UEFA யின் சிறந்த வீரர் விருதிற்கு தெரிவாகியுள்ள வீரர்கள்

282
Ronaldo, Modric, Salah

ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஓன்றியமான UEFA யின் 2017/18 ஆம் பருவகாலத்திற்கான சிறந்த கால்பந்து வீரர் விருதிற்கான இறுதிப் பெயர் பட்டியல் திங்கட்கிமை (20) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் லுகா மொட்ரீச், முஹமட் சலாஹ் மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

ரியெல் மிட்ரிட்டுக்கு ஹட்ரிக் சம்பியன்ஸ் லீக் கிண்ணம்

க்ரேத் பேல் அடித்த அபார கோல்கள் மற்றும் பென்சமாவின் அதிஷ்ட கோல் மூலம் லிவர்பூல்..

UEFA யின் சிறந்த வீரர் விருதிற்கான இறுதி மூவரைக் கொண்ட பெயர் பட்டியலானது பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மூலம் வழங்கப்படும் மொத்த வாக்குகளின் அடிப்படையிலே தெரிவு செய்யப்படுகின்றது. அதனடிப்படையில் 80 பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் 55 ஊடகவியலாளர்களால் லுகா மொட்ரீச், முஹமட் சலாஹ் மற்றும் கிரிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாறு இம்முறை தெரிவு செய்யப்பட்ட வீரர்களில் இருந்து சிறந்த வீரருக்கான இறுதி விருதானது, 2018/19 ஆம் பருவகாலத்திற்கான UEFA யின் சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளிற்கான குழுக்களை தெரிவு செய்யும் விழாவில் வழங்கப்படும். இவ்விழாவானது ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வியாழக்கிழமை மொனோக்கோ நகரில் நடைபெறும்.

  • லுகா மொட்ரீச் (குரோஷியாரியல் மெட்ரிட் கால்பந்து கழகம்)

குரோஷிய அணியின் தலைவரும், ரியல் மெட்ரிட் அணியின் மத்தியகள வீரருமான லுகா மொட்ரீச், ரியல் மெட்ரிட் சார்பாக கடந்த பருவகாலத்தில் UEFA சம்பியன் கிண்ணம், UEFA சுப்பர் கிண்ணம், ஸ்பானிய சுப்பர் கிண்ணம் மற்றும் பிஃபா மூலம் நடாத்தப்பட்ட கழகங்களுக்கிடையிலான உலகக் கிண்ணம் என்பவற்றை வென்றுள்ளார்.

இவ்வருடம் நடைபெற்ற பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் தனது சிறப்பாட்டத்தின் மூலம் குரோஷிய அணியை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வைத்த லுகா மொட்ரீச், குறித்த தொடரில் தங்கப் பந்து (Golden Ball) விருதையும் வென்றார்.  

>> இங்கிலாந்தின் உயரிய கால்பந்து விருதை வென்றார் சலாஹ்

கடந்த பருவகாலம் 11 UEFA சம்பியன் கிண்ணப் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஒரு கோல் மற்றும் ஒரு கோலுக்கான உதவியையும் (Assist) பதிவு செய்துள்ளார். அதே போல் லா லிகா சுற்றுத் தொடரில் கடந்த பருவகாலத்தில் தனது அணிக்காக ஒரு கோலை பெற்றுக் கொடுத்துள்ளார்.

  • முஹமட் சலாஹ் (எகிப்துலிவர்பூல் கால்பந்து கழகம்)

பிரீமியர் லீக் 2017/18ஆம் பருவகாலத்திற்கான சுற்றுப் போட்டியில் தங்கப் பாதணி (Golden Boot) விருதை வென்ற முஹமட் சலாஹ், தனது அணிக்காக கடந்த பருவகாலத்தில் 38 போட்டிகளில் விளையாடி, 32 கோல்களை பெற்றுக்கொடுத்துள்ளார். இது ஒரு பருவகாலத்திற்கான பிரீமியர் லீக் போட்டிகளில் அதிகமான கோல்களை பெற்ற லுயிஸ் சுவாரெஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அலன் ஸெய்ரர் ஆகிய வீரர்கள் வரிசையில் முன்னிலையில் உள்ளது.

2017/18 ஆம் பருவகாலத்திற்கான சம்பியன் லீக் இறுதிப் போட்டிக்கு லிவர்பூல் அணி தகுதிபெற்ற போதும், அவ்வணியின் நட்சத்திர வீரரான முஹமட் சலாஹ்வால் 25 நிமிடங்கள் மாத்திரமே விளையாட முடிந்தது.

சம்பியன் லீக் போட்டிகளில் 10 கோல்களை தனது அணிக்காக பெற்றுக் கொடுத்துள்ள இவர், எகிப்து கால்பந்து அணியை உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தகுதி பெறச் செய்வதற்கும் முக்கிய பங்கு வகித்தார்.

  • கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்த்துக்கல்ரியல் மெட்ரிட் கால்பந்து கழகம்)

போர்த்துக்கல் அணித்தலைவரும், ரியல் மெட்ரிட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து வரலாற்றில் UEFA யின் சிறந்த வீரருக்கான விருதை மூன்று முறை (2014, 2016, 2017) வென்ற ஓரே வீரராக திகழ்கிறார்.

>> ரியெல் மெட்ரிட் வாழ்வை முடித்து ஜுவண்டஸுடன் இணைந்தார் ரொனால்டோ

மேலும், இவர் கடந்த பருவகாலத்தில் ரியல் மெட்ரிட் அணி சார்பாக விளையாடி, UEFA சம்பியன் கிண்ணம், UEFA சுப்பர் கிண்ணம், ஸ்பானிய சுப்பர் கிண்ணம் மற்றும் கழகங்களுக்கிடையிலான உலகக் கிண்ணம் என்பவற்றில் கிண்ணங்களை வென்றுள்ளார்.  

வரலாற்றிலே 5 முறை UEFA வின் சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ள முதல் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கடந்த பருவகாலத்தில் சம்பியன் கிண்ணத் தொடரின் 13 போட்டிகளில் விளையாடி 15 கோல்களை பெற்றுள்ளதோடு, அதி கூடிய கோல்களை பெற்ற வீரர்கள் வரிசையில் முன்னிலை வகிக்கின்றார்.

இப்பருவ காலம் முதல் ஜுவன்டஸ் கழகத்துடன் இணைந்து கொண்டுள்ள இவர், கடந்த பருவகாலத்தில் லா லிகா சுற்றுப் போட்டிகளில் ரியல் மெட்ரிட் அணிக்காக 26 கோல்களை பெற்றுக் கொடுத்தார். மேலும் பிஃபா உலகக் கிண்ணப் போட்டிகளிலும் தனது தனித்துவத்தை காட்ட தவறாத இவர், ஸ்பெயின் அணிக்கெதிரான போட்டியில் ஹட்ரிக் கோல் ஒன்றையும் பதிவு செய்தார்.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<