக்கான இலங்கை சாதனையை சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு முறியடித்தார். குறித்த போட்டியை 33 நிமிடங்கள் 57.96 செக்கன்களில் ஓடி முடித்தே அவர் இந்த புதிய சாதனையை நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் நான்காவது அதிசிறந்த காலத்தைப் பதிவுசெய்திருந்த ஹிருனிக்கு போட்டியிலிருந்து இடைநடுவில் விலக நேரிட்டது.
>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<